நாம் தமிழர்

என்ன உண்டு உம் தமிழில் என்றியம்பும் மூடர்காள்
இன்ன இல்லை என்றெமக்கு எடுத்தியம்ப வல்லீரோ

அண்டத்தோற்றம் அகிலந்தன்னை
ஆய்ந்தறிந்து சொன்னவன்
பிண்டத்திலும் இயக்கம்தன்னை
பிரித்தறிந்து கண்டவன்

பஞ்ச பூத தத்துவம் பகுத்தளித்த வித்தகம்
நெஞ்சந்தானே ஆய்வகம் அவன்
நிறுத்தும் மூச்சு சூசகம்

ஆரடா முதன் முதலில் அகிலத்தோற்றம் சொன்னவன்
பாரடா நற் சான்றுரைக்கும் பரிபாடல் நூலறிந்து
தேறடா நீ நெஞ்சகத்தில் தெரிந்த உண்மை தானறிந்து
கூறடா இக் குவலயத்தோர் கொஞ்சு தமிழ் உணர்ந்திட

ஞாயிறுதான் நடுவம் அதை நகரும் கோள்கள் சுற்றுமென
பாயிரத்திலே உரைத்து படிப்பினை யளித்தவன்
வாயிருந்து மொழிகள் பேசி வாழும் மாந்தர் யாவர்க்கும்
தாயொருத்தி தானடா தமிழன்னை என்று கூறடா

வார ஏழு நாட்களை வகைப்படுத்திப் பெயரமைத்து
கூறவந்தப் பங்கினைக்குறித்த புறப்பாட்டில் ஐயம்
தீர நீயும் படித்தறிந்து தெளிந்துகொள்வாய் சிந்தையுள்
மாறச்செய்யா உண்மையை மறுக்கமா விஞ்ஞானமே

தேகம் தோன்றும் நோய்களைத் தெரிந்து சொன்ன காரணம்
வாதம் பித்தம் கபமென வகைப்படுத்தி உணர்த்தியே
யூகமின்றி உறுதியாய் உரைத்தசித்த மருத்துவம்
போகும் நோய்கள் யாவுமே புரிந்து கொள்வீர் மாந்தரே

உலகமது உருண்டையென்று உரைத்தனன் நம் வள்ளுவன்
கலகமது வேண்டாம் நீ கண்டு படி குறளைத்தான்
விலகுமது ஐயம் இனி வீணுரைத் தவிர்த்துதான்
பழகுதமிழ்ப் படித்துணர்ந்து பாரினில் பரப்புவோம்

ஓரறிவு உயிரதனின் தோற்றமும் விளக்கியே
ஆறறிவு வகைப்படுத்தி ஆக்கிய தொல்காப்பியம்
ஆரறிந்து சொன்னதுண்டு அயலகத்து நூல்களில்
பாரறியச் செய்குவோம் பைந்தமிழ்ப் புகழ்தனை

கல்லுக்குள்ளே தேரையுண்டு கணித்தறிந்த சிறப்பியும்
உள்ளுக்குள்ளே மூச்சடக்கும் யோகம் தந்த சித்தரும்
சொல்லுக்குள்ளே சக்தியுண்டு சொல்லிவைத்த தந்திரம்
தெள்ளுதமிழ் மொழியில் தானே தெரிந்துணர்ந்து கொள்ளுவாய்

ஏரிகுளம் வெட்டிவைத்து இயற்கயான பயிர்வகை
மாறிமூன்று போகம் செய்து விளைத்திட்ட நற்பண்டம்தான்
பேரிடர் நிகழ்ந்தபோது பகிர்ந்தளிக்கும் பண்பினை
பாரினுக்குணர்த்திய நல் பழமைவாய்ந்த தமிழ் குடி

எண்வகை மெய்ப்பாடுகள் இயம்பிடும் தொல்காப்பியம்
மண்வகைத் தரம்பிரித்து ஐந்திணைகளாக்கியே
தன்வகைத்தான் வாழ்வதற்கு காலநேரம் வகுத்ததே
வன்பகைப்போர் மூளும்போதும் சூடும் மாலை உரைத்ததே

எண்ணளந்து எழுத்தளந்து இயம்பியதும் எங்ஙனம்
மண்ணமர்ந்து கண்ணைமூடி வானை ஆய்ந்ததெங்ஙனம்
விண்ணளந்து மீன்கள் கண்டு குறித்து வைத்ததெங்ஙனம்
முன்னவர்தான் கண்ட உண்மை விந்தையிலும் விந்தையே !

எழுதியவர் : அசோகன் (5-Feb-17, 7:42 pm)
சேர்த்தது : சாலூர்- பெஅசோகன்
Tanglish : naam thamizhar
பார்வை : 131

மேலே