தமிழன்டா---kavithai

அடலருந் துப்பின் .. .. .. ..

குரவே தளவே குருந்தே முல்லையென்று

இந்நான் கல்லது பூவும் இல்லை;

கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே

சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையொடு 5

இந்நான் கல்லது உணாவும் இல்லை;

துடியன் பாணன் பறையன் கடம்பனென்று

இந்நான் கல்லது குடியும் இல்லை;

ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக் 10

கல்லே பரவின் அல்லது

நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
---------
உரை: அழித்தற்கரிய வலிமையையுடைய … குரவமலர், தளவுமலர், குருந்த மலர், முல்லைமலர் ஆகிய இந்நான்கு மலர்களைத் தவிர வேறு மலர்களும் இல்லை.

கரிய அடியையுடைய வரகு, பெரிய கதிரையுடைய தினை, சிறிய கொடியில் விளையும் கொள், புள்ளிகள் நிறைந்த அவரை இவை நான்கைத் தவிர வேறு உணவுப்பொருட்களும் இல்லை.

துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகிய இந்நான்கு குடிகளைத் தவிர வேறு குடிகளும் இல்லை.

மனம் பொருந்தாத பகைவரின் முன்னே நின்று அவர் படையெடுப்பைத் தடுத்து, ஒளிறும் உயர்ந்த கொம்புகளையுடைய யானைகளைக் கொன்று தாமும் விழுப்புண்பட்டு இறந்தவர்களின் நடுகல்லைத் தவிர, நெல்லைத் தூவி வழிபடுவதற்கேற்ற கடவுளும் வேறு இல்லை.

இதில் வருவது புலிபசித்தாலும் புல்லைத் தின்னாது போன்ற குறிப்பாக எனக்குத் தோன்றுகிறது (கண்ணகி பீடன்று எனச் சொன்னது போல)

தங்கள் தொன்ம வழக்கப்படி வீரத்திருமகன்களின் நடுகல்லை வழிபடுவதை மேன்மையானது கருதும் மனப்பாங்கு.


இக்கால மக்கள் போல "தமிழன்டா" என்ற கருத்து தொனிக்கிறது

------------------------------------------------------------




உலகில் பலவகை மலர்கள் இருப்பினும் ரவமலர், தளவுமலர், குருந்த மலர், முல்லைமலர் ஆகியவையே மிக சிறப்பானவை




என துவங்கி




கடவுளரில் நடுகல்லாக வழிபடும் வீரர்களே சிறப்பனாவர்கள் என பாடல் முடிகிறது




இந்த நான்கு வகை மலர்களை அன்றி வேறு மலர்கள் உலகில் ஏராளம் உண்டு, அவையும் அழகானவையே என்பது கவிஞருக்கு தெரியாதா?




ஆனால் ஒன்றை போற்றுகையில் அதை உலகிலேயே உயர்ந்தது என சொல்லுதல் கவிதையில் வழக்கமே




குறளிலும் இதை காணலாம்




கடவுள் வாழ்த்தில் கடவுளை அப்படி போற்றி புகழ்ந்த வள்ளுவர் கற்பின் சிறப்பை குறிக்கையில்




"தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள்

பெய்யென பெய்யும் மழை"




என கணவனை தொழுதாலே போதும், தெய்வத்தை தொழவே வேண்டாம் என்கிறார்




இதன் பொருள் வள்ளுவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதா அல்லது வேறு கடவுளரை வணங்ககூடாது என்பதா?




அல்லவே?




அது ஒரு உயர்வுநவிற்சி அணி மட்டுமே




அதுபோல் தான் மாங்குடி கிழாரின் இப்பாடலும்









..... தேமொழி



---------

எழுதியவர் : (27-Mar-17, 4:39 pm)
பார்வை : 86

மேலே