பனை நண்பன்
பனை நண்பன்
=============
பாதி மரமேறிப் பக்குவமாய்ப் படமெடுத்து
பனைமரத்தின் பயனையெலாம் பார்புகழச் செய்தாயோ!
பலவித மரங்களிலே பனைமரம் போலாகுமா!
பிறர்வாழநீ வாழுமுன் குணத்துக்கது ஈடாமோ!
பெற்றோர் வளர்த்த பிள்ளைகூட உதவாதானால்..
வளர்க்காமலே நீவளர்ந்து பிறருக்கு உதவுகின்றாய்!
நண்பரைத் தேர்ந்தெடுக்க முக்குணத்தில் ஒன்றாக..
தென்னை வாழையோடு உன்குணமு மொன்றாகும்!
நண்பனுக்குகந்த குணமென உத்தமநண்பணுக்கு..உன்
பனைக்குணமே பெரிதென்றான் அர்த்தமுள்ளகவியரசன்!
முக்குணத்தில் சிறந்த சாத்விக குணம்பெற்று..
பூவுலகக் கற்பகத் தருவெனத் தாரணியில் புகழடைந்தாய்!
கயவர்களை இனம்கண்டு பனைமரத்தி லொருமுறை..
கட்டிவைத்து உதைத்தால் திருந்திவாழ வழியுண்டாம்!
நெட்டைப் பனையென்றும் நெடியமரமென்றும்..
நேர்மைக் கோர் உதாரணமாய் திகழுகின்றாய்!
பனைமரமேறிப் பரிசுப்பெற்ற வாலிப இளைஞனுக்கு..
பெண்கொடுத் தாருண்டென்ப தோர்க் காலமுண்டாம்!
பழுத்துக் கனிந்தால் பனம் பழமாகவும்..
பழுக்கா விட்டால் நுங்கெனவும்..பல்வகையில்
பித்தர்களுக்கு மருத்துவம் வேண்டா மவன்..
பித்தம்தெளிய யுன்பழம் கொடுத்தால் போதுமாம்!
உயிரின முண்ணக் கிழங்குவெல்லம் கருப்பட்டியென..
புல்லினத்தில்பிறந்து பேரினமாய் நின்று உதவுவாய்!
வெட்டி வீழ்ந்தாலும் வீணாகாமல்..உத்திரமாக..
கட்டிவாழும்எம் குடிலுக்கு வலிமை சேர்த்தாய்!
சித்தர்களின் சிந்தனைகள் சித்திரஎழுத்துவடிவமாக..
சிறந்த இலக்கியங்களுக்கு ஏடாகிப் படிவம்கொடுத்தாய்!
தமிழ் வளர்ச்சிக்கு உதவிய ஒரேமரமென்றும்..
மொழிக்குதவிய முதல் மரமெனவும்நீ உலகறிவாய்!
வெப்பக்கதிர் வீச்சைத் தணிக்க..விரிந்துபரந்த..
விசிறியாகி வெங்கதிர் தவிர்த்தாயோர் காலத்தில்..
மரம்தானனென இகழ்சொன்னா லதைமறுத்து..வீரமுடன்..
தனிமரமாய்த்தோன்றி மரமினத்துக்கு மங்காப்புகழ்சேர்த்தாய்!
காய்ந்து கயிறாகிநீ கால்நடையைக் கட்டினாலுமுன்..
கட்டுக்கடங்காப் பயன்புகழ் வாழிய வாழியவே!
மாநிலமரமென தமிழ்மரபை தமிழ்குடியைப் பறைசாற்றும்
பனைநண்பனுனை மானுடர்கள் நினையாத நாளில்லையே!