விடியல்
விடியலில் பூக்காத மல்லி மலர்கள்
உன் மாலை வேளையை நோக்கி காத்திருக்க,
பூத்திருந்த நாட்களில் நீ காணாமல் போனதேன்.
வட்டமிட்ட சில தேனீக்களும் உனக்கு சொந்தம் என்று தெரிந்து விலகிதான் போனது.
வாடிடும் நாள் தேடி வராது, என் நாட்களை எண்ணி கொண்டிருக்காதே.
சிட்டுகள் சிறகடித்து என் கண்ணீரை உலர்த்த முயற்சித்து தோற்க,
கார்மேகக் கூட்டமும் கூடி நின்று என் வேதனை சொல்லும்.
ஆதவன் என்று சொல்லிக்கொள்ளாதே உன் ஆணவம் தான் தெரிகிறது,
நீ வராமல் நான் மலர்ந்து களிப்பேன் என்று எண்ணமோ.
நேசங்கள் வேறு, ஆனாலும் உன் வரவுக்காக காத்திருந்து களைத்துப் போனேன்.
பொறுத்திருந்து நீ வர என் ஆயுள் நூறில்லை,
ஒரு நாள் வாழ்வாயினும் உன் உறவாய் வீழ்ந்து மரணிக்கவே ஆசை.