பழந்தமிழர்கள் குறித்த மிகச் சிறந்த வரலாற்று ஆவணம்
• சங்க இலக்கியங்கள்
• தமிழர் வரலாறு
வரலாற்றுக்கு விளக்கம் கூறுவதற்கு இரு தகுதிகள் இன்றியமையாதவை என்பார் காலிங்வுட் (CALLING WOOD).
1. பாடநூல்கள் அளிக்கும் வரலாற்று அறிவைக்காட்டிலும் பரந்த அறிவைப் பெற்ற வரலாற்றாளர்களாக இருத்தல்.
2. வரலாற்று நிகழ்வுகள் குறித்தக் கோட்பாட்டை (PHILOSOPHY OF HISTORY) அறிந்தவராய் இருத்தல். வரலாற்றறிஞர் கார் (CARR) அவர்கள், வரலாறு என்பது கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் இடையிலான முடிவில்லாத உரையாடல் என்கிறார். வரலாற்றைக் குறிக்கும் கிஸ்டரி எனும் ஆங்கிலச்சொல் கிஸ்டோரியா எனும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்படுவதாகும். இச்சொல் ஆராய்தல் என விளக்கம் பெறும். எனவே வரலாறு எனும் சொல் நிகழ்வுகளை மட்டுமல்ல அவை குறித்த ஆய்வு என்றும் பொருள்படும் என்பார் முனைவர் வீ. மாணிக்கம். அரசு தோன்றிய பிறகு அரசியல் நிகழ்வுகள் முன்னிலை பெற வாய்ப்புண்டு. ஆனால் அரசியல் நிகழ்வுகள் மட்டும் வரலாறாகாது
அந்த வகையில் தோழர் கணியன்பாலன் அவர்கள் நகர்மைய அரசுகளின் காலகட்டங்களில் இருந்த சமுதாய உற்பத்திமுறையை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றைக் கட்டியமைக்கும் அணுகுமுறைக்கு முன்னுரிமை தந்துள்ளார். நகர்மைய அரசுகளின் தோற்றமும், எழுத்துருவாக்கமும், தமிழர் பொருள்முதல்வாத மெய்யியல் பள்ளிகளின் வளர்ச்சியும், தமிழின் செவ்வியல் இலக்கிய முயற்சிகளும் இணைந்து சங்ககாலத்தின் தொடக்ககாலம் விறுவிறுப்பான சமூக நிகழ்வுகளைக்கொண்ட வரலாறாகத் திகழ்ந்துள்ளது. சங்ககாலத் தமிழர் வாழ்வை அவர்கள் வரலாற்றை அக்கால அகச்சான்றுகளான சங்க இலக்கியங்களைக் கொண்டே கட்டமைக்க ஆசிரியர் முயன்று அதில் பெருவெற்றியும் பெற்றுள்ளார். கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுத்தரவுகள், வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகள் இன்னபிற வரலாற்று ஆவணங்கள் முதலியனவற்றைத் தனது இலக்கிய அடிப்படையிலான கணிப்புக்குப் பொருந்திப் போகச்செய்து அக்காலகட்ட வரலாற்று ஆண்டுகளை ஓரளவு சரியாகவே கணித்துள்ளார்.
சங்ககாலத்தில் அனைவரும் ஏற்று அங்கீகரித்த திருமண முறையாக உடன் போக்கு இருந்துள்ளது. சங்ககாலத் தலைவி ஐந்திணைத் தலைவனோடும், அனைத்துக் குடித்தலைவனோடும், அனைத்துத் தொழில் செய்யும் தலைவனோடும் உடன்போக்கு மேற்கொண்டாள் என்பதைச் சங்க இலக்கிய அகப்பாடல்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றன எனக்கூறும் ஆசிரியர், அதன்மூலம் அகமணமுறையோ, அதனை அடிப்படையாகக் கொண்ட சாதி அமைப்போ அன்று இல்லை என்கிறார். இந்த நிலை சங்கம் மருவிய காலத்தில் மாற்றமடைந்து சாதிமுறையிலான, சடங்குமுறையிலான திருமணங்கள் தோன்றியிருப்பதைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது.
இனக்குழுகால கணச்சமூகம் வளர்ச்சியடைந்து ஒரு முதுகுடிச் சமூகமாக ஆகி தனக்கான நகர அரசுகளை உருவாக்கிக்கொள்ளும் போக்கு என்பதை உலகச் சமூகங்களோடு ஒப்பிட்டு ஆய்வு செய்து சங்ககாலம் என்பது அரசு உருவாகி நிலைத்துவிட்ட காலம் என்பதை உறுதிப்படுத்துகிறார். சங்ககாலச் சமூகம் என்பது இனக்குழுகாலச் சிறுகுடிச்சமூகம் என்பதை ஆசிரியர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதுபோன்றே அசோகர் பிராமிக்குப் பின்பே தமிழ் தனக்கான எழுத்துக்களைப் பெற்றது என்ற தரவுகளைத்தகர்த்து அசோகர் பிராமிக்கு வெகுகாலம் முன்பே (கி.மு. 800 வாக்கில்), தமிழி எழுத்து உருவாகிவிட்டது எனக் கூறுகிறார்.
தமிழர் மெய்யியல்களின் வரிசையில் தந்திரம், எண்ணியம், உலகாய்தம், சிறப்பியம், ஓகம், ஆசிவகம் போன்ற கோட்பாடுகள் தோன்றி வளர நகர்மைய அரசுகளின் தோற்றமும், பெருக்கமும், அவைகளின் நீண்டகால இருப்பும், இன்ன பிற சூழல்களும் பெருமளவு காரணமாய் இருந்துள்ளமையை இந்நூலாசிரியரின் கூற்றுக்களால் அறியமுடிகிறது. நகர்மைய அரசுகளின் காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் எழுந்து வளர்ந்த அறிவுத்தேடல், தத்துவத்தேடல் முதலியன சங்ககாலத்தின் இறுதியிலும், சங்க மருவிய காலத்திலும், அதன் பின்னரான காலத்திலும் படிப்படியாக அருகி வந்தமையை தென்னிதில் உணர முடிகிறது.
இதற்கான அடிப்படையாக நகர அரசுகள் அழிந்து பேரரசுகள் உருவான காலத்தில், பௌத்தம், சைனம், பிராமணியக்கோட்பாடுகள் தமிழகத்தில் மெல்ல மெல்லப் பரவி வளர்ந்து -அரசர்களே பிராமணிய வெள்ளாளிய உடைமை வர்க்கத்தின் கைப்பாவியாகி, தமிழர் அறம் என்பதே பின்னுக்குத் தள்ளப்பட்டு, ஆரியரின் பிராமணிய வேதங்களும், ஸ்மிருதிகளும் அறமாக உணரப்பட்ட, புரிந்துகொள்ளப்பட்ட துயர்மிகுந்த சூழ்ச்சி வளையத்துக்குள் தமிழகம் கடந்த 2000 ஆண்டுகளாகத் தள்ளப்பட்டுள்ளது.
கி.மு. 800 -50 வரையான, நகர்மைய அரசுகளின் காலத்தில் ஏற்பட்ட மலர்ச்சி, ஏற்றம் ஆகியன இன்றைய 21ஆம் நூற்றாண்டு காலம் வரையிலும் ஏன் ஏற்படவில்லை என்ற கேள்விக்கு இயங்கியல் கோட்பாட்டுப்படி பேரரசுகள் அறிவுப்புரட்சிக்கு எப்பொழுதும் எதிரானவை என்ற மெய்மையே காரணம். நம்மிடம் இன்றைக்கு எஞ்சியிருக்கும் அனைத்து அறிவுச் செல்வங்களுக்கும் கி.மு. 800 தொடங்கி கி.பி. 2ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் உருவான நூல்களே காரணம் என்பதை தோழர் கணியன்பாலனின் ஆய்வுகளால் உணர முடிகிறது.
கி.மு. 4ஆம் நூற்றாண்டிலேயே அரசுகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு மக்கள் அவைகள் இருந்தன என்பதற்கு மெகத்தனிசின் கூற்றையும், மருதன் இளநாகனாரின் அகம் 77ஆம் பாடலில் உள்ள தேர்தல் முறையையும் ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். அதன் மூலம் பேரரசுகாலச் சோழர் காலத்தில்தான் தேர்தல் முறை உருவாக்கப்பட்டது என்கிற பொய்மை அம்பலப்பட்டுவிடுகிறது. பேரரசுகாலச் சோழர்காலத்திய மக்கள் பிரதிநிதிகள் அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவர்கள். ஆனால் சங்ககால மக்கள் அவைகள் (shaba) அரசைக் கட்டுப்படுத்தும் வலிமை கொண்டவை. நகர்மைய அரசுகளின் தலைவர்களாக அரசர்கள் இருந்த போதிலும் அவர்களைக் கட்டுப்படுத்தி வழிநடத்தும் அதிகாரம் மக்களவைகளுக்கு கி.மு. 2ஆம் நூற்றாண்டு வரையிலும் இருந்தது. அக்காலத் தேர்தல்முறைதான் மக்களாட்சித் தத்துவத்தின் ஊற்றுக்கண்.
நகர்மைய அரசுகள் பற்றிய செய்தி தமிழக வரலாற்றில் ஒரு புதிய வரவு. நகர்மைய அரசுகளின் தலைவர்கள் அவர்களின் நகரப்பெயரோடுதான் அழைக்கப் பட்டார்கள். வேந்தர்களும் கூட தொண்டி அரசன், கொற்கைப் பாண்டியன், புகார்த்தலைவன் என நகரங்களைக்கொண்டே அழைக்கப்பட்டனர். ஆசிரியர் தனது வரலாற்று ஆய்வில் நகர்மைய அரசுகளைச் சந்தித்ததும் -கடந்ததும் சங்ககால வரலாற்றுக்கு அவர் அளித்த கொடையாகும். சங்ககால வரலாற்றைச் சிறுகுடி, மூதூர் இனக்குழுச் சமூகமாக மட்டுமே வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் குறைத்து மதிப்பிட்டுவர, தோழர் கணியன்பாலன் பண்டைய தமிழகம்; கிரேக்க நகர அரசுகளைப்போன்ற வளர்ச்சியடைந்த நகர்மைய அரசுகளைக்கொண்டது எனத் தனது ஆய்வின் மூலம் நிறுவியுள்ளார்.
தமிழரசர் தங்களுக்குள் ஓயாது போரிட்டுக் கொண்டவர்களாக மட்டுமே சிலர் வரலாறு எழுத, தமிழரசர்களுக்கிடையே பொது எதிரிக்கு எதிரான ஒரு ஐக்கிய கூட்டணி இருந்து வந்ததை காரவேலனின் ஹத்திக்கும்பா கல்வெட்டு மூலமும், மாமூலனாரின்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேயம் என்கிற அகம் 31ஆம் பாடல் மூலமும் ஆசிரியர் காட்டு கிறார். மாமூலனாரின் பாடலில் உள்ள மொழிபெயர் தேயம் என்பது பிற மொழி பேசும் தேயங்கள் அல்ல; தமிழ்மொழி சிறிது சிறிதாகத் தேய்ந்து, மாற்றமடைந்து கொடுந்தமிழ் பேசப்பட்ட தேயமே மொழிபெயர் தேயமாகும். தக்காணப்பகுதியில் கொடுந்தமிழ் பேசப்பட்டதற்கு சாதவாகனர்களின் நாணயங்களில் தமிழும்
பிராகிருதமும் இருப்பதே ஆதாரமாகும். அன்று சமற்கிருதம் வழக்கில் இல்லை. திராவிடம் என்ற தனி மொழி இல்லை. தமிழ்தான் இருந்தது. தமிழே திரமிள, திராவிட என மருவி அழைக்கப்பட்டது. இதையே அம்பேத்கரும் தனது ஆய்வுரையில் கூறியுள்ளார். தமிழிலிருந்து முதலில் கன்னடமும் தெலுங்கும், பின் துளுவும், மலையாளமும் பிரிந்தன. அன்று தென்னிந்தியா முழுவதும் தமிழே பேசப்பட்டது.
இமயம்வரை சென்ற இருபெரும் மன்னர்கள் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனும், அவனது மகன் சேரன் செங்குட்டுவனுமே என்று தக்க சான்றுகளுடன் ஆசிரியர் மெய்ப்பிக்கிறார். தமிழகத்தைத் தாக்கிய மௌரியர்களை, சோழன் இளஞ்சேட் சென்னி தலைமையில் ஒன்றுதிரண்ட தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணி நன்னனின் பாழி நகரில் தோற்கடித்து துரத்தியடித்ததைச் சான்றுகளுடன் ஆசிரியர் நிறுவுகிறார். தெலுங்கர்தான் வடுகர் எனப் பலரும் புரிந்துகொள்ள, வடக்கிருப்பவர் வடுகர் என்கிறார் ஆசிரியர். வடக்கிருந்து வரும் மௌரியர் புதியவர்கள் என்பதால் அவர்களை வம்பவடுகர், வட வடுகர் எனச் சங்க இலக்கியம் குறிப்பதை எடுத்துக்கூறி ஆசிரியர் விளக்கியுள்ள பாங்கு மிக அருமையானது. முதல்கரிகாலன் நடத்திய வடதிசைப்போரின்போது வடக்கே அசோகனின் மௌரிய அரசு இருந்தது. ஆதலால் அப்போர் வடக்கே கிருட்டிணா நதிக்குக்கீழ் இருந்த தக்காணப்பகுதிகளை தமிழரசுகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடத்திய போர் என மெய்ப்பித்து, சிலப்பதிகாரம் கூறும் கரிகாலனின் இமயச்செலவை மிகைக் கூற்றென்கிறார். பரணர் சிலப்பதிகாரக் கண்ணகி குறித்து ஏதும் கூறாமையால் சிலப்பதிகாரம் பிற்காலத்தது என்பது புலனாகிறது.
ஏரிகளுக்கான மதகுகளை அமைக்கும் முறை ஐரோப்பாவில் 19ஆம் நூற்றாண்டில் தான் உருவாகியது. ஆனால் பழந்தமிழ்ச் சமூகம் 2100 ஆண்டுகளுக்கு முன்பே இவைகளை மிகச்சிறந்த முறையில் வடிவமைத்துப் பயன்படுத்தியது. தமிழ் ஈழத்தில் கி.மு. 300 வாக்கில் பசவகுளம் ஏரியும், மதுரையைச்சுற்றி மட்டும் 50 சங்ககால ஏரிகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழில் மிக அதிக அளவில் வேளாண் சார்ந்த சொற்கள் இருப்பது வேளாண்மையில் தமிழர்கள் மிக உன்னத நிலையை அடைந்திருந்தனர் என்ற மெய்மையை பறைசாட்டுகிறது. பழந்தமிழர்களின் நீர்ப்பாசன முறை குறித்தப் பல நுணுக்கமான தொழில்நுட்பத் தகவல்களை ஆசிரியர் கணியன் பாலன் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார்.
தொல்பழங்கால வரலாறு, பழைய கற்காலம், புதியகற்காலம், நுண்கருவிக் காலம், செம்புக்காலம், இரும்புக்காலம் என மனித இனத்தின் உற்பத்தி முறையை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படுகிறது. ஆனால் இந்த முறை வரலாற்றுக்காலம் தொடங்கியபின் பின்பற்றப்படுவதில்லை என்கிற தோழர் கணியன்பாலனின் குற்றச்சாட்டு வரலாற்று ஆசிரியர்களால் கவனத்தில் கொள்ளவேண்டியவையாகும். நமது தமிழின வரலாறு உற்பத்தி முறையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்குமானால் தமிழ்ச் சமுதாயத்தில் கடந்த 2000 ஆண்டுகளில் பெரிய புரட்சிகளும், மாற்றங்களும் ஏற்பட்டிருக்கும். நகர்மைய அரசுகளின் வளர்ச்சிப்போக்கில், தமிழர்களின் மெய்யியல்கள் தோன்றி வளர்ந்து தமிழ்ச்சமூகத்தை நெறிப்படுத்திய காலகட்டமாக சங்ககால வரலாறு இருந்ததை, தமிழர் மெய்யியல் குறித்து இருந்த தனது அறிவும், தெளிவும் கொண்டு தோழர் கணியன்பாலன் செய்த இந்த வரலாற்று ஆய்வு நமக்கு உணர்த்துகிறது.
நவீன முதலாளிய காலத்தில் புதிய புதிய வர்க்கங்கள் உருவான போதிலும், பிறப்பு கடந்த தொழில்களை அனைத்து மக்களும் செய்த போதிலும் உற்பத்தி முறைக்கேற்ற வர்க்கசமுதாயமாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாமல், வர்க்கநிலை மாறியும், சாதிநிலை மாறாச் சமூகமாக தமிழ்ச் சமூகம்-இந்தியச் சமூகம் நீடித்து வருகிறது. இது வர்க்கப்பிரிவை சாதிப்பிரிவு வெற்றி கொண்டிருப்பதையே காட்டுகிறது. இந்நிலை மாறத் தமிழர்கள் தங்களது சங்ககாலப் பொருள்முதல்வாத மெய்யியல் பள்ளிகளை நன்கு கற்கவேண்டும். கூடவே மார்க்சிய மெய்யியலின் மெய்மைத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். தமிழ்ச் சமுதாயத்தை பழந்தமிழர் மெய்யியல் அடிப்படையில் அணுகு வோருக்கும், இன்றைய ஆளும்வர்க்கத்தையும், சாதியமைப்பையும் பாதுகாக்கும் பிற்போக்காளர் கண்ணோட்டத்தில் அணுகுவோருக்கும் இடையிலான போராட் டத்தில் வரலாற்றை எழுதும்-படிப்பிக்கும் முறையில் மாற்றங்கள் தேவை என்பதில் தோழர் கணியன் பாலனின் வரலாறு எழுதும் முறைமைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தோழர் கணியன் பாலன் அவர்களால் பழந்தமிழ்ச் சமுதாய வரலாறு ஒரு புதிய கோணத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கணச் சமூக அமைப்பிலிருந்துதான் பழந்தமிழ்ச் சமுதாயம் தோன்றியது; அன்று நகர்மைய அரசுகளும் தமிழரசுகளின் ஐக்கியக் கூட்டணியும் இருந்தன; கடற்படை வல்லமையும், வணிக மேலாண்மையும் கொண்டதாக தமிழரசுகள் இருந்தன; தமிழர்களின் மெய்யியல் என்பது பொருள்முதல்வாத மெய்யியல்; இந்தியத்துணைக்கண்ட மெய்யியலுக்கும், இசைக்கும் ஆதிமூலம் பழந்தமிழ்ச் சமூகமே போன்ற பல புதிய செய்திகளை இந்நூல் வெளிப்படுத்தி, பழந்தமிழர்களின் ஒரு மிகச்சிறந்த வரலாற்று ஆவணமாகத் திகழ்கிறது என்பது ஒரு மறுக்க முடியாத மெய்மையாகும்.
- அரங்க.குணசேகரன்,