தையல்காரி தையல்நாயகி

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு விவசாய கிராமம் மட்டுவில். சாவகச்சேரி நகரில் இருந்து கிட்டத்தட்ட 3 மைல் தொலைவில் உள்ள வரலாற்றுப் பழைமை கொண்ட ஓர் இடம். இங்கு மிகவும் புகழ் பெற்ற பன்றித்தலைச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அம்பாளின் ஆலயம் 1750ஆம் ஆண்டுப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டதாக ஆலயத்தின் மூலஸ்தானத்தின் பின்புறமாக பித்தளையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் சான்று பகர்கின்றன. ஆலயத்திற்கு வருகைதரும் அடியவர்கள் நீராடுவதற்கு வசதியாக ஆலயத்தின் தெற்குப் பக்கத்தில் 100 அடி நீளம் அகலம் உடைய தீர்த்தக் கேணி அமைந்துள்ளது. அங்கு பொங்கல் பொங்கி அம்பாளுக்கு நிவேதித்து வரும் அடியவர்களிற்கும் வழங்கி இஷ்ட சித்திகளைப் பெறுவர். முற்காலத்தில் அம்பாள் மட்டுவில் பகுதியில் இயற்கை வனப்பு நிறைந்த கிராமத்தில் உறைந்து பல அற்புதங்களையும் அருளாட்சியையும் வழங்கி வந்ததாக வரலாறுகள் கூறிவருகின்றன.
இவ்வாலயத்தில் பறையடிக்கும் பக்தன் ஒருவன் தனது குலத்தொழிலான புலைத்தொழிலையும் செய்து வந்தான். அன்றொருநாள் அவனெறிந்த கூரிய ஆயுதம் இலக்குத் தவறியோ அல்லது திருவருட் செயலாகவோ பசு ஒன்றின் மீது பட்டது. உடனே அப்பசு துடிதுடித்து இறந்தது. அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அந்த பக்தன் வருந்தி, பின்னர் தெய்வத்தின் துணை இருக்கிறதே என்ற துணிவோடு அந்தப் பசுவை ஆலயத்திற்கு தென்கிழக்கு பகுதியில் புதைத்து விட்டான்.
நடந்த சம்பவத்தை எப்படியோ தெரிந்து கொண்ட மாட்டுச்சொந்தக்காரன், பக்தன் மீது நடவடிக்கை எடுத்தான். பசுக்கொலை புரிந்த பாதகத்திற்காக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்குப் பயந்த பக்தன் தனக்கு அபயம் அளிக்கும்படி அன்னையிடம் வேண்டினான். அன்றிரவு அடியவனின் கனவில் முதிய விதவைக்கோலத்தில் காட்சி கொடுத்த அம்மை, நாளைய தினம் பன்றி எச்சங்களையே புதைத்ததாகச் சொல்லச் சொன்னதாகவும், மாட்டுத்தலை புதைக்கப்பட்ட இடத்தில் பன்றித்தலையே கிடைத்ததாலும், தேவிக்கு பன்றித்தலைச்சி என்ற பெயர் ஏற்பட்டதாக மரபுரைகள் சொல்கின்றன. தனது பக்தனுக்கு கிழக்கோலத்தில் கனவில் காட்சி கொடுத்த காரணத்தாற் போலும் அன்னையைப் பற்றிப் பேசும் போது "கிழவி' எனக் குறிப்பிட்டுப் பேசுவோர் மட்டுவிலில் இன்றும் வாழ்கிறார்கள்.
இவ்வளவு பிரசித்தம் பெற்ற அம்மன் கோவில் பொங்கலுக்கு முக்கியமாக மட்டுவிலில் விளைந்த ருசியான கத்திரிக்காய் கறி சமைத்து, அம்மனுக்கு படைப்பது வழமை. மட்டுவில் கிராமத்தில் பன்றிதலைச்சி அம்மன் கோவில் பொங்கலுக்கு பல கிராமங்களில் இருந்து மக்கள் வருவார்கள். மட்டுவில் பல மாவீரர்கள் பிறந்த கிராமம் .

அம்மன் கோவிலில் பூசாரிக்கு உதவியாக இருந்தவன் முத்துராசா. கோவிலில் இருந்து கிடைத்த வருமானத்தில் தன் குடும்பத்தை நடத்திவந்தான் முத்துராசா.
. அவனின் மனைவி தையல்நாயகி தையலுக்கு கெட்டிக்காரி. அந்த ஊர் வாசிகள் பலர் அவளிடமே தங்கள் ஆடைகளைத் தைப்பது வழக்கம் .அதில் வரும் வருமானமும் இரு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தை நடத்த தையலுக்கு உதவியது. மூத்த பிள்ளை செல்வன். அவனுக்கு இரு வருடங்களுக்குப் பின் பிறந்தவள் செல்வி .

செல்வன் விளையாட்டுப் புத்திக்காரன். குத்துசன்டை, உயரம்பாய்தல், ஓட்டம் ஆகியவற்றில் அவன் படிக்கும் போது பரிசுகள் வாங்கினவன் . தந்தையைப்போல் ஆறடி உயரம்.திடகாத்திரமான உடம்பு. நினைத்தை சாதிப்பவன். சிறுவயது முதல் தமிழ்ப்பற்று உள்ளவன். அவனது நோக்கம் தன் சாதனை படைத்தது ஊருக்கு காட்டவேண்டும் என்பதே. தனது பெயர் ஊர் வரலாற்றில் பதிவாகவேண்டும் என்பதே. அவன் படிப்பில் கவனம் செலுத்தவில்லை. பதினோராம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டான்

அவனுக்கு பல கூட்டாளிகள். தையல்நாயகியும் முத்துராசாவும் அவனை க் கட்டுப்படுத்தமுடியவில்லை . அவனது நண்பன் சீலன், வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக க் கொண்டவன். விடுதலை புலிகள் இயக்கத்தோடு அவனுக்கு தொடர்பு இருந்தது.ஒரு நாள் அவன் செல்வனை பார்த்து,
" நண்பா உன்னைப்போல் உடலமைப்பு உள்ள இளம் வாலிபர்கள் தமிழுக்காக போராட இயக்கத்து அவசியம் தேவை. நீ சம்மதித்தித்தால் உன்னை இயக்கத்தில் சேர்த்துவிடுகிறேன். எனக்கு இயக்கத்தில் முக்கிய பதவியில் உள்ள சிலரை தெரியும்.என சொல்லுகிறாய் செல்வா?, சீலன் நண்பனைக் கேட்டான். செல்வனுக்கு எப்போது சீலன் தன்னை இயக்கத்தில் சேர கேட்பான் என்று இருந்தது . உடனே இயக்கத்தில் சேர பெற்றோரின் அனுமதி இல்லாமல் சேர சம்மதித்து விட்டான் .
பெற்றோர் எவ்வளளவோ தடுத்ததும் தமிழ் இனத்துக்காக நான் என்னைத் தியாகம் செய்ய வேண்டும் என்று செல்வன் சேர்ந்தான்.

காலப்போக்கில் இயக்கத்துக்கு செல்வனின் தாய் ஒரு தையல்காரி எனத் தெரிய வந்தது. அதனால் செல்வன்மூலம் தேவையான சீருடைகளை இயக்கத்துக்கு தைப்பதற்கு எவ்ளவோ தையல்நாயகியை கேட்டும் அவள் முதலில் மறுத்து விட்டாள். போலீஸ் அறிந்தால் தனக்கு பிரச்சனை வரும் என்ற பயம் அவளுக்கு.
"அம்மா உன்னை சும்மா தைக்க சொல்லவில்லை . இயக்கம் உனக்கு பணம் தரும் அம்மா. யோசித்து பார். செல்வியின் கல்யாணத்துக்கு பணம் வேண்டாமா?
தையலின் பொல்லாத காலம், முத்துராசாவை இயக்கத்துக்கு உதவியதாக போலீஸ் கைது செய்து கொழும்புக்கு கூட்டிப்போனது போனது தான் . அதன் பின் அவனின் பேச்சே இல்லை. உயிரோடு இருக்குறானோ தெரியாது. குடும்பத்தை நடத்த தையலுக்கு வருமானம் போதவில்லை. வேறு வழியில்லாமல் சீருடை தைக்க ஒப்புக் கொண்டாள்.
செல்வி ஏ லெவலோடு நேர்ஸ் வேலைக்கு சேர்ந்தாள். பல இடங்களில் இருந்து அவளுக்குத் திருமணம் பேசிவந்தாலும் சீதனம் போதாமையால் கலியாணம் முற்றாகவில்லை

இயக்கத்தில் செல்வன் சேர்ந்த பின், ஒருதடவை மட்டுமே வீட்டுக்கு வந்தான் . அவனது பேச்சு முற்றிலும் மாறுபட்டு இருந்தது. காட்டிக்கொடுக்கும் துரோகிகளைஅழிக்க வேண்டும். போலீசை இல்லாமல் செய்யவேண்டும் என்றெல்லாம் பேசினான்
செல்வனுக்கு விரும்பிய சுறாபுட்டும் முட்டைபொரியலும் தையல் செய்து கொடுத்தாள் ; இரு நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு இயக்கத்தில் இருந்து ஒரு அவசர அழைப்பு வந்ததும்
" அம்மா நான் பூநகரி போருக்கு போறன் உயிரோடு திரும்பி வருவேனோ தெரியாது. தங்கச்சியின் கலியாணத்துக்கு என்னைப் பார்த்துக் கொண்டு இருக்காதே. நல்ல இடத்திலை பேசி வந்தால் செய்துவிடு" என்று சொல்லி போனவன் சில மாதங்களாக திரும்பி வரவில்லை.

செல்வனுக்கு இயக்கத்தில் பதவி உயர்வு கிடைத்து கரும்புலியாக மாறிவிட்டான் என்று தையல் கேள்விப்பட்டதும் இனி அவன் திரும்பிவரமாட்டான் என மனதுக்குள் நினைத்து கவலைப் பட்டாள் .

"கரும்புலியானால் உயிரை எப்போதும் தியாகம் செய்யத் தயாரக இருக்கவேண்டும் என்பது உண்மையா செல்வி", தையல் மகளைக் கேட்டாள் .

" அம்மா எதுக்கு கவலைப் படுகிறாய்.நீ அண்ணாவை பற்றி பெருமைப்படவேண்டும். நம் ஈழ விடுதலைக்காக உயிரைத் துட்சமாக மதித்து செயல் படுகிறான் " என்றாள் செல்வி.

" எனக்குக் கொள்ளி வைக்க அவன் ஒருவனே எனக்கு வாரிசாக இருக்கிறான். அவன் உயிருக்கு அம்மனே ஒன்றும் நடக்கக்கூடாது"அம்மன் இருக்கும் பக்கத்தை நோக்கி கைகூப்பிக் கும்பிட்டாள் தையல் .

“செல்விக்கு மீசாலையில் பேசிவந்த திருமணம் நல்ல ஜாதகப் பொருத்தம். மாப்பிள்ளை ஒரு ஆசிரியன் . அவனுக்கு திருமணமகாத அக்கா. அவளுக்கு சீதனம் கொடுக்க ஒரு இலட்சம் நன்கொடையக கேட்கினம். நீங்கள் கொடுக்க சம்மதித்தல் நான் பேசி முடித்து போடுவேன்.எனக்கு ததரகர் காசு பத்தாயிரம் தந்தால் போதும்.என்ன சொல்லுகிறியள் “? தரகர் தம்பிப்பிள்ளை கேட்டார்.

தையலால் உடனே தரகருக்கு பதில் சொல்லமுடியவில்லை. சின்னமாவிடம் சீட்டு பிடித்து பத்தாயிரம் மட்டுமே அவளிடம் இருந்தது. மிகுதி பணத்துக்கு எங்கை போவது?. தையல் யோசித்தாள் .

அவள் நினைவுக்கு தாய் மாமன் ஓவர்சியர் நடராசர் வந்தார். அவரிடம் கேட்டால் என்ன.? அவரிடம் போய் தயக்கத்தோடு தையல் கேட்டாள் அவர் கையை விரித்துவிட்டார்.

என்னசெய்வது என்று யோசித்தபடி இருந்த தையலுக்கு செல்வன் ஒரு பெரிய பையோடு வந்த பொது சந்தோசத்தைக் கொடுத்தது.

" என்னடா செல்வன் சொல்லாமல் கிள்ளாமல் திடீரென்று வந்திடாய் " தையல் மகனைக் கேட்டாள் .

" எனக்கு ஒரு முக்கிய காரியம் செய்ய மேலிடம்கட்டளை இட்டு இருக்குது அம்மா. நான் உடனே கொழும்புக்கு போகவேன்டும் . அதுதான் உங்கள் எல்லோரையும் பார்த்திட்டு போக வந்தனான்", செல்வன் பதில் சொன்னான்.

" செல்வா, தங்கச்சிக்கு ஒரு நல்ல இடத்திலை கலியாணம் பேசி வந்து இருக்குது. நன்கொடையாக ஒரு இலட்சம் கேக்கினம் . நீ மூன்று வருசமாக இயக்கத்திலை இருக்கிறியே. சம்பளம் இல்லமல் சேவை செய்கிறாய் இயக்கத்திலை கேட்டு அந்த பணத்தை வாங்கித் தாவான்."

" என்ன விசர் கதை கதைகிறாய் அம்மா ?.நான் போகிற முக்கிய காரியத்துக்கு இயக்கம் பணம் தந்திருக்கு . அதிலை தொடமுடியாது.உண்டை நடராசர் மாமாவை கெ ட்டு ப்பார். அவர் தருவார்"

“அதென்ன அப்படி முக்கிய காரியம். எனக்குச் சொல்லேன்” .


“அதெல்லாம் சொல்லுகிற காரியம் இல்லை அம்மா. அது பற்றி இப்ப பேசாதே” செல்வன் உறுதியாக பதில் சொன்னான் .

" நடராசர் மாமாவை கேட்டுப்பார்த்தன் அவர்' கையை விரித்திட்டார்”: தையல் சொன்னாள்.

" என் உயிர் போனாலும் இயக்கத்து பணத்திலை மட்டும் தொடமாட்டேன்.நான் இயக்கத்தில் சேரும் பொது சத்தியம் செய்து கொடுத்தனான். வாக்கு தவறமாட்டேன் அம்மா. தங்கச்சிக்கு நீ தினமும் கும்பிடும் அம்மன் வழிவிடுவா. என்னக்கு போக நேரமாகிது . இரண்டுபேர் எனக்காக காத்துக்கொண்டுநிக்கினம். நான் வாரன். செல்வி நீ ஒன்றுக்கும் யோசிக்காதே. எது நடக்கவேண்டுமோ அது நல்லதாகவே நடக்கும் " செல்வன் பதிலை எதிர் பார்க்காமல் சென்றன்.

******

ஒரு கிழமைக்குள் வந்த செய்தி தையலையும் செல்வியையும் திகைக்கவைத்தது.

“தமிழ் இனத் துரோகியான பிரபல அமைச்சர் தற்கொலைத் தாக்குதலுக்கு கொழும்பில் பலியானார். தற்கொலையாளியின் உடல் அடையாளம் காணமுடியாது சிதைந்து விட்டது. கொலையாளி விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன் என பொலிஸார் சந்தேகப் படுகிறார்கள் “

செய்தியை வாசித்து தாயுக்கு சொன்னாள் செல்வி. அவள் மனம் அண்ணனின் தியாகத்தை நினைத்து பூரிப்பு அடைந்தது . செய்தி கேட்ட தையல், தன் கிழிந்த மனதை தன் தையல் மெஷினில் தொடர்ந்து தைக்கத் தொடங்கினாள் .


சம்பவம் நடந்து மூன்று நாட்களில் சீலன் தையல் வீட்டுக்கு வந்தான்,

"மாமி செல்வனுக்கு நடந்தது கேள்விப்பட்டுஇருப்பியளே . செல்வன் மாவீரனாயிட்டான். இயக்கத் தலைவர் செல்வனின் தியாகத்தை பாராட்டினார். நாளை அவனுக்கு அம்மன் கோவில் வீதியில் மௌன அஞ்சலி கூட்டம் இயக்கம் நடத்த இருக்கிறது. மட்டுவில்லே.
திரண்டு வரப்போகுது "

" என்ன கூட்டம் வந்தாலும் அவன் உயிரோடு வரப்போறானே" தையல் கண்களில் கணீர் மல்க சொன்னாள் .

"மாமி செல்வன் தமிழ் இனத்துக்கு செய்த தியாகத்துக்கு உங்கள் குடும்பத்துக்கு இரண்டு இலட்சம் ரூபாய் கொடுக்கச் சொல்லி தந்தவர் . இந்தாருங்கோ பணம் ",சீலன் ஒரு கவரை தையலிடம் கொடுத்தான் . அவளால் நம்ப முடியவில்லை

*******

எழுதியவர் : (பொன் குலேந்திரன் கனடா ) (3-Apr-17, 3:47 am)
பார்வை : 485

மேலே