கடிதமொன்று என்னுயிரின் உயிரே

என்னுயிரின் உயிரே !
எப்பொழுதும் உன் நினைவுகள்
நினைவுகள் இல்லையென்றால்
நான் இறந்து போயிருப்பேன்
எப்பொழுதோ....

விழிமூடினால் உன்பிம்மம்
திறந்திட்டால் உன்வருகைக்கான எதிர்ப்பார்ப்பு
மழைக்காலம் வந்திட்டால்
கண்களில் கண்ணீர் மழை
உனக்கு காய்ச்சல்
வந்திடுமோ என்ற பயத்தில்...

ஒவ்வொரு சோற்றுப்பருக்கையும்
சோளக்கதிராய் தெரிகிறது
உனைப் பிரிந்து நாளிலிருந்து
உனக்காக சிறுசோற்றை
ஒதுக்கி வைத்துவிட்டுத்தான் சாப்பிடுகிறேன்
நீ எந்தட்டில் சாப்பிடுகிறாய்
என்ற நிராசை நினைப்போடு ...
நானுறு நண்பர்கள்
நாள்முழுவதும் வேலை
உனக்கு இருக்கலாம்
உண்ணும் வேளையிலாவது
உனக்கு என் நினைவு வருமா...?
ஏனெனில்....
எனக்கு விக்கல்கள் வருவதேயில்லை...

நீ செய்த குறும்புகளை
நினைத்து நினைத்து
சிரிக்கின்றேன்...
அந்த குறும்புகளை
உன்னிடம் இப்பொழுது
நான் செய்திட வேண்டுமென்ற
நடவா நப்பாசையோடு...

தனியாக தேடிப்பார்க்கிறேன்
தவறிப்போன உன்னோடு
தறிகெட்டுப்போன மனதையும்...

இப்படிக்கு
உனக்காக
உன் நினைவுகளுடன் வாழும்
உன்னைப் பெற்றத்தாய்
முதியோர் இல்லத்திலிருந்து......

*****************
மே 2005ல் எழுதப்பட்டது.

எழுதியவர் : சிகுவரா (16-May-17, 5:17 pm)
பார்வை : 294

மேலே