அவனுடைய அம்மா
அவனுடைய அம்மா
===================
எல்லோரும் அவங்களை சரியில்லாதவன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க, எங்க வீட்ல உள்ள ஆளுங்களும்
அவன் கூட சேராதேன்னு சொல்லுவாங்க, அந்த தெருவை கடந்து போவது கூட கேவலமாப்பார்க்கப்படும்,
என்னையும் அவங்களையும் கூட சேர்த்து வச்சு பேசும் வயசா அப்போ எனக்கு ம்ம்,
தெரியலை ஒரு பத்து பதினோரு வயசிருக்கும் எனக்கு அப்போ, நல்லவங்க, குடும்பஸ்தன்னு சொல்ற யாராச்சும் ஏதோ வேலை இருக்கும் பட்சத்தில் கூட அந்த தெருவழியே போயிட்டா அவ்ளோதான், அதுக்கப்புறம், அவங்ககிட்ட நூறுமுறை போயிட்டு கூட வந்துடலாம் போல அவ்ளோ சபிக்கப்படுவா, அவளோட ராத்திரிகள் எப்படிப்பட்டதுன்னு, யாராலயும் ஊகிக்கமுடியாது,, அவளைப்பொறுத்தவரை ஒரு ராத்திரி உயிரோடு கடந்துட்டான்னாலே பெரிய விஷயம், சொந்த சமுதாயத்தை சேராத பெரிய பெரிய ஆளுங்க எல்லோருடைய அம்பாசிடர் கார்களும் ராத்திரி அவங்க வீட்டு முன்னால நிற்பதை, ஊராளுங்க பார்த்திருப்பாங்க, , அந்த பொம்பளைக்கு அரிப்பெடுக்குது, அவன் புருஷனோடுது பத்தலை ன்னு சபைக்கு முன்னால் சொல்ற ஒவ்வொருத்தனையும் அப்போ கேக்க ஆம்பளை இல்லை, அவங்கப்போற பஸ்ஸுல ஏறுற ஆம்பளைன்னு சொல்லுற எவனும் அவளோட பிருஷ்டத்தைப் பார்த்துதான் நிப்பான், ஊட்டியில காலம்பரமே சில இடத்தில் நான் அவங்களைப்பார்த்திருப்பேன், ஓடிப்போய் பார்ப்பேன், கையில என்ன இருந்தாலும் கொடுப்பாங்க, மூக்கு க்ளீனா இருக்கா, சாப்பிட்டு வாயை சரியா தொடைச்சேனா இல்லையா ன்னு எல்லாம் பார்ப்பாங்க, ஆனால் அவன் என் நண்பன்,
என் காதுப்படவே பேசுவாங்க
அவ பெரியாளுங்ககிட்ட மட்டுந்தான் போவா ன்னு, பிறரின் பேச்சுகளுக்குப்பின்னால் கண்ணீரை அடக்குவது எவ்வளவு சிரமம் என்பதை அறிந்திருப்பேன், ஆனா அவங்க அதை காதிலேயே வாங்கிக்கொள்ளாமே, என்னையும் அவனையும் அவனோட அம்மா கவனிப்பாங்க,
என்னோட டைரியில் நான் எழுதியிருப்பேன்
"அப்பொழுதைய சூழலில், எங்களை அணைத்து சேவைகள் செய்துக்கொண்டிருக்கும் அவனுடைய அம்மா, நாங்கள் வளர்ந்தப்பிறகு எங்களை விலக்கிவைத்துவிட்டாள், சொந்த மகனென்றுப் பார்க்காமல்,
அவனையும் கூடி அவளோடு சேர்த்துவைத்து பேசிவிடக்கூடும் நாவுகளுக்காக"
இதெல்லாம் ஏன், எதுக்காக, எல்லாம் அவன் என்னோடு படிக்கவேண்டும், என் அந்தஸ்திலிருக்கும் எல்லோரோடும் அவன் சமமாய் இருத்தப்படவேண்டும் என்று,
புருஷன் கூட வாழத் தெரியல, ன்னு சொல்றவங்களுக்கு, கட்டிக்கிட்டவன்லாம் புருஷனாகிட முடியுமா ன்னு கேக்க அப்போ எனக்கு விவரம் போதலை,
எல்லோரும் அவனை, வேசி மகன் ன்னு கூப்பிட தொடங்கிய ஆரம்பத்திலிருந்தே அவன் அமைதியாக
கடப்பதைப்பார்க்கையில், அவன் மனநிலை வளரும்போது பெரிதும் பாதிக்குமோ என்று எங்கப்பா அப்போ யோசிச்சாரு, ஸ்கூல் மதில் சுவருக்கு முன்னால இருக்கிற இருக்கையில் அவனையும் என்னையும் இருத்தி அவனோடு பேசிப்பார்த்தாரு,
அப்போ அவன் இதை சொல்வதைக்கேட்டு அப்பா ரொம்பவே மனசு கஷ்டப்பட்டாரு
""தினமும் ராத்திரி நான் தூங்கமாட்டேன், அம்மா என்னை திண்ணையில போயி உக்கார சொல்லுவாங்க, நானும் போயி உக்காந்துப்பேன், மணி சரியா பதினோரு ஆனதும் அம்மா உள்ள இருந்துகிட்டே யாராவது வாரங்களான்னு பார்க்க சொல்லுவாங்க, நான் ஓடிப்போய் பார்ப்பேன், திரும்ப வந்து இல்லம்மா ன்னு சொல்லுவேன், கொஞ்சநேரம் கழிச்சு, அம்மா மீண்டும் கூப்பிட்டு, கீழ ரோடுவரை போயி , வெள்ளை அம்பாசிடர் காரு ஏதாவது நிக்குதான்னு பாருன்னு அனுப்புவாங்க, அப்போ மணி நள்ளிரவு பன்னிரண்டைக் கடந்திருக்கும், நான் மோட்டார் பைக் ஸ்டார்ட் செய்வதுபோல சப்தமிட்டுக்கொண்டே போய் பார்ப்பேன், ரெண்டு மூணு காரு நிக்கும், திரும்ப வந்து அம்மாகிட்ட ஆமாம்மா ன்னு சொல்லுவேன், எத்தனை காருன்னு கேப்பாங்க, சொல்லுவேன், இது மூன்றாம் முறை மணி பன்னிரண்டரையைக் கடந்திருக்கும், அவங்க எல்லோரையும் மெதுவா ஒவ்வொருத்தரா, வரசொன்னாங்க ன்னு அம்மா சொன்னதா சொல்லு போ ன்னு சொல்லுவாங்க, நான் சொல்லிட்டு
மீண்டும் ஓடிவந்து திண்ணையில் உக்காந்துக்குவேன், ஒரு காருல மூணு பேரு ரெண்டு பேரு வீதம் இருப்பாங்க, ஓரோருத்தரா வருவாங்க, முதல் ல வாறவரோட கையில அரிசிப்பருப்பு பை இருக்கும்,
அவர் போனப்பறம், இன்னொருத்தர் வருவாரு, அவரோட கையில காய்க்கறி பை இருக்கும், கொஞ்சநேரத்தில் அவரும் போயிடுவார், மூணாவது ஆளு வர்றதுக்குள்ள மணி நள்ளிரவு இரண்டரையை தாண்டிடும், நானு அங்கேயே தூங்கி போயிடுவேன், காலையில எழுந்து கதவைத் திறந்து உள்ள போயி பார்க்கும்போது, எங்கம்மாவை என்னாலே நெருங்க முடியாது, வழிபூரா, எல்லாவிதமான
வீட்டுச்செலவு பைகளும் குவிஞ்சுகிடக்கும், அதையெல்லாம் தாண்டி எங்கம்மாகிட்ட நெருங்கும்போது
அவங்க என்னைப்பார்க்க கூட முடியாத நிலையில மயங்கி போயிருப்பாங்க,,, முதல் மூன்றடியில
இருக்கிற அரிசி பருப்பு சர்க்கரைப்பைகள்,, எங்கிருந்தோ ஒழுகிப்போன குருதியில் முழுவதுமாய் ஊறிப்போய் கிடக்கும்""
இப்போ நீ எங்க இருக்கன்னு தெரியலடா, நீ இன்னும் என் நண்பன்தான், உன் அம்மா இன்னும் என் அம்மாதான் ம்ம்
"பூக்காரன் கவிதைகள்"