பட்டிக்காட்டானின் கல்லூரி அனுபவம்
பிறந்தது கிராமத்தில் படிப்பறிவில்லாத பெற்றோர்களின் அன்பு மகனாக..
வளர்ந்தது கிராமத்தில் அனைவரையும் சொந்தக்காரர்களாய் மதிக்கும் மனநிலை கொண்டவனாக...
படித்தது கிராமத்தில் பள்ளி படிப்பை தமிழ்வழியில்..
ஆம்...
எனது கிராமம் தான் அது...
பட்டிக்காடென்பர் அதைக் கண்ணால் கண்டோரும்... காண்போரும்...
அப்பா, அம்மாவிற்கு மூன்று குழந்தைகள் பிறந்தாலும் அதில் நான் மட்டுமே அவர்களுடன் வாழ்ந்து, அவர்களுடைய முழு அன்பையும் பெறும் பாக்கியம் பெற்றேன் தனியாளாய்...
ஆண், பெண் நட்பு பற்றி ஏதும் அறியாத சூழல்...
பெண்களிடம் பேசினால் தனது சகோதரிகளாக நினைத்து பேசும் அந்த பட்டிக்காட்டு நாகரீகம்...
எனது தாய், தந்தை எனக்கு கற்றுத் தந்த முதல் நாகரீகம் அது...
வெளி உலகம் தெரியாத பிள்ளையாய் பள்ளி வாழ்க்கை முடித்து,
ஒரு வருட இளைவெளிக்குப் பின் நுழைந்தேன் கல்லூரி வாழ்க்கையில்...
முழங்கை வரை பெரிய சட்டைகள்,
எண்ணெய் பாத்திரத்தில் தலைவிட்டு எடுத்தாற்போல் தலையில் அப்பிய எண்ணெய்,
அசடு வழியும் முகம்,
புதிய சூழல் கண்டு வியப்பில் ஆழ்ந்த, சற்று பயங்கலந்த கண்கள் என்ற பல அடையாளங்களைத் தாங்கிய பட்டிக்காட்டானாய் நானும் இன்சினியராகப் போகிறேனென்ற ஆசையில் சென்றேன் கல்லூரி வாசம்...
கல்லூரியில் நுழைந்த முதல் நாளே நல்ல தொடக்கமாய் அமைந்தது, யாவரும் கூட்டம் கூட்டமாய் திரிய, நான் மட்டும் தனிமையிலே எண்ணெய் வழியும் மூஞ்சியுடன் பட்டிக்காட்டானாய்...
உடன் பயிலும் மாணவிகளையெல்லாம் சகோதரிகளாக எண்ணியிருந்தேன்...
ஆண், பெண் நட்பு அறியாதவனாகிய நான் அங்கு பல நட்புகளைக் கண்டு வியந்தேன்...
நாட்களும் நகர கல்லூரிப் பாடங்கள் முழுவதும் ஆங்கிலத்தில் இருந்ததால் சற்று கடினமாய் இருந்தது...
பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் என்னிடம் இருந்ததில்லை...
அதை வெறுத்தேன்..
ஒரு நாள் என்னுடன் பயிலும் மாணவி ஒருத்தி தனக்கு பிறந்தநாளென முதல் ஆளாக என்னிடம் இனிப்பை நீட்ட, மனதில் தோன்றும் எதையும் மறைக்கும் குணமில்லா நான், அவளிடம், " என்ன சாதித்துவிட்டாயென்று பிறந்தநாள் கொண்டாடுகிறாய்?? ", என்று சபை நாகரீகமில்லாத பட்டிக்காட்டானாய் கேட்க, அதைச் சற்றும் எதிர்பாராத அந்த மாணவி அப்படியே இனிப்புப் பெட்டியை மூடி வைத்துவிட்டு அவர் இருப்பிடத்தில் இருந்து அழ ஆரம்பித்துவிட்டார்...
நான் கேட்ட கேள்வி தவறா? சரியா? என்றெல்லாம் நானறியேன்...
அந்த மாணவிக்கு ஒரு குறிக்கோளைக் கொடுக்குமென்ற எண்ணத்தில் நான் கேட்டேன்...
ஆனால், அது எதிர்மறையாகி, மற்ற மாணவ, மாணவிகளிடம் என்மீது வெறுப்பை உண்டாக்கிவிட்டது...
அதன் பிறகு அந்தப் பெண் தனது பிறந்தநாள் கொண்டாடும் பழக்கத்தையே விட்டுவிட்டதாக நண்பர்கள் பேசிக் கொண்டார்கள்...
முதல் செமஸ்டர் முடிந்து இரண்டாவது செமஸ்டர் ஆரம்பித்த காலம்...
முதல் செமஸ்டரில் அனைத்துப்பாடங்களும் தேர்ச்சியடைந்தேன்...
சில தோழிகள் கிடைத்தார்கள்....
புத்தகம் வாங்க என்னிடம் பணமில்லாத போது எனக்கு பணம் தந்து உதவினார்கள்....
வாழ்வில் மறக்க முடியாத உதவி...
அவர்கள் தந்த பணத்தைத் திருப்பித் தந்துவிட்டேன்...
நாட்கள் இன்னும் நகர பக்கத்து வகுப்பில் ஒரு தோழி கிடைத்தாள்....
ஏனோ தெரியவில்லை என்மீது பாசம் காட்டினாள்...
எனது பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய அவள் பிறந்தநாள் பரிசாகக் கைக் கடிகாரம் வழங்கினாள்...
இந்த நட்பின் வருகையால் பழைய நட்புகள் விலகின சூரிய ஒளிபட்டு மழைத்துளி மறைவதைப் போல்....
காரணமென்ன என்று கேட்டதற்கு அவள் நடத்தை சரியில்லை என்ற பதில் வந்தது....
நான் நம்பவில்லை என்றாலும் எனது நடத்தையில் கவனமாக இருந்தேன்....
இரண்டாவது செமஸ்டர் முடிய மூன்றாவது செமஸ்டர் ஆரம்பமாக இரண்டாவது செமஸ்டரில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை....
மூன்றாவது செமஸ்டரில் நட்பு பிரிந்தது காரணமே இல்லாமல்....
எனினும் எனக்கு பக்க பலமாய் கண்ணன் மற்றும் கண்ணன் சிவா என்ற நண்பர்கள் மட்டுமே என்னோடு இருந்தார்கள்.....
நாங்கள் ஒரே துறையைச் சார்த்தவர்கள் அல்ல....
இருப்பினும் உணவு இடைவேளையில் சந்தித்து ஒன்றாக உணவு உண்பது எங்களது அன்றாட வழக்கம்....
அவர்கள் கல்லூரி வராத நாட்களில் வழக்கமாக நாங்கள் அமரும் இடத்தில் தனியாக அமர்ந்து உணவு உண்பேன்....
கல்லூரிக்குக் கல்விக்கட்டணம் செலுத்தாததால் மூன்றாவது செமஸ்டர் எழுதாமல் தடுக்கப்பட்டேன்...
வங்கிகளில் கல்விக்கடன் கேட்டேன்....
கவுன்சிலிங் போகாததால் இல்லையென்று மறுத்தார்கள்...
கோபம் கொண்டு சண்டை போட்டு கல்விக்கடன் வாங்கி மீண்டும் கல்லூரி சென்றேன் நான்காவது செமஸ்டரில்...
எனது கல்விக்கட்டணம் ஆண்டுக்கு ரூ 55000....
எனக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ஆண்டுக்கு ரூ 45000....
அப்போது, எனக்குத் தேவைப்பட்ட ரூ10000- ஐ எனது முகநூல் நண்பர்கள் தான் அளித்து உதவினார்கள்...
இதை நான் திருப்பி செலுத்த எண்ணிய போது, அவர்கள் என்னிடம் நல்ல படித்து பணம் சம்பாதித்து என் போல் கஷ்டப்படும் சகோதரர்களுக்கு உதவினாலே போதும் என்று மறுத்துவிட்டார்கள்...
நான்காவது செமஸ்டரில் மூன்றாவது செமஸ்டரையும் சேர்த்து எழுதினேன்...
ஏதோ ஆறுதல் பரிசு கிடைத்தது போல் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றேன்...
ஐந்தாவது செமஸ்டரில் மீண்டும் ஏதோ சிறையில் அடைக்கப்பட்ட கைதி போல் அமைதியாகவே காலம் நகர்ந்தது..
மறக்க முடியாத நிகழ்வுகளென எதுவும் இல்லை....
ஆனால், எப்போதும் என்னை கேலி, கிண்டல் செய்து சிரிக்க வேண்டுமென்றே பல கூட்டங்கள் இருந்தன...
அப்படி கேலி, கிண்டல் செய்யும் போதெல்லாம் என் காதுகள் செவிடாயின...
எனக்கு யாவும் வெறுத்துவிட்டது....
மனம் அமைதியை நாடுகிறது...
தனிமையில் பல நேரங்களில் கண்ணீர்விட்டுக் கதறுகிறேன்...
நிரந்தரமில்லாத உலகில் எதையும் நாடாதே, யாரையும் சொந்தமென்று எண்ணாதே என்று திரும்பத்திரும்ப எனக்குள் சொல்லிக் கொள்கிறேன்...
நான் நடிப்பவன் அல்ல...
எனது வாழ்க்கையில் எனது மனம் அறிந்து நான் அடுத்தவரைப் பாதிக்கும் தவறுகளேதும் செய்யவில்லை....
ஆனால், எனது மகிழ்ச்சி, நிம்மதியான மனநிலையெல்லாம் காணாமல் போய்விட்டது.....
(தொடரும்.....)