சீதைடா ஒரு பக்க நகைச்சுவைக் கதை
...............................................................................................................................................................................
...............................................................................சீதைடா...
கல்லூரியில் படிக்கிறபோது என் நண்பர்களுக்கு வயசுக் கோளாறு போல நாடகம் போடுகிற கோளாறு
வந்து விட்டது. படிப்பு, பரீட்சை என்று மல்லு கட்டுகிற எங்களுக்கு நாடகம் நடத்துவது அவ்வளவு
சுலபமாயில்லை. இந்திய மாணவர் சங்கத்தில் சேர்ந்து முச்சந்தி கூடும் இடங்களில் தெரு நாடகம்
போடுவதென்றால் என் நண்பன் பழனியப்பனுக்கு அப்படி ஒரு ஈடுபாடு.. அவன் ஆசைக்கு பக்கத்து
ஏரியாவில் உள்ள கலைக் கல்லூரி மாணவர்கள் ஈடு கொடுத்தார்கள். என்னதான் முட்டி முட்டி
மோதினாலும் எந்த நாடகமும் சொதப்பலில்லாமல் நடந்ததாகச் சரித்திரமில்லை! எல்லா
சொதப்பல்களுக்கும் நேரமின்மையே காரணமாக அமைந்திருக்கும்...
அப்படித்தான்..
பெண்களுக்கு எதிராக நடக்கும் அநியாயங்களையும், அப்படிப்பட்ட அநியாயங்களை பெண்கள் வாய்மூடி
பொறுத்துக் கொள்ளக் கூடாது.. கேட்க வேண்டும்; பேச வேண்டும்.. என்கிற கருத்தை வலியுறுத்தி, இந்த
விழிப்புணர்வை உண்டாக்க ஒரு தெரு நாடகம் நடத்த வேண்டும் என்று நச்சரித்தான் பழனி.
ஒரு வழியாக மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலியைத் துகிலுரியும் காட்சியை நாடகமாக்கலாம் என்று
முடிவு பண்ணி ரிகர்சலும் பார்த்தாயிற்று.. கலைக் கல்லூரி மாணவன் அவினாஷ் துச்சாதனனாகவும்,
மருத்துவக் கல்லூரி மாணவன் முத்துவேல் திரௌபதையாகவும் நடித்தனர்..
பழனியப்பனுக்குத் திருப்தியில்லை.. “ பாஞ்சாலியாவது கொஞ்சம் பேசுவாளே.. சபதமெல்லாம்
செய்வாளே.. அவளை விட வாயே திறக்காம குனிஞ்சி குட்டு வாங்கறவளா இருந்தா நல்லாயிருக்குமே”
என்று பினாத்திக் கொண்டிருந்தான்.
நாடகத்துக்கு இரண்டு நாளிருக்கும்போது அவனே சடக்கென்று, “ மாகாபாரதம் வேணாம்..
ராமாயணத்துல வண்ணான் சொல் கேட்டு சீதையை காட்டுக்குத் துரத்தும் காட்சியை நாடகமாக்கலாம்”
என்று தீர்மானித்தான்..
அவன் தொந்தரவு தாங்காமல் அதையும் ஒரு ரிகர்சல் பார்த்து விட்டோம்.. மருத்துவக் கல்லூரி
மாணவர்கள் மட்டும் கலந்து கொண்ட ரிகர்சல் அது.. கலைக் கல்லூரி மாணவன் அவினாஷை
லட்சுமணனாகப் போட்டு விடலாம் என்று முடிவு பண்ணியாயிற்று...
நாடகம் நடத்துகிற நாளும் வந்து விட்டது..
முத்துவேல் பாண்ட் பனியன் மேல் சேலையைச் சுற்றி, விக் வைத்து இட்ட அடி மண்ணதிர, எடுத்த அடி
ட்ராஃபிக் கொப்பளிக்க சீதையாகிப் போனான்..
ராமன் ஸ்டைலாக “ தம்பி” என்றழைக்க அவினாஷ் வந்தான்..
நேராக அவன் சீதையின் தலைமுடியைப் பற்றியிழுக்கப் போன போதுதான் புரிந்தது, டிராமா மாறிப்
போனதை யாரும் அவனிடம் சொல்லவில்லை என்று..! ! அது மட்டுமல்லாமல் மகாபாரத ஒத்திகையில்
துரியோதனன் அவனைத் தம்பி என்று மட்டும்தான் விளிப்பான்..
அங்கே ஹேண்ட்ஸ் அப் சொன்னால் கை தூக்கி நிற்பார்களே.... அதைப் போல் இரண்டு கைகளையும்
வைத்துக் கொண்டு சீதையாகப்பட்ட முத்துவேல், “ டேய் நான் சீதைடா...! நான் சீதைடா... ” என்று
தணிந்த குரலில் திரும்பத் திரும்ப கூறினான்.. துச்சாதனன் பாத்திரமாகவே ஒன்றி விட்ட அவினாஷ்,
அவன் கூறியதைக் காதில் நுழைக்காமல் துகிலுரியத் தலைப்பட்டு விட்டான்.
கூட்டம் “ஹோ.. ஹோ.. ” என்றது.
விக்கும் சேலையும் காணாமல் போய் நின்ற சீதைக்குப் பொங்கி வந்ததே கோபம்...
சில உருளைக் கட்டைகளை பேப்பர் சுற்றி அம்புகளாய் வைத்திருந்தோம்.. விக்கையும் சேலையையும்
அணிந்த வாக்கில் ஒரு அம்பை எடுத்துக்கொண்டு சீதை லட்சுமணனை விரட்டி விரட்டி மொத்த
ஆரம்பித்தது... இடையில் ராமனாக நடித்த பழனி வர, அவனுக்கும் மொத்து விழுந்தது- “ ஏண்டா
சொல்லல” என்று..! ! !
இந்த நாடகத்தை இதற்கு முன்னரும் நடத்தியிருக்கிறோம்... சீதை மௌனமாகக் காட்டில் நிற்பதைப்
பார்க்கும் கூட்டத்தினர்- குறிப்பாக பெண்கள் கூட்டம், “ அட இன்னாமே... இன்னாத்துக்கு என்னிய இங்க
இட்டாந்தேன்னு கேளு.. கேளு” என்று எடுத்துக் கொடுக்கும்.. அந்தளவு ஆற்றாமை பொங்கி வழியும்...
அதே கூட்டம் அன்று ராமனும், லட்சுமணனனும் அடி வாங்குவதை ரசித்து ருசித்துப் பார்த்தது.! ! ! !
அநியாயத்துக்கு அந்த நாடகத்துக்குத்தான் முதல் பரிசு கிடைத்தது...! ! ! ! !