இனி நட்பாய் நாம் இருப்போம்
இனிநட்பாய் நாம்இருப்போம்
------ இன்பங்கள் நமைச்சேரும் !
நனிமிகுந்த நட்பினாலே
------- நாட்டினிலே வாழ்ந்திடலாம் !
பனிபோன்ற திரைவிலக்க
------ பாசபந்தம் அறிந்திடலாம் !
கனிபோன்ற கண்களிலே
------ கனிவுவரும் தாமாக !!!!
காட்டினிலே வாழ்ந்தாலும்
------ கருமேகம் சூழ்ந்தாலும்
நாட்டினிலே வாழ்ந்தாலும்
------ நல்லறத்தில் சேர்ந்தாலும்
ஏட்டினிலே எடுத்தியம்பும்
------- எத்திக்கும் நட்புதனை
வாட்டமின்றிக் கைக்கொள்வோம் !
------ வந்திடுமே மகிழ்ச்சியுமே !!!!
நாயாக இருந்தாலும்
------ நரியாக இருந்தாலும்
சேயாக இருந்தாலும்
------- சேர்ந்திடுவோம் ஒன்றாக
தாயுடனே கன்றாக
------- தரமிக்க நட்புநெறி
வாயாரச் சொல்லிடுவோம்
------- வளமுடனே வாழ்ந்திடுவோம் !!!
நேசமுடன் வாழ்வதற்கு
------- நேர்மையான நெறிபற்ற
பாசமுடன் அனைத்துயிரும்
------- பல்கியுமே பெருகிவிடும்
வாசமுடன் இருப்பதற்கு
------ வாடாத நட்புவேண்டும் !
காசுபணம் தேவையில்லை
------ கண்ணியத்தின் நட்புமுன்னே !!!!
நட்பாக வாழ்ந்தாலே
------- நண்பர்கள் சேர்வார்கள்
கட்டுமரம் இணைவதுபோல்
------- காலத்தில் நட்புகளும்
விட்டுவிட்டுப் போகாது
------- விலகாது பாதுகாப்பர் !
மட்டில்லா நட்புதனில்
------- மலரட்டும் இனிவாழ்வு !!!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்