கரையெல்லாம் கூழாங்கற்கள் -சிறுகதை- கவிஜி

கரையெல்லாம் கூழாங்கற்கள் -சிறுகதை- கவிஜி

இத்தனை மூர்க்கமாய் கை முட்டியில் அப்படி ஒரு அடி விழும் என்று நினைக்கவில்லை. . .இளமி !

இதுவரை இப்படி ஒரு காட்சியை சினிமாவில்....நாடகத்தில்..... அல்லது ஏதோ ஓர் ஊரில் யாருக்கோ நடந்த போது, டிவி செய்தியில் பார்த்ததோடு சரி. ஆனால் இன்று தனக்கே அது நிகழும் என்று அவள் ஒருபோதும் நினைக்கவில்லை.

அது நடந்தது...!

அத்தனை பெரிய லத்தி கொண்டு அந்த போலீஸ்காரன் அடித்த அடியில்.. கண்டிப்பாக கை மூட்டு எலும்பு உடைந்துதான் போயிருக்கும்.

படக்கென்று கை யாருக்கோ சொந்தம் போல உடலை விட்டு தனியாக தொங்குவது போல உணர்ந்தாள். மறத்து போன தலைக்குள் ரீங்காரமிடும் கோஷங்கள். சற்று முன் பேசிய... சத்தமிட்ட... வீர வசனங்கள்.... உரிமைக் குரல்கள்... போராளித்தனங்களின் கூட்டு முயற்சியின் சிவப்பு யுத்தங்கள் என்று எல்லாமே கண் மூடி திறக்கும் முன் காணாமல் போய்க் கொண்டிருந்தது. அடுத்த அடி முத்தத்தில் படுவேகமாய் வந்து விழுந்தது.

நன்றாக தெரிந்தது. அதே போலீஸ்காரன் தான். கையை மடக்கி இருக்கும் பலத்தையெல்லாம் ஒன்று திரட்டி அவளின் முகத்தில் குத்த முன் பல் ஒன்று உடைந்து தெறித்து ரத்தமாய் சொட்டியது.

ஏங்கிய பெருமூச்சில் அவளின் அவசரம் தன்னை வியர்த்திக் கொண்டிருக்க... அவனேதான். காலை நன்றாக மடக்கி அவளின் வயிற்றில்... உயிர் தடத்தில்...... பூட்ஸ் காலால் தொடர்ந்து உதைத்தான். இடி விழுவதை உணர்ந்த நொடிகள் சிறுநீரை சொட்ட வைத்தன. அவள் கூட்டத்தை துளைத்துக் கொண்டு பின்னால் எறியப்பட்ட பந்தைப் போல விசிறி எறியப்பட்டாள்.

"கூட்டம் சேர்ந்துட்டா என்ன வேணா பேசுவீங்களா..... திருட்டுத் ................................................... உன்................................................."

அவள் காதுகளில்.... கற்பு வழிவதாக உணர்ந்தாள். அவளின் பற்கள் தானாக அடித்துக் கொண்டன. பயத்தின் உச்சியில்.... கொஞ்சம் மலம் கூட கழித்து விட்டாள்.

மூத்திரம் வந்து விட்டது...மலம் வந்து விட்டது. பல் உடைந்து விட்டது. கை உடைந்து விட்டது. இருக்கும் ஆபாச சொற்களை எல்லாம் உமிழ்ந்து விட்டான். கால்கள் நடுங்கின. உள்ளுக்குள் ஏதோ உடைந்து கொண்டே இருந்தது. நா குழறியது. கொத்தோடு பற்றிய தலை மயிரில் சுதந்திரம் நன்றாக சிக்கிக் கொண்டது. கண்கள் மட்டும் அவனை வெறித்தன.

"என்னடி முறைக்கற" என்றபடியே கடும் சொல்லை முதலில் வீசி விட்டு ஒரு பக்க முலையை கொத்தாக பற்றி இழுத்து குனிய வைத்து கையை மடக்கி நடு முதுகில் நங்கென்று ஒரு குத்து விட்டான். நெஞ்சை கோழியைப் போல முன்னால் அழுத்தி கைகளை பின்னால் முடிந்த அளவுக்கு சேர்த்தி....குத்தின குத்தில் அப்படியே ஆகி விட்ட ஒரு நிலையில்.... .இழுத்து போட்டு அடித்ததில் ஜீன்ஸ் பேண்ட் பாதி கழன்று பாதி உள்ளாடை தெரிய மூக்கு கிழிந்து மூக்குத்தி தொங்க...வாய் கிழிந்து காதில் ரத்தம் சொட்ட...

"வேதா.... வெந்தாம்... கும்புத்தடின்.. விடு.. விடு.. யோயே.. அயோ.. வலிக்குது......அம்மா.... தப்பு... அயோ அயோ" என்று கீழே விழுந்து நாயைப் போல...முணங்கிக் கொண்டே சாலையில் பின்னோக்கி தவழ்ந்தாள் இளமி.

அவளை எப்போதும் தேவதை என்று சொல்லும் கூட்டம் அவளை மிதித்துக் கொண்டே அடி வாங்கி ஓடிக் கொண்டிருந்தது. வீரத்தின் வம்சங்கள்... ரத்தம் சொட்ட.... தலைவனின்றி....தேகமின்றி மிரண்டு கொண்டிருந்தது. எதையுமே சிந்திக்க முடியவில்லை. மூளையின் ஓட்டம் ஓரிடத்தில் சிக்கிக் கொண்டு நின்று விட்டது. வெற்று தலைக்குள் காயம் மட்டுமே முளைத்துக் கொண்டிருந்தது.


*****


அத்தனை பெரிய மழையையும் அவளே அனுப்பியது போல... ரசித்துக் கொண்டிருந்தாள் இளமி. கையில் போட்ட கட்டு கழுத்தோடு தொங்கிக் கொண்டிருந்தது. மழைக்குள் இருந்து நீண்ட கை ஒன்று அவளின் மூக்கை திருகி மூக்குத்தியை ரத்தம் சொட்ட பிடுங்கி செல்ல... வெற்றிடம் தடுத்து ஓ வென கத்தி மூச்சிரைத்தாள். இன்னும் விரட்டிக் கொண்டிருந்தது விதி.

நிதானம் அடைந்தாள். இன்று காலை குளிக்கும் போதும் கூட.. அவளின் நிர்வாணம் அசிங்கமாக தோன்றியது. சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் பாதியிலேயே நிறுத்தி சுற்றும் முற்றும் பார்க்கிறாள். தன் குறியில் அவனின் பூட்ஸ் காலின் தடம் இன்னும் ஒட்டிக் கொண்டிருப்பதாக நீரை ஊற்றி ஊற்றி தேய்க்கிறாள். எல்லாம் கனவென்று நம்ப மறுக்கிறது மனம். அப்படி நினைத்து வெளியே வா என்று கூறும் உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் என்ன சொல்லி என் குறியை சாந்தப்படுத்துவது என்று கேட்கத் தோன்றி அழுது விடும் முகத்தோடு ஒடுங்கி சென்று தொடுவானம் பார்க்க அமர்ந்து விடுவதில் ஒன்றுமே இல்லை அவளுக்கு.

வாழ்க்கையின் மிகப் பெரிய கனவையெல்லாம் ஒரு லத்தியும் ஒரு பூட்சு காலும் மாற்றி விடும் என்று இப்போது நம்பித்தான் தீர வேண்டும்.

மனமும் உடலும் உடைந்து போன போது இளமியின் அப்பாவுக்கு அவளை சொந்த கிராமத்துக்கு கூட்டி வருவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. மான் குட்டியென துள்ளி ஓடிய கிராமத்து ஒற்றையடிகளில்.... தோப்புகளில்...... ஆற்றங்கரையில்.... ஆற்று நீரில்.... அந்தி மாலையில்..... அத்தி மரத்தில்.... கொய்யா தோப்பில்.... பச்சை புல்வெளியில்...பால்ய சிநேகிதி விஷாகா என்று அவள் வாழ்ந்த பெறுவாழ்வின் இடத்தில் இருக்கையில், அவள் திரும்ப கிடைத்து விடுவாள் என்று அவள் குடும்பம் நம்பியது. ஊடக வெளிச்சம் அவர்களின் முகத்தில் அமிலம் ஊற்றிக் கொண்டே இருந்ததை அவர்களால் தாங்கி கொள்ளமுடியவில்லை. கொஞ்சம் மறைத்து அவளின் மலத்தையும் மூத்திரத்தையும் திரும்ப திரும்ப போட்டுக் காட்டியது.... மன்னிக்கவே முடியாத குற்றம். அந்த போலீசின் மறு உருவம். அவளால் அதை எதிர் கொள்ளவே முடியவில்லை. நடுத்தர வர்க்கம் முதலில் பேசி விடும் வீர வசனத்துக்கு மிச்ச வாழ்நாள் முழுக்க கப்பம் கட்டுகிறது. அவன் அடித்து செத்திருந்தால் கூட நன்றாக இருந்திருக்குமே என்று வாய் விட்டு முனகினாள்.

பட்டி மன்ற தலைப்பில் இளமிக்கு நடந்த சோகம் என்று ஊரே பர பரத்துக் கிடந்தது. வீட்டுக்குள் முடங்கி விட்டவளை ஒரு நோவாவின் சிறகு பொருத்தி கிராமத்துக்குள் கொண்டு வந்து திறந்து விட்டாள் விஷாகா. பறக்க இயலாமல் பருந்தின் தீர்க்கமென சூனியத்துள் நிலைத்திருந்தால் இளமி.

நேற்று இன்று நாளை என்று நாளை இன்று நேற்றாக இன்றும் நாளையாகும் நேற்றுக்குள் அவளோடு அவள் பேசிக் கொண்டே இருந்தாள். தொடர்பின் கண்ணியென இன்று இளம் பச்சை தாவணியில்... சிவப்பு கச்சையில் ... வெள்ளிக் கொலுசில்... சந்தன குங்குமத்தில்... ஜொலிக்கும் மூக்குத்தியில்... வலது பக்க வகிட்டில்... வேற்றுலகம் பூசி வந்து...... "வா ஆத்துக்கு போலாம்" என்றாள். ஒரு காலத்தில் எல்லாமுமாக இருந்த தோழி. இந்த நகர வாழ்வு பெரும்பாலான நேரங்களில் எல்லா உறவுகளையும் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி தூரத்தில் ஒரு விண்மீனைப் போல வைத்து விடுகிறது. எல்லா உறவுகளையும் மெல்ல மெல்ல நகர்த்தி ஒரு தை பொங்கலாக்கி விடும் கிராமம்.

எப்போது பார்த்தாலும் மனதுக்குள் முல்லை பூ ஒன்று பூத்து விடும் இளமிக்கு.

கண்கள் முழுக்க இரண்டு நட்சத்திரங்கள் மின்ன... ஆசையை சிரிப்பாக மாற்றி கொண்டாள். மறுகணம்... அவளின் சட்டையை மெல்ல அவிழ்த்து விட்டு..... இள மஞ்சள் நிறத்து
தாவணியை இளமி மீது போர்த்தி விட்டாள். சற்று நேரத்தில் தாவணியில் வெளியே வந்தாள் இளமி. கதவைத் திறக்கும் போது... கனவும் திறந்து கொண்டது போல... அங்கே இரு தேவதைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இளமியை உற்றுப் பார்த்த விஷாகா......."விடுடி........சரி ஆகிடும்.......சரி ஆக தான் எல்லா தப்புமே......" என்று சொல்லி இளமியின் கன்னத்தை கிள்ளி வாய்க்குள் போட்டாள். இனித்திருக்கும். சிரித்துக் கொண்டாள்.


******


"இரவுக்கு ஆயிரம் கண்கள்...உறவுக்கு.........." என்று முனகியபடியே முகிலன் விஷாகாவை இழுத்தணைத்தான். இசைந்த வெற்றிட வரைதலென அவளும் இரவை விரித்தாள். இலைமறை காயாக இரவுக்குள் துழாவும் நாடகத்தில்.....உச்ச நொடிகளுக்கு சற்று முன் குனிந்திருந்தவன் தோளில் கால் கொண்டு ஓங்கி அழுத்தினாள் விஷாகா.

கொஞ்சம் தடுமாறினாலும் சுயம் அறியா நாணம் போல மீண்டும் அவளுள் இறங்கினாள். இம்முறை எங்கிருந்தோ வந்த கை பளாரென அவனின் முகத்தில் அறைந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்தவனுக்கு கிறக்கத்தின் மிச்சமென மெல்ல சிரிப்பை தந்தாள். கலவியின் புதிய முறை என புரிந்து கொண்டவன் மீண்டும் அவளுள் மூழ்க....அவனின் தலைமுடியை கொத்தாக பற்றி பேயோட்டுவதைப் போல ஆட்டினாள் . கொஞ்சம் நடுக்கமாக இருந்தாலும்... 'ஆனது ஆச்சு அஞ்சு நிமிஷம்' என்று இரவுக்குள் கெஞ்சிய பற்களை ரத்தம் சொட்ட வைத்தாள். ரத்த சுவை இரவில் புளிக்கும் என்று அப்போதுதான் தெரிந்தது முகிலனுக்கு. கோபம் வந்தது. அதற்கு முந்திக் கொண்டு காமம் மிகுந்தது. உணர்ச்சி மிகுதியில் பிரளுகிறாள் என்று அவனும் விடாமல் தொடர.. வித விதமான அடிகள்.. உதைகள்.... தொடர்ந்தன.

ஒவ்வொரு இரவும்... ஒவ்வொரு வன்மமென அவளெங்கும் சூழ்ந்திருக்க அவன் ஒதுங்கி தூங்கவும் விடாமல் மெல்ல அழைத்து கொள்ளும் நிலையில் கொல்ல செய்து சிரிப்பது அவளின் வாடிக்கையானது.

பேய் பிடித்திருக்கலாம் என்று சந்தேகித்த போது, பிடித்தது பேயல்ல பெண் என்று நினைத்துக் கொண்ட விஷாகாவுக்கு, நினைவு முழுக்க நிறைந்து வழிந்தாள் இளமி.

இளமியின் கண்களை அத்தனை நெருக்கத்தில் காணும் போதெல்லாம் ஆற்றுக்குள் மீனாகி அக்கரைக்கு சென்று திரும்பும் நீர் பிறழ்வுகளென தன்னை நம்பத் தொடங்கினாள் விஷாகா.

அவளின் கதைக்குள் யாருமற்ற தனிமையில் பலமாக அழுதாள் விஷாகா. பின் அவளையே கேட்டுக் கொண்ட தருணத்தை தவிர்க்கவும் முடியாத ஒன்றை இளமிக்கு மூக்குத்தி குத்தி அழகு பார்க்க நேரிடுகிறது. அவளின் கை பற்றிக் கொண்டு தொடுவானம் நடக்கையில்.... மெட்டாக்காட்டு சித்திரம் தன்னை வேக வேகமாய் மாற்றி வரைந்து கொள்கிறது. நடுங்கும் மார்புகளை முகம் புதைத்து சமன்படுத்துவதில்... மெல்ல கூச்சமிடும் குறுகுறுப்பென அந்தி மாலை ஒன்று ஆறாகி மெல்ல வளையும். மடியினில் படுக்க வைத்துக் கொள்ளும் மதிய வெயிலில் தொடை நனைக்கும் இளமியின் கண்ணீருக்குள் பெண்மை தன் ஈரத்தை இழப்பதாக நம்பி வெதும்புவாள்.

ஒரு முறை கணவன் உள்ளாடை துவைக்கும் போது அருகில் இருந்த இளமிக்கு உடல் நடுங்கத் துவங்கியது. எங்கோ வெற்றிடம் வெறித்து பாறையாய் கத்தினாள். நிலவுகள் உடைத்த பகலை சுமையென கொண்டிருந்தாள். உள்ளாடையை ஆற்றில் அப்படியே போக விட்டு விட்டு அவளை கட்டி அனைத்து சாந்தப் படுத்துகையில்.... தனக்குள் ஒரு மிருதுவான ஆண்மை முளை விடுவதை வேக வேகமாக உணர்ந்தாள் விஷாகா.

*****


அதிகாலை நேரம்... ஆவென திறந்து கிடந்த பெருவானம் பார்த்தபடி இளமியும் விஷாகாவும் ஆற்றுக்குள் முட்டியளவு கால்களை துடுப்பாக்கி மீன்களுக்கு தங்கம் தோய்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.

பேரமைதி. பெருத்த யாகம் போல இளமி... வெறித்திருந்தாள். அவள் வாய் அவளுக்கே தெரியாமல் மெல்ல முனகியது. வானம் திளைத்திருந்த விஷாகாவின் கண்களுக்குள் பழைய சூழல் ஒன்று மயிர் பிடித்து இழுத்துப் போவதாக தோன்றியது. ஏழாவது படித்துக் கொண்டிருந்த அன்றொரு நாள்.....இதே காட்டுக்குள்தான் அந்த வக்கிர சேக்காளிககளை புரட்டி எடுத்த நிகழ்வு நடந்திருந்தது. அது நன்றாகவே நடந்தது என்பதில் எதுவும் அப்படியே. அப்படித்தான் அதுவும்.

இளமி காலைக் கடன் கழிக்க முள்காட்டுக்குள் அமர்ந்திருக்கையில்.....பின்னால் ஒரு புதரில் மறைந்திருந்து அந்த இருவர் பார்த்துக் கொண்டிருந்ததை விஷாகா பார்த்து விட்டு அவர்களை பிடித்து இழுத்து பிராண்டி.. அடித்து.. கடித்து...துவம்சம் செய்தாள். அந்தக்காட்சி ஒரு கத்திரி வெயிலின் புழுத்த வியர்வையைப் போல அவளுள் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது. அந்த இருவரையும் குற்றுயிரும் குலையுயிருமாக இழுத்துக் கொண்டு ஒரு வெறி பிடித்த யட்சியைப் போல நடந்து போனது இந்த காட்டுக்கு இன்னும் பேரதிர்ச்சிதான். அவர்களின் உடல் முழுக்க முற்கள் குத்தி இழுத்து போக ரத்தம் சொட்டும் பலத்த கோபத்தை இன்னமும் மறக்க முடியாத தூரத்தில் ஒரு புள்ளிக்குள் சுழன்று அவளை நினைவு செய்ய சொல்லின.

இதுவரை அவர்களை அடித்த நிஜமான காரணத்தை விஷாகா இளமியிடம் கூட சொல்லவே இல்லை என்பதுதான் கடவுளின் ரகசியம். இளமிக்கு, தன்னை இருவர் மறைந்திருந்து பார்த்தார்கள் என்றே இப்போது வரை தெரியாது. தெரியவும் கூடாது என்பது தான் அவளின் பேரன்பு.

வானம் பார்த்துக் கொண்டிருந்த விஷாகாவின் முகத்தில் படக்கென்று ஒரு துளி மழை வந்து விழ பட்டாம் பூச்சியின் குறுப்போடு படக்கென்று முகம் திருப்பி சிரித்தாள். இன்னொரு துளி இளமியின் உச்சந்தலையில் விழுந்திக்க வேண்டும். சுளீரென கண்கள் கலங்கி முகம் சிவந்து கால்களை இருக்க சேர்த்து கைகள் கட்டி நடுங்கினாள். எறும்பு கடித்தாலும் இரும்பு கடிக்கும் நினைவு அவளுக்கு. வெற்றிடம் உதைக்கும் பூட்சு கால்களின் நிறத்தில் பல் உடைந்தே திரிகிறது அவளின் துண்டு வானம்.

"ஒண்ணுல்ல.... ஒண்ணுல்ல.. மழை. உனக்கும் எனக்கும் பிடிச்ச அந்த மழை. நம்ம ஊர் மழை. நாம எத்தன நாள் இப்டி இங்க நனைஞ்சிருக்கோம்....." என்றபடியே அவளை இறுக்கிக் கட்டிக் கொண்டு அவளின் முகத்தில் தொடர்ந்து முத்தங்களை பதித்தாள் விஷாகா. நேற்றிரவு கணவனின் ஒவ்வொரு முத்தத்துக்கும் ஒவ்வொரு அறை அறைந்தது... ஞாபகம் வந்தது. மழை சற்று நேரத்துக்கெல்லாம் வலுத்தது. ஆற்றில் இருந்து உருவான சூடு மெல்ல பரவுவதை படக்கென்று கழற்றிய சட்டை கொண்டு வானம் விரிந்த மார்புகளினால் உணர்ந்தாள். மார்பு தொட்ட கணவனின் விரலை நேற்று ரத்தம் வரும் வரை கடித்தது உள்ளுக்குள் இனித்தது. இளமியின் விரலுக்கு இனிக்கின்ற முத்தங்கள் வைத்தாள். இளமியின் கண்களுக்குள் அந்த போலீசின் லத்தி விரல்கள் வந்து வந்து குடைந்தன. அந்த ஆற்றங்கரை மழையால் சல சலத்தது. மழை பெரும் சலங்கைகளை உதிர்த்து. ஜதி சொன்ன துளிகளில் தகிட தகிட தட் தட் சட் சட். மேகம் கறுத்துக் முட்டிய நேரத்தில் அந்த அதிகாலை ஒரு யுத்தத்தின் திரவைப் போல கொட்டியது.

இளமியின் உடல் முழுக்க முத்தமிட்டாள். போலீசின் ஒவ்வொரு அடிக்கும் ஒத்தடம் கொடுத்தது போல இருந்தது. கணவன் முதுகில் நகம் கொண்டு கீறியதை சற்று முன் நா கொண்டு இளமியின் முதுகில் கோடு போடுகையில் காட்சியாய் விரிந்தது. மழை வந்தாடியது. மேகம் பந்தாடியது. இளமியின் கனத்த மார்புகளை அள்ளி அள்ளி உண்டாள். கணவன் அள்ளிய தன் மார்பில் விஷம் பீச்சிய கடந்த வார இரவுகளை நினைத்து நினைத்து பரவசம் அடைந்தாள். அந்த போலீசின் கால்களில்.....தொடர்ந்து வெட்டிக் கொண்டே இருந்தது ... உடைந்து போன தன் பல் கொண்டு நீட்டிய யட்சியின் கோபம்.

ஆடை களைந்து ஆண்ட அரசிகளைப் போல இருவரும் புரண்டு சகதியில்... நிறைந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து... மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டே காதலின் சூட்சுமத்தில் தன்னை வெட்டிக் கொண்ட பாலைவன சூட்டின் தகிக்கும் மன வெளிக்குள் நின்று நிதானம் செய்யும் யாகத்தின் தொடர்பை போல ..மாறி மாறி தங்களை அணிகையில் அந்த போலிசின் கழுத்து நரம்புகள் அறுபடுவதை முறுக்கேறிய புணரலில் உணர்ந்தாள் இளமி. தன் கணவனின் முதுகுத் தண்டில் மாறி மாறி குத்தியது சொக்கு போடி போட்டது விஷாகாவுக்கு. இளமியின் முலை பூசிக் கொண்ட விஷாகாவுக்கு நேற்றைய பின்னிரவில் கழுத்தை அறுத்து தான் கொன்ற தன் கணவனின் பூட்ஸ் கால்களை நசுக்கி விட்ட அம்மிக் கல்லின் சாயலைக்கொட்டினாள்.

விஷாகா இளமியை கழுத்தோடு அணைந்தாள். நான்கு பெரும் பாறைகள் மோதிக்கொள்ளும் அதியசம் நிகழ்ந்தது. கரை ஈரத்தில் இருவரும்... சுயம் அற்ற பிண்டங்களாகி வாழ்வின் மீதான அத்தனை அதிருப்திகளையும் நா சொட்டிய மூச்சிரைத்தலோடு... முயங்கிக் கிடந்தார்கள். அந்தப் போலீசின் துர் மரணம் நிகழ்ந்ததென நினைத்த யாகத்தின் கடவு சீட்டென அவர்களின் தேகம் பெண்மை சொட்டின. ஆசுவாசப்பட்ட ஒரு விடுதலை தனக்கு வேண்டும் என்று மெய்ம் மறந்த நிலையில் இருந்த இளமி தன் மேலிருந்த விஷாகாவை சரித்து விட்டு ஆற்றுக்குள் இறங்கினாள். படபடத்து சிறகுகளை படபடக்கவே விட்டாள்.

"என்னாச்சு.... என் செல்லத்துக்கு....?"என்றபடியே எழுந்து நின்று அவளின் காது மடல் நெருடிய விஷாகாவுக்கு நேற்றிரவு பிணமான தன் கணவனின் காதை கடித்துத் துப்பிய நினைவு குமட்டிக் கொண்டு வந்தது. இனித்த ரத்தத்தை மீண்டும் நாவால் வெற்றிடம் தீண்டி சுவைத்தாள்.

"ஆம் எனக்கு பைத்தியம் பிடியது பிடித்து விட்டது. நிர்வாணமாய் ஊர் சுற்றுவதற்குள் என்னை சாக அனுமதி.. நான் தூர தேசம் செல்கிறேன். என்னை விட்டு விடு. உன் அன்புக்கு..... முத்தங்களுக்கு.......காதலுக்கு....... கலவிக்கு நான் என்னையே அர்ப்பணிக்கிறேன்...."

விஷாகாவின் இதழுக்கு அழுந்த கொடுத்த முத்தத்தோடு ஆற்றுக்குள் மூழ்கத் துவங்கினாள் இளமி. சிலை போல கரையில் அமர்ந்திருந்த விஷாகாவின் மூச்சு விடும் அசைவு துளியும் தெரியவில்லை. அவளின் கண்கள் இருண்ட வான துண்டுகளென ஆற்றுக்குள் விழுந்து கொண்டே இருந்தது. மெல்ல மெல்ல நீருக்குள் மூழ்கி தத்தளித்து......மூச்சு முட்டி......... நீர் குடித்து... மரண விதையில் படக்கென்று இதயம் விடுத்து செத்துப் போனாள் இளமி.

எல்லாவற்றுக்கும் சாட்சியாக கரையில் ஆடை இன்றி அமர்ந்திருந்த விஷாகா.....ஒரு கடவுளின் இருத்தலைப் போல சிம்மாசனம் வீற்றிருக்கும் சுமை கல்லென சமைந்திருந்தாள்.

இன்றும் அந்த ஆற்றின் கரையில் ஒரு சிலையைப் போல இருக்கிறாள் விஷாகா. அங்கே இளமியின் மரணம் கூழாங்கற்களின் தனிமைக்குள் மூச்சு விட்டுக் கொண்டிருப்பதாக எப்போதாவது ஆற்றை கடப்பவர்கள் கூறுகிறார்கள்.

கவிஜி

எழுதியவர் : கவிஜி (23-May-17, 9:21 pm)
பார்வை : 299

மேலே