நீ ஏன் மறந்தாய்
வேப்பமர கிளைகளிலே அழகான கூடு கட்டி!
கரிய இன காக்கையொன்று
முட்டையிட்ட கதையினை
உன்னிடம் சொல்ல நினைத்திரிந்தேன்!!!
என் நீள்கின்ற இரவுகள்..
உனக்கு எழுதிய கவிதைதனை
பத்திரமாய் எடுத்துவைத்தேன்!!!
உனக்கென்னமா?!!
உன் புருசனுக்கு வெளிநாட்டு வேலை!
என தினமும் பொறாமையில் முகம் கழுவி!
அனல் மூச்சில் என்னை கருக்கும்!
பக்கத்து வீட்டின் நிகழ்வுகளை மனதார ஒதுக்கிவைத்தேன்!!
பணம் இருந்தா போதுமா?
உன்னை பாத்துக்க வேணாமோ?
பாரு என்னமா இளைச்சிட்ட?
பரிதாப போர்வையில் பார்வையாலே
என்னை துகிலுரிக்கும் வக்கிர மனிதர்களை
தலைக்குனிந்தே கடந்து வந்தேன்!!!
உன் சுகம் நானறிய, வாட்ஸ் அப்,ஸ்கைப் இருந்தென்ன பயன்???
உன் கரங்கள் நான் பிடித்து பேசிடதான் கூடுமோ????
என் மன ஆசைகளை உன்னுடன் நான் சொல்ல
நீ வர காத்திருந்தேன்!
நீயும் வந்தாய்!
உறவுகளின் வாய் மூட!
நாம் விருந்தாளி வேடமிட்டு
உன்வீட்டு உறவுகளில் சில நாள்!
என் வீட்டு உறவுகளில் சில நாள்!
இதோ மீண்டும் உன் பயணம்!
லகரங்களைத்தேடி!!!!
உன்னிடம் பேசாத வார்த்தைகளும்,
நீ படிக்காத கவிதைகளும்
என்னை கைத்தட்டி நகைக்கிறதே!!!
அதோ வேப்பமர கூடு!
பறவைகளின் இட மாற்றத்தால்
வெறுமையாய் இருக்கிறது!
என்னைப்போல!!!!