கனவுக்கு ஒர் சமர்ப்பணம்

கனவுக்கு ஓர் சமர்ப்பணம்

கருவினில் உயிர் உருவாகி

வளர்ச்சி அடைகையிலேயே

கற்பனை குதிரைக் கட்டவிழ்ந்து

கனவுலகில் பயணிக்குமாம்.

அவ்வாறு பிறக்கும் ஒவ்வொரு உயிரும்

ஆயிரமாயிரம் கனவுகளுடன் அகிலத்தில்

அவதாரம் செய்கிறதாம்.

அவ்வுயிர்களைப் போல்தான் நானும்

பற்பல கனவுகளுடன்
பாரினில் கால் பதித்தேன்,

சற்றே ஆர்ப்பரிப்போடும் ஆரவாரங்களோடும்!

பத்து மாதம் சுமந்து எனைப் பெற்று எடுத்த

பத்தினி தெய்வம் என் அம்மாவிற்கு ,

நான் சேவை செய்யும் செவிலியாக

வேண்டும் என்று கனவு!

தூக்கி வளர்த்து உற்ற தோழனாய்

உடனிருந்த என் அப்பாவிற்கு,

நான் அகிலம் ஆளும் ஆட்சியராக

வேண்டும் என்று கனவு!

பாசம் பொழியும் தாத்தாவிற்கும் பாட்டிக்கும்

நல்ல மணவாளனுக்கு மணமுடிக்க

வேண்டும் என்று கனவு!

கனவுகள் பல்வேறாயினும்

கருத்து சுதந்திரத்துடனே
வளர்க்க பட்டேன் நான்!

அம்மாவின் சேலை முந்தானைக்குப் பின்

அழுது கொண்டே நின்றிருந்த அறியாப் பருவத்தில்

ஆசிரியராக வேண்டுமென கனவு!

பகுத்தறிவு பக்குவப்பட்ட இளம்பருவத்தில்

கல்பனா சாவ்லா போல் விண்ணுலகில்

கால் பதிக்க வேண்டு மென கனவு!

பதினாறு வயதில் , வாழ்க்கை பாதையை

தேர்ந்து எடுக்கப் போகும் அற்புத ஆண்டில்,

மதிப்புமிகு மருத்துவராகி ஏழைகளுக்கு

இலவச சேவை செய்ய வேண்டுமெனக் கனவு!

மதிப்பெண்ணிற்குப் பின் ஓடிக்கொண்டிருக்கும்

பந்தயத்தில் கலந்து கொண்டேன் நானும்!

பணச்செலவு , வீடு மாற்றம், கடின உழைப்பு

பதற்றம் , தலைவலி இவைகளுக்கு இடையில்

வளர்ந்து கொண்டிருந்தது என் கனவும்!

வியக்கத்தகு மதிப்பெண் சாதி ஒதுக்கீடு

என்னும் சாபத்தில் சாம்பலாகிப் போக

ஏமாற்றத்தில் உடைந்தது மனம்!

இலட்சியத்தை அடைய வேண்டுமாயின்

இலட்சங்களில் பணம் வேண்டுமாம்!

பணம் மட்டும் போதாதென

பரிந்துரை மடல் வேண்டுமாம்!

மதிப்பற்ற மதிப்பெண்களை மலர்களாய்த் தூவி

இறுதியில், இலக்கிற்கு இறுதி சடங்கு செய்து ,

இதயமெனும் இடுகாட்டில் புதைத்து விட்டேன்.

உடலைப் புதைத்து விடலாம்.....

உயிரை என்ன செய்வது??

உள்ளுக்குள் ஒளிந்திருந்து என்னை

ஓயாமல் உசுப்புகிறதே...

கனவே , கனவே உன் ஆன்மா சாந்தியடைய

கவிதை எழுதி சமர்பிக்கிறேன்!!!

எழுதியவர் : ரம்யா நம்பி (15-Mar-17, 11:38 pm)
சேர்த்தது : ரம்யா நம்பி
பார்வை : 597

மேலே