நகரத்து மனிதன் நச்சு கழிவுகளை நம்பி
புல் மேய்ந்த பசுக்கள்
அரும்புகளுக்கு
பசிக்குமென
மடிதளர்த்தி காத்துக்கிடக்க……!
மொட்டுகள் காற்றுடன் மோதி
மலர் எனும்
அடுத்த அடையாளம்
காண துடிக்க……!
காக்கை தன் அலகால்
கொத்திய இரையை
தன் இனத்துடன்
பகிர காத்து கிடக்க.....!
உழவனின் ஏர் கலப்பையினால்
சிக்கி செத்து மடிவேன் என தெரிந்தும்
மண் புழுக்கள் காற்றினை உட்புக செய்து
மண்ணை பொன்னாக்க……!
மண் சட்டிகள், கயிறு தரித்த
உரியில் தொங்கி
கம்மங்கூழை நொதியாக்கி
பண்டைய உணவை பறை சாற்ற…..!
களிமண்ணை சுமந்து
மர சக்கரம் காற்றினை எதிர்த்து சுழல
குயவனின் வாழ்க்கை சக்கரமும்
சேர்ந்தே சுழலுமென நினைக்க......!
மனித இனம் பசியோடு
புசிக்க காத்திருப்பான் என
விதைத்த விதைகள்
மண்ணை எதிர்த்து போரிட……!
ஏர் உழும் காளைமாடுகள்
நாளை உழைக்க வேண்டுமென
லாடம் அடித்து ரணமான
புண்களையும் தாங்கிட……!
நாளை நம்மை களத்தில்
அடிப்பார்கள் என அறிந்தும்
நெற்கதிர்கள் சிரம் தாழ்த்தி
வணங்கி கிடக்க..…!
நகரத்து மனிதன் மட்டும்
உறங்கிகொண்டிருக்கின்றான்
இன்னும் விழித்துக்கொள்ளாமல்
நாளைய வாழ்க்கை
நன்கு அமையுமென
நச்சு கழிவுகளை நம்பி……!