அதோ அந்த பறவை போல- கவிஜி

மாலை 5 மணி ஆகும் போதே ஊரெல்லாம் கட்டிய மைக் சீர்காழியின் குரலில் அதிரத் தொடங்கும். மனதுக்குள் கடலை மிட்டாய்களும்... தேன் மிட்டாய்களும் குதியாட்டம் போடத் துவங்கும்.

அம்மாவுக்கு தண்ணீர் பிடிக்க....காலை இட்லிக்கு மாவாட்ட.... இரவு சாப்பாடு வேகும் அடுப்பெரிக்க......வீடு பெருக்க.....என்று அதகளம் செய்வேன். நான் மட்டுமல்ல என் பக்கத்து வீட்டு சுமதி.....சங்கீதா.....குமார்...செல்வராணி.... சுப்பிரமணி...சிவக்குமார் என்று அவர்களும் அப்படித்தான். அந்த மாலை நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சு மிட்டாயைப் போல பிய்த்து வாய்க்குள் போட்டபடியே இருப்போம்.

அவ்வப்போது வாசல் வந்து நண்பர்கள் கூடி பேசிக் கொண்டு...." இன்னும் கொஞ்சம் நேரம்தான..சீக்கிரம்... போய்டலாம்...." என்று பேச பேசவே.... இருப்பதிலேயே சின்ன வாண்டுகள் பிரேம்குமாரையும்... பிரியாவையும் இடம் பிடிக்க அனுப்பி இருப்போம். எங்க அம்மாக்களும் தோழிகளே. வாசல் தாண்டி எட்டிப் பார்த்து முணு முணுத்தபடியும் தூரத்தில் இருந்தபடியே..." என்ன பூபதிக்கா......இன்னும் சமையல் முடியலையா" யென.. என்று கேட்டுக் கொண்டும்... தண்ணீர் பிடித்தபடியே..."விஜி மாவாட்டிட்டு இருக்கான்.... எனக்கு வேலை முடிஞ்சுது.... முருங்கைக்காய் குழம்புக்கா... தாளிச்சு விட்டா முடிஞ்சுது... கிளம்ப வேண்டியதுதான்....."என்று சொல்லும் என் அம்மாவுக்கு முன் ஓடி வந்து..." மம்மி.... மாவாட்டிட்டேன்.....வந்து பாருங்க போதுமானு" கேட்கும் போது.. முதல் அறிவிப்பு வந்திருக்கும்.

"பெரியோர்களே தாய்மார்களே...நண்பர்களே... நீங்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த புரட்சி தலைவர் நடிக்கும் "ஆயிரத்தில் ஒருவன்" திரைப்படம் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பிக்க இருக்கிறது. ஆங்காங்கே நின்று கொண்டிருப்பவர்கள்....... இன்னும் வீட்டில் வேலை செய்து கொண்டிருப்பவர்கள் சீக்கிரம் கோவில் திடலுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது"

தேன் வந்து பாயும் சொற்களை சுமந்த அந்த குரலுக்குள் ஒரு சினிமாவின் தூரங்கள் அடை பட்டிருக்கும். அது ஆசுவாச வார இறுதி நாளின் அற்புத கொண்டாட்டம்.

அந்த மாலை இரவின் வாசத்தில் மிதந்து கொண்டே எங்கேயோ நின்று விட்ட பால்யத்தின் தலையெங்கும்... "ஆயிரத்தில் ஒருவன்" விரிந்து வழிவதை இன்னும் என்னால் உணர முடிகிறது.

"அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்" என்று பாடும் போது அன்றைய இளந்தாரிகள்.... பின்னால் நின்று கொண்டு கூச்சலும் கும்மாளமுமாக அள்ளி வீசிய இசை நுட்பங்கள் இன்னும் என்னுள் நிரவிக் கிடக்கிறது.

படம் முடியும் வரை அநேகமாக கொட்ட கொட்ட முழித்துக் கிடந்த சில சிறுபிள்ளைகளில் நான் முதன்மையானவன். படம் ஓட ஓடவே திரைக்கு பின்னால் சென்று இந்த திரைக்குள் எப்படி "எம்ஜிஆர் வந்தார்.....? கடல் எப்படி வருகிறது....!" என்று யோசித்த தருணங்களை இன்னமும்... பிலிம் சுருளாக என்னுள் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். அடுத்த ஒரு வாரத்துக்கு அந்த படத்தைப் பற்றியேதான் பேசித் திரிவோம். சண்டைக் காட்சிகளை ஒருவருக்கொருவர் விவரித்துக் கொள்வதில் சண்டையே வந்திருக்கிறது. ஆளுக்கொரு குச்சி கொண்டு கத்தி சண்டை போட்டு காயம் கொண்ட தழும்பை ஈஸ்ட்மேன் வண்ணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

அது ஒரு கனா காலம். ஆயிரத்தில் ஒரு நாள் அது. அகம் நிறைந்து வாழ்ந்த அற்புத சினிமாவின் சனிக்கிழமை சாகா வரம் பெற்றிருக்கிறது. பெறுக இவ்வையகம் என் சினிமா சூட்டின் துளிர்த்த பெரும் பனிக்கு என் நினைவுகள் திரை புகும் சிறு பறவையென......"அதோ அந்த பறவை போல தான்....."

கவிஜி

எழுதியவர் : கவிஜி (17-Apr-17, 9:53 pm)
பார்வை : 168

மேலே