புரியாமல் திரிபவர் பலர்

​ஒற்றை உருவமாய்
பாதையில் நடக்கையில்
உள்ளத்தில் உள்ளவை
இணைந்து ஒலிக்கும்
கடந்தவை கீச்சுக்குரலில்
நிகழ்பவை பேச்சுவழக்கில்
வருபவை புரியாவடிவில் !

எண்ணங்கள் ஏற்ற இறக்கமுடன்
கற்பனைகள் கலைந்த கோலமாகும் !
இதயமும் கிழிந்த ஆடையாகி
குழப்பங்கள் தேங்கிய குட்டையாகும் !
நகரும் பாதங்கள் நடனமாடும்
அறியாத பாதைக்கு மாற்றிடும்
விரும்பாத ஊருக்கு வழிகாட்டும் !

வரும்வழி அறிகின்ற வாழ்க்கை
செல்லும்வழி அறியாதது இயற்கை
தங்கிட நினைத்தால் தாங்காதுபூமி
செல்வம் கொழித்தவனும் ஏழையும்
இணைத்திடும் இடமும் இடுகாடென
கருத்தாய் கூறினான் கவியரசனும் !

பணத்திற்கும் பதவிக்கும் போட்டியிங்கு
குறுக்கு வழியில் குறுநிலமன்னராக !
அடுத்தவர் சொத்திற்கும் ஆசைதான்
அரசாங்க பணத்திலும் பங்கீடுதான் !
வாழப்போவதும் ஓரிடத்தில் தானே
சாப்பிடுவதும் ஓர்தட்டில் தானே
மறந்து அலைவதும் மண்ணிலே ....

கைப்பிடிச் சோற்றுக்கும் வழியின்றி
கையளவும் காசுபணம் பார்க்காமல்
கைத்தடித் தாங்கும்வரை வாழ்பவனும்
கைதேர்ந்த அறிவாளியும் முதலாளியும்
கைக்கோர்த்து உயர்ந்து வாழ்ந்தாலும்
கைமண் சாம்பலாகிறான் இறுதியில்
மண்ணோடு மண்ணாகி மறைகிறான் !

புரிந்து வாழ்பவர் புவியில் சிலர்
புரியாமல் புலம்பித் திரிபவர் பலர் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (18-Apr-17, 3:38 pm)
பார்வை : 551

மேலே