உனக்கென்ன இராசாத்தி
உனக்கென்ன ராசாத்தி
வெளிநாட்டுல. வேலை
பார்க்குற புருஷன்
ஊரில் மரியாதை
உள்ளுக்குள் புழுக்கம்
ராசாத்தி இங்கு
ராசாவிற்காக ஏங்கி
தவித்து புலம்புகிறாள்
தினமும் பூக்கிறேன்
பறிப்பார் இல்லை
அழகை இரசிக்க
இரசிகன் இல்லை
வாட்ஸ் அப்பும்
வீடியோ காலும்
உணர்வுகளை பரிமாறுமா
கூலி வேலை செய்து
திரும்பும் தம்பதியை
இமைக்காது பார்த்துக்
கொண்டிருக்கிறேன் நான்
அறுசுவை உணவு
வாழை இலையில்
வயிற்றில் பசியில்லை
கைவிரல் கோர்க்க வழியில்லை
புதுத்தாலியை மாற்றும்போதும்
நீ வரவில்லை
உன் அடையாளமாய்
நீ கட்டிய தாலி
என் அன்பை பெட்டியில்
பூட்டி அனுப்பி இருக்கிறேன்
விசாவை நீட்டிக்கும்போது
பெட்டியைத் திறந்து பார்
கண்ணீருடன் அலைபாயும்
என் விழிகள் அன்பால்
உன் இதயத்தை நனைக்கும்