ஆவதும் பெண்ணாலே

கருணைத் தெய்வத்தின் கருப்பை முளைத்து
கருவினில் உயிராகி கள்வடியும் பூவாகி
அரும்பும் கொடியில் அமிழ்தம் குடித்து
இருளகற்றும் நிலவாய் இப்புவி பிறந்தாள்......

அன்பின் வளர்ச்சியில் அன்றிலுக்கு உவமையாய்
அன்னத்தின் சிறகென அகமும் வெண்மையாய்
மென்மையின் இலக்கணம் மெய்சிலிர்க்கும் தன்மையாய்
இன்னலும் விலகிடும் இனியவளின் மொழியால்......

வஞ்சம் என்பதை வாழ்வினில் தொலைத்து
நெஞ்சத்தின் ஒளியில் நேர்வழி நடந்து
பஞ்சமது வந்தாலும் பால்தரும் பசுவாய்
வஞ்சியிவள் உழைப்பினில் வளம் தந்திடுவாள்......

மனையாள் கோலத்தில் மறுவீடு சென்றங்கு
பனையாய் ஒத்தையில் பாவங்கள் சுமந்தும்
சுனையாய் ஊற்றெடுத்து சொந்தங்களைக் குளிர்வித்து
மனையின் புகழ்தனை மங்காது காத்திடுவாள்......

உற்றவன் உடலுறுதி உடைந்து போகையில்
கற்று உயர்ந்த கல்வியின் துணையால்
பெற்றெடுத்த குழந்தைக்கு பெருமை சேர்ந்திட
நற்றமிழ் பயிற்றுவித்து நலமுடன் வளர்த்திடுவாள்......

நிலமகள் போலிங்கு நீங்காத பொறுமையில்
குலத்தின் காவலாய்க் குடும்பத்தின் நிதியரசியாய்
அலர்ந்தப் பூக்களின் அழகான நறுமுகையில்
உலக உருண்டையை உளத்தால் சுழற்றிடுவாள்......

எழுதியவர் : இதயம் விஜய் (16-Mar-17, 8:20 pm)
பார்வை : 575

மேலே