நான் பாடுகின்றேன்

நொண்டிச் சிந்து

பாடலில் கூத்தாடுவாள் - சக்தி
. பவனிவந் தென்னுளே ஆர்த்தாடுவாள் !
வாடிடா மலர்க்கூந்தலாள் - சொல்லும்
. வார்த்தைக்கு ளேவந்து பூத்தாடுவாள் !
ஆடலைக் கண்டகண்கள் - அண்ட
. மாயிரங் கண்டதாய்ப் பாட்டிசைக்கும்
பாடுமென் நாவினுக்குள் - அந்த
. பரசக்தி நின்றென்னை ஆட்டுகின்றாள் !

மின்னலின் ஒளியாகுவாள் - கண்ணில்
. மின்னிடும் இன்னொரு ரவியாகுவாள்
கன்னலின் சுவையாகுவாள் - காளி
. கவிதையின் வடிவிலே கனியாகுவாள்
இன்னலில் சுடராகுவாள் - நெஞ்ச
. எந்திரத் தில்படரும் கொடியாகுவாள்
என்னென்ன செய்திடினும் - என்னை
. ஏற்றும் விசையென வந்திருப்பாள் !

காற்றினிற் பேசுகின்றாள் - அன்னை
. காவிய மாயென்றன் எண்ணத்திலே
ஊற்றெழுந் தோடுகின்றாள் - சொல்லின்
. ஊர்தியில் உலகெலாங் காணுகின்றாள் !
ஆற்றல் அளித்துநின்றாள் - வாழ்க
. ஆதிபரா சக்தியெனும் கோஷத்திலே
வீற்றிருந் தோட்டுகின்றாள் - அந்த
. விசையிலே நாடொறும் பாடுகின்றேன் !

- விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (15-May-17, 5:05 pm)
பார்வை : 105

மேலே