அறப்போர் வென்றதும் ஆளும் போர் மூண்டதோ

புண்பட்டு புண்பட்டு பொறுத்திருந்த இளைஞரெல்லாம்
படையெனவே புறப்பட்டு வந்தார் அன்று!
பண்பாட்டைக் காப்பதற்கே பொங்கியெழுந்த கூட்டமது
பதறியெழ வைத்ததன்றோ அரசு தன்னை !
கண்கெட்டு குருடாகி தூங்கிவிட்ட அரசதுவும்
குற்றமெனும் உணர்வதுவும் சுடுதல் கண்டு
திண்டாடிப் போனதுவே ! தீர்வொன்று கண்டிடவே
செங்கோட்டை தான்சென்றார் ! உரிமை மீட்க !

தடைநீக்கும் செயலொன்றை சட்டத்தின் வழிநின்று
தேர்ந்தங்கு கண்டெடுத்து சட்ட மாக்கி
தடைபட்ட ஏறுதழுவும் விளையாட்டை தொடர்ந்தென்றும்
தமிழ்நாட்டில் நடத்திடவே உறுதி செய்தார் !
இடைப்பட்ட காலமதில் இலைமறைவாய் தோன்றிவந்த
ஆளுமையின் போட்டியினால் இன்னல் எல்லாம்
உடைபட்ட அணைகொண்ட வெள்ளமென ஆர்பரிக்க
உள்ளமெல்லாம் நொந்திங்கே அழுவு தன்றோ !

தண்டனைகள் பெற்றவர்கள் தலைமையேற்கத் துணிந்ததனால்
தமிழகமே தலைகுனிந்து நிற்கு தன்றோ ?
உண்மையெல்லாம் பணந்தன்னால் உறங்கிவிட பொய்மைகளோ
உறவோடு திரண்டுவந்து ஆளுதன்றோ !
கண்போன்று கடமையினைக் கருதாமல் உள்ளோரைக்
கண்ணியமாய் மக்களென்றும் கருத லுண்டோ ?
பண்பற்றார் பதவிக்காய் பல்லிளித்து கிடப்பதனால்
புண்பட்ட தமிழ்மக்கள் உயர்வ துண்டோ ?

மண்ணெடுத்து தன்தலையில் மதியின்றி போட்டுவிட்டு
மாண்பெல்லாம் மாளுதென்று வருந்த லாமோ ?
திண்ணையிலே படுத்தன்று தூங்கிவிட்டு இன்றிங்கு
சோதனையோ என்றெண்ணி கலங்க லாமோ ?
புண்பட்ட உள்ளமதில் புத்துணர்ச்சி ஊட்டிடவே
பகுத்தறிவு எண்ணமுடன் எழுந்து வாரீர் !
பண்பாட்டை காக்கின்ற படையெனவே எல்லோரும்
பாதையொன்று கண்டிங்கே வாரீர் ! வாரீர்

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (1-Mar-17, 7:59 pm)
பார்வை : 47

மேலே