காதல் முரண்பாடுகள்
காதலே முரண்பாடுதான்!!!
காலம் திருத்த விரும்பாத
தேகப்பிழை - காதல்!!!
சிந்தனையை தவறவிட்ட இடத்தில் தான்
காதலைத் தேடி எடுத்தேன் - சிந்தித்தபடி...
காதல் மேடையில்
கண்களே முதலில் பேசுகின்றன!!! -
வாய் இருந்தும் ஊமை - வாய்...
வாய் பேசப் பார்க்கிறது
கண் பேசிப் பார்க்கிறது -
பணிப்பிழை - திருத்தமாய்...
உயிர் குடிக்கும் பார்வைதான்
உயிரையும் கொடுக்கிறது -
பார்வைக்கோளாறு - பார்க்கப்படாமல்...
உயிரைக் கண்களால் காண முடியாதாம்...
யார் சொன்னது ? - எதிரில் நீ...
களவு போன இதயத்தைக்
கண்டுபிடித்தும் திரும்பப் பெற
மனமில்லை எனக்கு - களவாடியது நீ...
பறித்தவரும் பறிகொடுத்தவரும்
மகிழ்வில் - காதல் களவில் மட்டும்...
நீ இல்லாத நாட்களை மட்டும்
காட்டியபடி நாட்காட்டி - கிழியாமல்...
வெட்கம் உருகும்போது தான்
இமைகள் உறைகின்றன -
இதழ் வியர்க்கும்
முத்தங்களின் குளிரில்...
- பா.வெ.