போர்வை வேண்டும் நீ தர வேண்டும்

வண்ணப் பறவைகள்
வழிந்தோடும் நீரோடை
பட்சிகள் சலசலப்பு
பாதையெங்கும் பூத்தூறல்
பொழுதும் சாய
பூவையவள் உடலுரச
கைகோர்த்து வழியேநான்
கதைபேசி நடக்கின்றேன்

தண்ணீர் குளித்து
தலைதுவட்ட வந்ததென்றல்
விளையாட்டாய் என்னில்
விசிறிவிட்ட நீர்த்துளிகள்
தேகம்நனைத்து நடக்கும்
திசையெல்லாம் நான்நடுங்க
உடலாடை கொண்டெனக்கு
ஒத்தடம் கொடுத்திட்டாள்
கனியமுதுக் கற்கண்டைக்
கடைந்தெனக்குத் தந்திட்டாள்

இன்னொன்று அதுபோன்று
எனக்கவள் தரவேண்டும்
வழியொன்றும் அறியாமல்
வதங்குகிறேன் வாடுகிறேன்
எப்போது நீவருவாய்
ஏந்திழையே கூறிவிடு
தரும்நாளைக் கூறிவிட்டால்
தெப்பமாய் நான்நனைந்து
வரும்வழியைப் பாத்திருப்பேன்
விழிபூத்துக் காத்திருப்பேன்

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (30-Apr-17, 4:04 pm)
பார்வை : 134

மேலே