சூரியோதயம் - சிறுகதை

சூர்யோதயம் சிறுகதை

கண்மணி.......... கண்மணி...... அழைத்துக்கொண்டே வந்தான் மாதவன். இதோ……. வந்து…….ட்டேன்…… வெலவெலத்துப் போன முகத்துடன் பதட்டமாக, மாவு அறைத்த கையைக்கூட கழுவாமல் வேகமாக ஹாலுக்கு வந்த கண்மணி, என்…….னங்……க..............

பளார்...... என்ற ஓசை.....ஓவென கதறி கீழே சுருண்டுவிழுந்த கண்மணி, பொங்கிப்பாய்ந்துவரும் கண்ணீரைக்கூட வெளியே கொட்ட திராணியற்றவளாய், பயத்துடன் மெல்ல எழுந்தாள்.

என்னடீ! உம் மனசுல என்னதான் நினைச்சிக்கிட்டிருக்க ம்........சொல்லித்தொலை.

வந்து...... அது.......... அது.........ஒண்ணுமில்லீங்களே...........

வர வர உம் போக்கே சரியில்ல. நானும் பாத்துக்கிட்டேதான் வரேன். இப்படியே இருந்த.... நான் மிருகமாயிடுவேன் பாத்துக்கோ. எதோ ஆதரவற்ற அனாதக் கழுத ஆச்சேன்னு உன்னப்போயி கல்யாணம் செஞ்சுகிட்டேன் பாரு என்ன...........

இப்பொழுதெல்லாம் மாதவன் எதற்காகத் தன்னிடம் இப்படி எரிஞ்சிவிழறார் என்பதே கண்மணிக்குப் புரியவில்லை. எதிர்த்துக் கேட்கவும் வழியில்லை. ஏனென்றால் வேறு போக்கிடமும் இல்லை. மகன் உதயகுமாரும், மகள் இளவஞ்சியும் பெரியவர்களாகிப் பணியில் அமர்ந்த பிறகும் கூட அவளால் தன்னிச்சையாக நிமிர்ந்து செயல்பட முடியவில்லை. ஏனென்றால் அவர்களிடமும் கூட மனம் விட்டுப் பேச முடியவில்லை.

யாரிந்தக் கண்மணி? கண்ணின் மணிபோல் கருத்தாய் வளர்க்கப்பட வேண்டியவள். ஆனால் அப்படியா? பிறந்தவுடனே பெற்ற தாயை இழந்து, துரதிருஷ்ட சாலி, தொடகாலி என்றெல்லாம் ஊராரின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் இடமளித்தவளாயிற்றே!

பாவம் அவள் என்ன செய்வாள்? எல்லாம் விதியின் விளையாட்டைத் தவிர வேறு என்னவாக இருக்க இயலும்?

திருமணத்திற்கு முன்பாகவே ஒரு கயவனால், காமுகனால் சூறையாடப்பட்டு, சின்னாபின்னமாக்கப்பட்ட பொன்னம்மாவின் மகளல்லவா இவள். வேதனை தாங்க இயலாத பொன்னம்மா இவளை இந்த உலகிற்கு நல்கிய கையோடு வாழ வழியின்றி தன் பச்சிளம் குழந்தையைத் தவிக்கவிட்டுத் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டாள்.

கொடூரனானாலும், காமுகனானாலும், கயவனானாலும் அவனுக்குள்ளும் ஈரம் இருந்ததால், பேரெழில் கொண்ட பிஞ்சுக் கண்மணியை அன்புடன் பேணிவளர்த்தான். அவளுக்காக மறுதாரம் செய்துகொண்டான். வந்தவளோ கண்மணிக்குத் தாயாக இல்லாமல் பேயாக இருந்து வாட்டி வதைவதைத்தாள். அப்பப்பா....... அவள் இழைத்த கொடுமைகளைக் கண்டவர்கள் அனைவரும் இதயம் பிளக்கும் வண்ணம் கதறினர். ஏதேனும் கேட்கச் சென்றால் இது எங்கள்குடும்ப வி‌ஷயம். நீங்கள் யார் இதில் தலையிட? என்று அவள் வாயிலிருந்து வரும் மடைதிரண்ட வெள்ளம் போன்ற அமுத மொழிகளை(ஏச்சுக்களை) தவிர்க்கவே அனைவரும் பின்வாங்குவார்கள்.

இப்படியே கண்மணியின் நாட்களும் நகர்ந்தன. காலவெள்ளத்தில் குடிகாரத் தந்தையும் பலியானார். அவளின் கொடூரத்தாயோ இவளை நிர்கதியாக விடுத்து, வேறொருவனுடன் ஓடிவிட்டாள். கண்மணியின் மீது இரக்கம் கொண்ட சிலர் அவளை ஒரு அனாதைக் காப்பகத்தில் விட்டனர். அங்கும் விதி அவளை விரட்டியது.

காப்பகத்தில் உள்ள சிலரும் அவளைக் கர்ணக் கொடூரமாக நடத்தினர். நித்தம் நித்தம் சாவோடு போராடிய அவளுக்கு வாழ்வுகொடுக்க முன்வந்தவன் தான் இந்த மாதவன்.

அவன் நிலை என்னதெரியுமா? பல லட்சங்களுக்கு அதிபதி. ஏற்கனவே வசந்தா என்ற பெண்ணுடன் திருமணம் புரிந்து பலவருடங்கள் வாழ்க்கை நடத்தி, உதயகுமாரையும், இளவஞ்சியையும் ஈன்றவன். எதிர்ப்பாராத வசந்தாவின் இழப்பு மாதவனை நிலைகுலையச் செய்ததில் வியப்பேதும் இல்லை. அவளின் நீங்கா நினைவுடனேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணினான். வேறு வழியின்றி தன் அன்புக் குழந்தைகளுக்காக, அதுவும் அவ்விருவருமே வசந்தாவின் சாயலில் இருந்ததனால் அரைமனதுடன் உயிர்வாழ்ந்து வந்தான். ஏனெனில் அவ்விருவரும் ஊரே மெச்சும்படி வாழ்ந்த வாழ்க்கை அப்படி.

இதற்கிடையில் தான் தங்கள் பெற்றோர் முத்துமணி, மற்றும் செண்பகத்தின் கட்டாயத்திற்கு இணங்க வேறு திருமணத்திற்கு அரைமனதுடன் சம்மதித்தான். இந்நிலையில் தான் மாதவனின் பெற்றோர் தாங்கள் கோவிலில் சந்தித்த கண்மணியை மாதவனின் விருப்பமின்றி அவனுக்கு மணம்முடித்தனர். திருமணம் செய்வித்த கையோடு அவர்கள் காசி ராமேஸ்வரம் என்று தலயாத்திரைக்கும் சென்றுவிட்டனர் தங்கள் இறுதி நாட்களைக் கழிக்க.

பிறந்த இடத்திலும், புகுந்த இடத்திலும் நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளை எண்ணிய கண்மணிக்கு ஒருநாள் பொழுது விடிவதே மலைப்பாக இருந்தது.

அம்மா............... என்ன பகல்கனவா? என்று சிடுசிடுத்த மகன் உதயகுமாரின் அதட்டல் கண்மணியை மீண்டும் இவ்வுலகிற்கு அழைத்து வந்தது.

என்னப்பா? டிபன் பாக்ஸில் அப்பொழுதே சாதம் போட்டுவெச்சுட்டேனே!

அத யார் கேட்டா? என்னோட பின்க் கலர் ஷர்ட்ட ஏன் அயர்ன் பண்ணல? ம்....

என்னப்பா நீ காலையில் ஆரஞ்சு கலர் ஷர்ட்ட தானே அயர்ன் பண்ணச் சொன்னே? இப்ப....

அது அப்போ... இப்ப இது ம். உடனே தரயா? இல்ல.. அப்பாக்கிட்ட.....

வேண்டாம்ப்பா.... இதோ.. இப்ப ஒருநொடியில் தரேன் என்று வழிந்தோடும் வியர்வையைக் கூட துடைக்க நேரமின்றி, வேகமாக உள்ளே சென்று, சென்றவேகத்தில் திரும்பினாள் பின்க் கலர் ஷர்ட்டுடன்.

அப்பாடி.... ஒருவழியாக உதயனை பணிக்கு அனுப்பியாச்சு என்று மேல்மூச்சு வாங்க சிறிது அமரலாம் என்றவளுக்கு, படுக்கையறையிலிருந்து காலை எட்டு மணிக்கு வந்த இளவஞ்சியின் அழைப்பு கம்பீரமாக....

அம்மா!..... அம்மா!....

எங்க....மா....? பெட் காஃபி?

இருவது வயதைத்தாண்டிய இளவஞ்சியை நோக்கி,

இதோ வந்துட்டேண்டா செல்லம்.

இதயம் படபடக்க கையில் இருந்த காஃபியை விடக் கொதிப்பாய் இருந்த மனக் குமுறல்களை அடக்கிக் கொண்டு வேகவேகமாக எட்டி நடந்தாள்.

அதற்குள் அடுத்த கட்டளை சுடுதண்ணி, டவல் எல்லாம் ரெடியா?

பொங்கிவழிந்த கண்ணீரைத் முந்தானையால் துடத்தவாரே, ஓ எல்லாம் தயாரயிருக்குடா செல்லம். நீ மீட்டிங்குக்கு போகவேண்டிய தேவையான எல்லாப் பொருள்களுடன் கைப் பையில் டிஃபனும் தயார்டா.

சரி... சரி... ரொம்ப வழியாதே.... என்று கூறிவிட்டு அவளை சிறிதும் சட்டை செய்யாமல் வந்த ஆட்டோவில் ஏறி ‘அன்னையின் பெருமை’ என்ற தலைப்பில் அலுவலக மீட்டிங்கில் பேசப்போனாள் இளவஞ்சி.

சமபளமற்ற வேலைக்காரியான கண்மணி சிறிது காலத்திற்குள்ளாகவே படுத்தபடுக்கையானாள் கேட்பாரற்று.

அன்றுதான் கண்மணிக்கு சூரிய உதயம் ஆயிற்று ஏன் தெரியுமா அவள் கல்லறையில் நீங்காத்துயில் கொண்டதனால்.

கண்மணி: தோற்றம் 12.10.1990 மறைவு 14.01.2017 என்று பதிக்கப்பட்ட கல்லறையின் மீது அன்றுதான் உண்மையாக சிறிது கண்ணீர்த்துளிகளைச் சிந்தினான் மாதவன்.

எழுதியவர் : திருமதி ஸ்ரீ விஜயலக்ஷ்மி (24-Feb-17, 11:01 am)
பார்வை : 352

மேலே