எனை மீட்ட வருவாயா

தென்னையிளம் கீற்றினில் தவழும் தென்றல்
அன்னப் பறவையின் மெல்லிய சிறகாய்
கொடி இடையாள் தேகம் தீண்டுகையில்
துடிக்கும் நெஞ்சில் துளிர்க்கும் உன்முகமே......

சிற்றிதழ் அவிழ்ந்து குறுநகை மலர்கையில்
கொற்றவை மைந்தன் உன்குரல் கேட்டு
அற்றைத் திங்கள் கார்முகில் கிழித்து
இற்றை வதனம் பொன்னொளி வீசுமே......

பூவிதழ் அமரும் தேனீயாய் நீயென்றன்
நாவினில் சுரக்கும் அமிழ்தம் பருகினால்
தாவிடும் மனமும் கானகத்தின் மான்களாய்
தூவிடும் பனிமழை இதயமதை நனைக்குமே......

மடலுரிந்து நோக்கும் கமல விழிகளில்
தடம் பதிக்கும் நின்னழகு நிழல்தனில்
அடர்வனம் விழும் சிறு தீப்பொறியாய்
சுடர்மிகு நெகிழ்ச்சி உள்ளந்தனில் பொங்குமே......

விரும்பும் பூமயில் நின்னை அழைக்கிறேன்
வருவாய் விரைந்து என்னுயிர் காக்கிறேன்
சுருதி இழந்து புழுதியுண்ட வீணையாய்
வருந்தியும் தவிக்கிறேன் உன்றன் நினைவிலே......

கல்லினுள் ஈரமாய் நாளுமிங்கு கசிந்து
சொல்லில் இறைவனை நினைந்து தொழுது
மன்னன் கழுத்தில் மாலைதனைச் சூடவே
என்னகம் தவத்தில் கற்சிலையாய் நிற்கின்றதே......

எழுதியவர் : இதயம் விஜய் (13-Feb-17, 10:41 am)
பார்வை : 156

மேலே