காதலிக்கு ஒரு தூது

அன்புள்ள என்னுயிர் காதலியே!
என்னுயிரை உன் இதயம்
எனும் அடகு கடையில் வைத்துவிட்டு
நடைபிணமாக அலைந்து திரியும்
உன் நிழல் எழுதும் மடல்...

நீ…நான்…
என பிரித்துப்பேச
எனக்கு மனம் வரவில்லை...
என்மீது வீசப்பட்ட
காதல் வலையில் சிக்கிக்கொண்டு
என் உள்ளத்தில் கசிந்துகொண்டிருக்கும்
காதல் அருவியை – உன் காதில்
தேனருவியாக பாய்ந்தோட
ஒரு தூதுவனை தேடுகிறேன்....

பட்டாம்பூச்சியை
தூது அனுப்பலாம் என்றால்...
உனக்குத்தான் கம்பிளிப்பூச்சியை
பிடிக்காதே..!
மாறுவேடத்தை கலைத்துவிட்டு
உன்னை பயமுறுத்திவிட்டால்...?


ரோஜாவை
தூது அனுப்பலாம் என்றால்...
ரோஜாவுக்கு காவலன்
முள் எனும் தோழன்
பருத்தி பஞ்சினை விட மென்மையான
உன் பிஞ்சு விரலில் குத்திவிட்டால்...?
ஒரு துளி இரத்தம் வந்தால் – என் இதயத்தில்
ஒரு கோடி இரத்த செல்களும்
மடிந்து விடும் அல்லவா..!

நிலவை
தூது அனுப்பலாம் என்றால்...
பௌர்ணமி நிலவு போல்
உன் படர்ந்த அழகான முகத்தின் முன்
அமாவாசையாக அவன் வந்துவிட்டால்...?

என் சுவாசக்காற்றையே
தூது அனுப்பலாம் என்றால்...
தென்றலுக்கு பதிலாக புயலாக மாறி
உன்னை புழுதிபட வைத்துவிட்டால்...?
மண்ணுக்கு சொந்தமாக்கிவிடுவேன்
என் இனியவளை தாக்கிய புயலோடு...

எதிர்வீட்டு அம்முவை
தூது அனுப்பலாம் என்றால்...?
அவள் உன் அம்மாவிடம் சொல்லிவிட்டால்..?
நீ எனக்கு அம்மாவாக முடியாதே..!

என் நண்பனை
தூது அனுப்பலாம் என்றால்...?
என் கனவை – அவன்
‘மின்சாரக்கனவு’ போல் மாற்றிவிட்டால்...?
என் விழிகள் கனவு காணாது
ஏனெனில் பிணங்கள் கனவு காண்பதில்லை...

வேண்டாம்..
யாரும் தூது செல்லவேண்டாம்..
என்னவளுக்கு நானே
தூதுவாக செல்கிறேன்...
உன் விழியால் சொல்லிவிடு
உன் கையால் சொல்லிவிடாதே.!

என்னுயிரை திருப்ப
என்னிடம் எதுவுமில்லை
உன் இதயத்தை கடனாக கொடு..!
இல்லையெனில் மரணதையாவது கொடு..!
இரண்டுமில்லாமல் மௌனத்தை
கொடுத்துவிடாதே..! பெண்ணே..!

விருப்பம் இல்லையெனில்
உன்னை விட்டு நீங்குகிறேன்
உடலால் மட்டும் தான்
உள்ளத்தால் அல்ல..!

உனக்கு பிடித்த கணவனுக்கு
மாலையிடும் முன்
உனக்கு பிடிக்காத – ஆனால்
எனக்கு பிடித்த என் காதலியே...
உனக்கு பிடித்த
எனக்கு பிடிக்காத
உன் மனம் எனும் பிணத்திற்கு
மாலையிட்டுச் செல்...
உன்கையால் மாலையிட
நான் கொடுத்துவைக்கவில்லை
எனக்கு பிடிக்காத உன் கணவனாவது
கொடுத்து வைக்கட்டுமே..!

தற்கொலை செய்துகொள்வேன் என்று
தவறு கணக்கு போடவேண்டாம்...
தவறியும் உன் கண்ணில் படமாட்டேன் – என்
தகுதிகள் தற்பெருமை பேசாது.

இப்படிக்கு
உன் நினைவெனும் நிழலை
நிஜம் என்று நம்பி
வாழ்ந்துகொண்டிருக்கும்
நிஜமில்லாத நிழல்...

****************
சிகுவரா
ஏப்ரல் 2௦௦௦ ல் எழுதப்பட்டது.

எழுதியவர் : சிகுவாரா (17-May-17, 8:19 pm)
பார்வை : 592

மேலே