வசுபமாணிக்கம்

தமிழறிஞர், கவிஞர், பேச்சாளர், நாடகாசிரியர், ஆய்வாளர், உரையாசிரியர் என பன்முகப் பரிமாணம் கொண்ட வ.சுப.மாணிக்கம் (V.S.Manickam) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* புதுக்கோட்டை மாவட்டம் மேலைச் சிவபுரியில் (1917) பிறந்தார். இயற்பெயர் அண்ணாமலை. இளம் பருவத்திலேயே பெற் றோரை இழந்தார். தாய்வழிப் பாட்டி, தாத்தாவிடம் வளர்ந்தார். 7 வயது வரை நடேச ஐயரிடம் குருகுலக் கல்வி கற்றார்.

* வணிகம் பழக 11 வயதில் பர்மா சென்றார். பொய் சொல்லுமாறு முதலாளி கூறியதை ஏற்க மறுத்தவர், வேலையை இழந்து 18 வயதில் தமிழகம் திரும்பினார். பண்டிதமணி கதிரேசன் செட்டியார் உதவியுடன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ‘வித்வான்’ பட்டம் பெற்றார்.

* சென்னை பல்கலைக்கழகத்தில் பிஓஎல், முதுகலை பட்டம் பெற் றார். ‘தமிழில் வினைச்சொற்கள்’ என்ற பொருளில் ஆய்வு செய்து எம்ஓஎல் பட்டமும், ‘தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ என்ற பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

* அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, ராகவ ஐயங்கார், ந.மு.வேங்கடசாமி நாட்டார், அ.சிதம்பரநாதன் செட்டியார் உள்ளிட்ட அறிஞர்களிடம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அங்கு விரிவுரையாளராக 7 ஆண்டுகள் பணியாற்றினார். தலைசிறந்த உரைநடை எழுத்தாளராக புகழ்பெற்றார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வல்லமை பெற்றவர், இரண்டிலுமே நூல்களைப் படைத்தார்.

* காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணியில் சேர்ந்தார். 1964 முதல் 1970 வரை அதன் முதல்வராகப் பணியாற்றினார். மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து அழைப்பு வந்ததால், அங்கு 7 ஆண்டுகளுக்கு மேல் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

* மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தராக 1979 முதல் 1982 வரை பணியாற்றினார். அப்போது, பண்டிதமணி அரங்கை நிறுவினார். பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன், அங்கு தமிழ் ஆய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.

* தமிழில் பல புதிய சொல்லாக்கங்களை தந்தவர். வீட்டிலும் கலப்படமற்ற தூய தமிழில் பேசினார். தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தினார். தமிழ்வழி கல்வி இயக்கம் என்ற அமைப்பின் தலைமைப் பொறுப்பேற்று, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டார்.

* துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, திருவனந்தபுரம் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளர் என்ற பதவியில் ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். தொல்காப்பிய ஆய்வு மேற்கொண்டு, நூலாக எழுதி வெளியிட்டார். தொடர்ந்து பல நூல்களை எழுதினார்.

* திருக்குறள் நெறிகளின்படி வாழ்க்கை நடத்தினார். தன் சொத்தில் ஆறில் ஒரு பங்கை அறநிலையத்துக்கும், தன் சொந்த ஊரில் இலவச கல்வி, மருத்துவம் போன்ற சேவைகளை வழங்குவதற்காகவும் உயில் எழுதிவைத்தார். தன் நூலக நூல்களை அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு வழங்குமாறும் உயிலில் குறிப்பிட்டிருந்தார்.

* தினமும் அதிகாலையில் எழுந்து 4 மணி நேரத்துக்கு மேல் புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர். கடுமையான உழைப்பாளி. சங்க இலக்கியங்களைத் தன் நுனிநாக்கில் வைத்திருந்தவர். மூதறிஞர், செம்மல், முதுபெரும் புலவர், பெருந்தமிழ்க் காவலர் என்றெல்லாம் போற்றப்படும் வ.சுப.மாணிக்கம் 1989 ஏப்ரல் 25-ம் தேதி 72-வது வயதில் மறைந்தார்.


ராஜலட்சுமி சிவலிங்கம்

எழுதியவர் : (17-Apr-17, 9:25 pm)
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே