தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு நிழல் தேடி கவிஞர் இரா இரவி

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !
நிழல் தேடி ! கவிஞர் இரா .இரவி !
விழிகளை விற்று ஓவியம் வாங்கிய கதையாக
விறகிற்காக மரங்களை வெட்டி நிழல் தேடுகின்றனர் !
மரம் பூ காய் கனி நிழல் மட்டும் தரவில்லை
மானுடர் சுவாசிக்க நல்ல காற்றும் தருகின்றது !
மரம் என்பது மழைக்கான வரவேற்பு
மனிதர்கள் புரிந்து மரம் வளர்ப்பது சிறப்பு !
வார்தா புயல் சென்னைக்கு நிழல் தந்த மரங்களை
வேரோடு வீழ்த்தி மகிழ்ந்து சென்றது !
வீழ்ந்த மரங்களின் எண்ணிக்கையில் பன்மடங்கு
விரைவாக புதிய மரங்கள் நட வேண்டும் !
விளம்பரத்திற்காக மரங்கள் நட்டால் போதாது
வளரும் வரை தொடர்ந்து நீர் ஊற்ற வேண்டும் !
சாலைக்காக ஆலைக்காக என்று கண்டபடி
சாய்க்கின்றனர் அற்புத மரங்களை !
ஒரு மரம் வெட்டப்பட்டால் ஈடாக
உடன் பத்து மரங்கள் நடவேண்டும் !
நீதி மன்றங்கள் பதில் மரம் நடவேண்டுமென
நியாயத் தீர்ப்புத் தந்தாலும் மதிப்பதில்லை !
மரம் வளர்ப்பு என்பது அறம் வளர்ப்பு
மானிடர்கள் புரிந்து கொள்ள வேண்டும் !
காடுகளை அழித்து வீடுகள் கட்டுவதை
கட்டாயம் உடன் நிறுத்திட வேண்டும் !
தனியார் அரசாங்கம் யாராக இருந்தாலும்
தனி ஒரு மரம் வெட்டும் முன் பத்து மரம் நடுங்கள் !
மரம் வெட்டுதலை கொலைக் குற்றமாக்கி
மரம் வெட்டுவோருக்குத் தண்டனை தர வேண்டும் !
பச்சையம் காக்க பசுமை காக்க நமது
பூமியில் மரங்களைக் காத்திட வேண்டும் !
மரங்களை அழிக்க அழிக்க இயற்கை
மனிதனை அழிக்கும் என்பதை உணருங்கள் !