கவியரங்கம் --- கவியுலகப் பூஞ்சோலை

எரிதழல் கொண்டு வா -- கவியரங்கம்


தமிழ் வணக்கம் :-


தாய்மொழியாம் தமிழ்மொழியைத் தாள்பணிந்து வணங்குகின்றேன் .
வாய்மொழியாய்ப் பேசிடவும் வகையானத் தாய்மொழியே
சேய்போல எனைக்காக்கும் செந்தமிழாம் தாய்மொழியே !
தாய்போல எண்ணுகின்றேன் தமிழ்மொழியே நீவாழ்க !


தலைமைக்கு வணக்கம் :-

நடுவருக்கு வணக்கத்தை நற்றமிழில் உரைத்திடவே
விடுகின்றேன் கவிதைவரி விடிவெள்ளி போன்றதொரு
படுகின்ற எழுத்துக்கள் பண்புடனே ஈர்த்துவிடும்
தொடுகின்ற வானுலகம் தொல்லுலகைத் தொட்டுவிடும் .


அவையடக்கம் :-


இறைமையினை வணங்குகின்றேன் இடைவிடாது போற்றுகின்றேன்
திறமையுடன் கவியரங்கைத் திக்கெட்டும் பரப்பிடவே
உறைகின்ற தெய்வத்தை உளமார வணங்குவிட்டு
பறைசாற்ற வருகின்றேன் பாவலரே கேட்டிடுவீர் !



எரிதழல் கொண்டு வா --- பெண்ணினம் காத்திட .


சமுதாயம் வாழவேண்டின் சாத்திரமாய் பெண்ணினமும்
அமுதாகவே பரவிடவும் அகமகிழ சாற்றுகின்றேன்
குமுதாயம் இந்நெறியை குப்பையிலே எறிந்தாலும்
அமுதமென பெண்ணினத்தை அகிம்சையுடன் நாட்டிடுவோம் .



பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் .
பொதுவாழ்வில் ஈடுபடல் வேண்டும் .
கண்களெனப் பாதுகாத்தல் வேண்டும் .
கருத்தோங்க வாழ்ந்திடவும் வேண்டும் .
அடுப்பூதும் நிலைமாறிட வேண்டும் .
ஆடவர்க்கு நிகரெனமாறிட வேண்டும் .
பெண்ணடிமை நீங்கிடல் வேண்டும் .
பெண்ணினம் ஓங்கிட வேண்டும் .
சாதனைகள் புரிந்திடல் வேண்டும் .
சமுதாயம் நிலைபெற வேண்டும் .
சுதந்திரம் கிடைத்திடல் வேண்டும் .
சுகமதை பெற்றிடல் வேண்டும் .


பிறந்தவீடு பெண்டிர்க்குப் பிசகாது பெருமைதரும் .
உறவாடும் இரத்தபந்தம் உயிராக மதித்திடுவர் .
மறவாது பெண்ணினத்தை மங்கலமாய் நடத்துவராம் .
சிறந்தோங்கிப் பென்மையுமே சிறப்பாக வாழ்ந்திடுவர் .


புகுந்தவீடு பெண்டிர்க்கு புகழ்சேர்க்கும் வீடன்றோ ?
தகுந்தவிடம் கிடைத்துவிட்டால் தரத்திற்கோ பஞ்சமில்லை .
வகுத்தவழி சிறந்துவிட்டால் வாழ்வுநெறி அதுவன்றோ
புகுந்தவீடும் பெண்மைக்குப் புதியதோர் உலகன்றோ ?


காலையிலே எழுந்தவுடன் காத்திடுவாள் குடும்பத்தை .
வேலையிலே செல்லுமிடம் வென்றிடுவாள் பல்லோர்முன்.
பாலையிலே நின்றாலும் பசுந்தளிராய் ஒளிர்ந்திடுவாள்
மாலையிலே வந்தபின்னும் மறவாதீர் பெண்மையினை .


பெண்மையினைப் பேணுதலில் பெண்களுமே பெரும்பங்கை
வெண்மதியைப் போன்றவராய் வெல்கின்றார் ஈங்கின்றே .
புண்படாது பெண்மையினைப் புன்னகையால் பேணுகின்றார் .
விண்ணிலுள்ள கதிரோன்போல் வியன்பொருளாய்ப் போற்றிடுவோம் .


பேணுதலில் ஆண்களுமே பெரும்பங்கு வகித்திடுவர் .
நாணுதலில் பெண்மைக்கு நன்னெறிகள் சொல்லிடுவார்
பூணுதலில் மணக்கோலம் பூவையர்க்கு அழகென்பார் .
காணுதலில் ஆண்களுமே காரிகையைப் பேணிடுவார் .


சமுதாயம் பெண்களுக்குச் சமமான நிலைதன்னை
அமுதமாய்த் தந்துள்ளார் அன்னையர்க்கு உயர்வுநிலை
சமுதாயம் பெண்மையினைச் சந்ததியாய்ப் பேணுதல்போல்
குமுதமாய்க் கோபுரமாய் குவலயமாய் நின்றிடுதே .


உலகினையே செதுக்கிடுவாள்
உருகொடுப்பாள் உணர்வுடனே !
பலரறியச் செய்கின்ற
பராசக்தி பெண்களன்றோ !


மலரணைய மனத்தவராம்
மணம்வீசும் மங்கையரே !
சிலபோதும் சோம்பலின்றிச்
சித்திராமாய் இயங்கிடுவாள் !


உறவுகளின் நெஞ்சத்தை
உயிராகப் பேணிடுவாள் !
மறவாது மக்களையும்
மாதரசிக் காத்திடுவாள் !


திறவுகோலும் இவள்தானே !
திக்கெல்லாம் கடமைகளே !
பறந்தோடிச் செயல்படுவாள் !
பண்பாளர் பெண்களுமே !


நன்றியுரை :-


நன்றிசொல்ல வார்த்தையில்லை நற்றமிழர் சபைதனிலே
குன்றிமணி போன்றநானும் குறையறிவே கொண்டவளே
சின்னவளாம் எனைநீங்கள் சிறப்புப்பெற வைத்திடவே
மன்றினிலே எனைஎற்றி மகிமைதனைப் பெறச்செய்தீர்


நன்றி !!! வணக்கம் !!


ஆக்கம் :-

பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
திருச்சி , தமிழ்நாடு , இந்தியா .

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (30-Apr-17, 5:22 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 121

மேலே