அவளல்லாது அதையாறும் அறிந்திருக்கமாட்டார்கள்!

அவளல்லாது அதையாறும்
அறிந்திருக்கமாட்டார்கள்!

அந்த கூரைவீட்டின்
நட்டநடுவில்
வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டிருந்த
ஒருக் கிழவியின் பிணம்
தலைக்கருகே கொழுத்தப்பட்ட
இரண்டு தீபங்களால்
அலங்கரிக்கப்பட்டிருந்தது!

பெயருக்கு போடப்பட்ட
பந்தலும் பிறரமர நிறுத்தப்பட்ட
நாற்காலிகளும்,கோர்க்கப்படாமல்
கூடைகளில் பூக்களும்…. நீண்ட
நாட்களுக்குப் பின் அவள்வீட்டிற்குள்
வாசம் செய்திருந்தன போலும்!

ஒப்புசொல்லி அழுகிறப்
பழக்கம் அந்தக் கிராமத்திலும்
குறைந்துபோயிருந்தது ஒருவேளை
யாருக்கும் தெரியாமல்கூட
போயிருக்கலாம் அல்லது
தெரிந்த சிலக்கிழவிகளுக்கு இவள்
பெரியப்பிழை இழைத்திருக்கலாம்….
தெரியவில்லை!

அநேகமாக அவள்தான்
கிழவியின் மூத்தப்பிள்ளையாயிருப்பாள்
அம்மா என்று கதறிய
சிலரில் அவளுக்குத்தான் அதிக
வயதாகியிருந்தது! பாவம்
அந்தக் கதறலின் கண்ணீரில் மட்டுந்தான்
தன் செஞ்சோற்றுக் கடனை
தீர்த்துக்கொண்டிருபாளவள்!

என்ன நடக்கிறதென்றுப்
புரியாமல் அந்தக்கூரைவீட்டின்
வாசலில் குழிபறித்துக்
கொண்டிருந்த ஒரு ஏழெட்டு
சிறுவர்கள்தான் கிழவியின்
பேரர்களாயிருப்பார்கள்…. நாவிதர்
அவர்களைத்தான் நெய்ப்பந்தம்
பிடிக்கச்சொன்னார்!

பிறந்துவீட்டுக் கோடியும்
புகுந்தவீட்டுக் கோடியும்
மாறி மாறி போர்த்தப்பட்டு
குளித்து நீராடி மஞ்சள்பூசி
குறுகிய மூங்கிலெடுத்துப்
பாடைக்கட்டி பயணத்துக்கு
தயாராகயிருந்த சவம் பத்துமயிலுக்கு
அப்பாலிருந்த கடைசி
மகனுக்காக இன்னும் கொஞ்சநேரம்
காத்திருந்தது!

இப்போது ஒளியுணராது
உறங்கிக்கொண்டிருக்கும் அவளது
கண்களும் , உணர்வறியாது
வேகக்காத்திருக்கும் உறுப்புகளும்,
உயிரோடிக்கும்போதே இந்த
உறவுகளின் ஸ்பரிசங்களையெல்லாம்
எதிர்பார்த்திருக்கக் கூடும்!

-பிரகாஷ்

எழுதியவர் : ப.பிரகாஷ் (28-Apr-17, 7:13 pm)
சேர்த்தது : பிரகாஷ்
பார்வை : 57

மேலே