எழுத மறந்த கவிதை அவன்

............எழுத மறந்த கவிதை அவன்.......

நான் கொண்ட மௌனத்திற்கு
புது மொழிகள் தந்தவன் அவன்

விழிகள் கேட்ட கேள்விகளுக்கு
உதட்டால் விடைகள் சொன்னவன்
அவன்...

என் மனவானிலே எட்டாம்
வானவில்லை வரைந்தவன்
அவன்...

என் வெட்கம் சொல்லிய
பாசைகளுக்கு பார்வைகளை
பாணங்களாய் வீசியவன் அவன்..

எனக்குள்ளே மாயங்கள் செய்து
என் இருதயத்தின் மாற்றங்களை
உணரச் செய்தவன் அவன்...

காதலை பதிலாய்த் தந்து
காலங்களை இடைவெளியாய்
விட்டுச் சென்றவன் அவன்...

வெற்றிடங்களில் வண்ணம் சேர்த்து
உள்ளத்தின் வெறுமைகளுக்கு
தன் உறவென்னும் முகவரியைத்
தந்து சென்றவன் அவன்...

கனவுகளில் கவிதைகள் சொல்லி
என் இரவுகளைக் கொள்ளை
கொண்டவன் அவன்...

என் வலிகளை வரங்களாக்கி
மனக் காயங்களுக்கு தன்னையே
மருந்தாகத் தந்தவன் அவன்....

இத்தனையும் தந்தவனை
என் இதயத்தின் பக்கங்களில்
எழுதிட மறந்துவிட்டேன் கவிதையாக
அதனால் தான் அவனும்
இருந்துவிட்டான் என் கற்பனைகளின்
காதலனாக...

-சகி-

எழுதியவர் : அன்புடன் சகி (13-May-17, 8:41 pm)
பார்வை : 963

மேலே