காப்பியமும் கோப்பியமும் --- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

கண்ணகியின் கதறலுமே மன்னன்முன்
------ காட்சியாக நின்றிடவும் சபைதனிலே
பெண்ணிவளின் கண்ணீரால் மதுரையுமே
------- பெரியதொரு வெள்ளமாக மாறிடவும்
விண்ணுலகின் தேவதையோ இவளென்றே
------- விளங்காத மக்களுமே கவலையுற
மண்ணுலகில் நீதிவேண்டிக் குரல்கொடுக்கும்
------ மாசற்ற கற்புநெறி மங்கிடுமோ !!!


பரத்தையரை நாடிசெல்லும் மன்னவனை
------- பாவையிவள் மன்னித்தும் ஏற்றிடவே
விரதமிருந்து பெற்றவளாம் பத்தினியே
------- விலகாது கைப்பிடிக்க எண்ணியவள்
விரல்பிடித்தக் கணவனவன் திருந்தியுமே
------- விரைந்துவர இன்பத்தைக் கண்டவளாம்
சிரம்தாழ்ந்து நாணமோடு நின்றபாவை
------ சிதைக்குள்ளே போனவனைக் காண்கின்றாள் !


நீதிநெறி மாறியதால் பாண்டியனும்
-------- நிலைகுலைந்தே சாய்ந்தானே மண்மீதில் .
பாதிக்கப் பட்டவளோ புரியாமல்
------- பரிதவித்துக் கணவனுடன் மாண்டாளே
சாதிக்கப் பிறந்தவராம் பெண்களுமே
------- சமுதாயம் ஏற்கட்டும் நீதியையும் .
வாதிட்டப் பெண்மகளோ பத்தினியாம்
------- வாழ்ந்தவள் வீழ்ந்தாளே பத்தினியாம் !!!


காப்பியத்தின் கதையிதுவாம் கேட்பீரே
------ காலத்தால் அழியாது பார்ப்பீரே !
கோப்பியமும் எடுத்துரைக்கும் நீதிதன்னை
------- கோபமுமே நியாயமென்றால் ஏற்பீரே !
தீப்பெட்டி வேண்டாமே எரித்திடவும்
------ தீயாக சுட்டெரிக்கும் கற்புந்தான் !!
கைப்பொம்மை யானவரா பெண்டிருமே
------ காப்பாற்று வாழ்வினிலே உயரவேண்டின் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (17-Mar-17, 4:43 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 79

மேலே