ஊமை மலர்கள்
பேருந்தில் துகிற்கொடியாள் பயணம் செய்கையில்
வியர்த்து உள்ளோடும் வியர்வைத் துளிகளாய்
வேற்றவன் பார்வைகள் தேகத்தில் வழிந்தோட
அனலிடை புழுவென அமைதியாய் வதைகிறாள்......
மணமாகி மடியில் தவழாத குழந்தையால்
மன்னவன் சொந்தங்கள் கழுகாய்க் கொத்திட
நொடிகளில் பேரிடிகளை நெஞ்சினில் தாங்கி
கணவனின் இயலாமையில் கண்ணீரையே சிந்துகிறாள்......
வயிற்றுப் பசியோடு வறுமையின் பள்ளத்தில்
உணவகத்தின் வேரினைப் பிடித்துத் தொங்கிட
உற்றவரும் மற்றவரும் வேல்மொழிகள் வீசிட
வெந்தழல் விழுகின்ற காகிதமாய் மழலைகள்......
கலைமகள் ஆலயத்தில் முல்லைகள் மணங்கமழ
கற்றவனும் பணமதைக் கேட்டே தூற்றிட
கடன் கொடுத்தவனும் வசையில் வாழ்த்திட
மௌனத்தின் சிறையில் சிலையாய் ஈன்றவர்கள்......
உடலுண்ணும் நோயால் அன்னை படுத்திருக்க
உடன் பிறந்தோரின் கடமைகள் காத்திருக்க
முதலாளியின் இதயம் தைக்கும் முட்களால்
உயிரிருந்தும் பலருள்ளம் மரணத்தின் வாசலில்......
ஆயிரம் வலிகளிலும்
ஆனந்தமாய் வாழ்க்கை நகர்ந்திட
பிறந்தும் இறந்தும்
ஊமையாய் உலவுகிறது உயிர்கள்......