நெஞ்சு விடு தூது

#சிற்றிலக்கிய_வரிசை
********************************
தூது
******
நெஞ்சு விடு தூது
***********************
விதியின் விளையாட்டால் விண்ணகம் சென்ற
பதியை விருப்பொடு பார்த்துக் - கதியினைச்
சொல்லிட நெஞ்சினைத் தூது விடுப்பேன்யான்
கல்லுறை சாமியே காப்பு .
நூல்
******
பொற்றாலி கட்டிப் புதுவசந்தம் காணவைத்தே
உற்றதுணை யாயிருந்தான் ஊர்மெச்சப் பேரெடுத்தான் !

கல்யாண பந்தத்தில் கைபிடித்த என்பதியின்
நல்லழகில் மெய்சிலிர்த்து நாணிநிற்கும் தேன்பூக்கள் !

சுந்தரனைக் கண்டவுடன் சொந்தமென வேகருதித்
தந்தநிற வான்மதியும் தாரகையும் கண்கொட்டும் !

மன்னவனின் கம்பீரம் மன்மதனும் கொண்டதில்லை
என்னவனின் பேரழகிற்(கு) ஈடுசொல்ல யாருமில்லை !

கேசம் சுருண்டுவந்து கீழ்நெற்றி தொட்டிருக்கும்
வாசம் விலகாத வார்த்தைகளில் தேன்சொட்டும் !

செக்கச் சிவந்தவன்; சிங்கநடை யாலென்னைச்
சொக்கிட வைத்திட்ட தூயவன்; மாயனுந்தான் !

முத்துப்பல் புன்னகையால் மொத்தமாய் உள்ளமள்ளும்
வித்தையினைக் கற்றவன் வேட்டிகட்டும் காளையவன் !


பண்பிற் சிறந்தவன் பாசமழை பெய்தவன்
கண்ணின் இமைபோல் கருணையுடன் காத்தவன் !

அன்பில் கரைத்தவன் ஆண்மைமிகு கட்டழகன்
இன்னாசெய் தாரையும் இன்சொலால் ஈர்த்தவன் !

தாய்மை யளித்தவன் தங்ககுணம் கொண்டவன்
வாய்மை தவறா மனத்தை யுடையவன் !

நேரிழை யென்நெஞ்சை நெய்திட்டான் நற்பண்பால்
வாரிதிபோல் வற்றாமல் வாழ்வில் கலந்தினித்தான் !

பால்போலும் வெள்ளையுளம்; பாசம் உயிர்நனைக்கும்;
ஆல்போலக் காத்தவன் ஆனாலும் இன்றில்லை !

பட்டமர மாக்கியதில் பங்கவனுக் கேதுமில்லை
தொட்டணைத்த தூயவனோ தோற்றுவிட்டான் கூற்றனிடம் !
*
வேர்போலத் தாங்கியவன் வேதனையில் தள்ளிவிட்டுப்
பார்விடுத்து வான்புகுந்தால் பாவைமன மென்செய்யும் ?

சோர்ந்துவிட்டேன் இவ்வாழ்வில் சோகத்தில் ஊன்மெலிந்தேன்
தீர்மானத் தோடே தெளிவினைத் தேடுகிறேன் !

நெஞ்சே அனைத்தையும் நீயறிவா யன்றோசொல்
வஞ்சியென் ஆற்றாமை வார்த்தைகளால் சொல்லிவர

உன்னையன்றி யாருமிலர் உண்மையிஃ தென்பதனால்
நின்னையே தூதனுப்ப நேயமுடன் நான்நினைத்தேன் !

மூவேழ் வருடம் முழுதாய் முடிந்ததுவே
காவேரி ஆறுபோல் காய்ந்தமனம் பொங்கிடவே

தூதாக நீயேசெல் ! துன்பம் துடைத்துவிடத்
தோதான நல்வழியைத் தொய்வின்றித் தான்சொல்வான் !
*
காலனன்று கொல்கையில் காவாமல் விட்டதனால்
மாலவனைத் தூதனுப்பும் வாய்ப்பேது மில்லையிங்கே !

தென்றலைத் தூதுவிட்டால் தேவசுகம் தந்ததென்றே
என்னவனும் எண்ணிவிட்டால் ஏமாற்றம் மிஞ்சிடுமே !

மேகத்தை விட்டாலும் மெய்யதுவும் பேசுமோ
சாகசமாய் விண்ணுலவி சைகைகாட்டிப் போகுமோ ?

பூங்குயிலும் கான்மயிலும் போயென் கணவனிடம்
தாங்காத் தவிப்பினைத் தைரியமாய்க் கூறுமோ ?

பாங்கியைத் தூதனுப்பப் பக்கத்தி லில்லையவன்
ஏங்கவைத்த எந்தலைவன் எட்டாத் தொலைவிலுள்ளான் !

ஆதலினால் என்நெஞ்சே ஐயமின்றி நின்னையே
தூதனுப்பப் போகின்றேன் தோழமையாய் நீயேசெல் !

எப்படியோ சென்றுநீ என்னவனைக் கண்டிடுவாய்
செப்பிடுவாய் என்நிலையை! சேரும்நாள் பார்க்கச்சொல் !

விட்டுவிட்டுச் சென்றபணி மேதினியில் அத்தனையும்
தொட்டுமுடித் திட்டாள் துணிவுடன் என்றேசொல் !

கேட்டுவந்து சொல்வாயேல் கேடழிந்தே இன்புறுவேன்
ஆட்டுவித்த துன்பம் அடங்கிவிட மெய்குளிர்வேன் !

*
நெஞ்சேநீ என்பதியின் நெஞ்சறிந்து நற்பதிலை
அஞ்சாது வாங்கிவந்தால் அன்பி லுருகிடுவேன் !

நெஞ்சே ! உனைநான் நெகிழ்ந்து வணங்கிடுவேன்
கஞ்சமலர்த் தூவிக் கண்ணீரால் நீராட்டிப்

பாமாலை சூட்டிப் பரவசத்தி லாடிடுவேன்
சீமா னிடம்கொண்டு சேர் .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-May-17, 12:12 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 357

மேலே