மண்ணை ஆளும் தகுதிபெறு

மண்ணை ஆளும் தகுதிபெறு - அந்த
விண்ணைத் தீண்டும் புகழைப்பெறு
புண்ணாய்க் கிடக்கும் மாநிலத்தை - நீ
புத்துயிர் கொடுத்து மாற்றிவிடு

அழுக்கை சுமக்கும் அகம்நீக்கு - நீ
அகிலத்தைத் தாங்கும் கடும்தேக்கு
முன்னேறும் எண்ணம் மனம்வைத்து - நீ
மூண்டெழு விலகிடும் தடைக்கொத்து

பணம்தான் பெரிதென எண்ணி - உன்
பண்பினை இழந்திட வேண்டாம்
பழியின்றி பொருளினை சேர்த்து - நீ
பாவத்தைத் தூரத்தில் ஓட்டு

உறக்கத்தை விரும்பி முடங்காதே - உன்
உள்ளத்தின் ஊக்கத்தை முடக்காதே
ஆர்வத்தை வளர்க்க மறக்காதே - நல்ல
ஆசையை என்றும் துறக்காதே

நாட்டுக்கு உழைக்க மறுக்காதே - உனை
நாடிடும் உறவினை வெறுக்காதே
கேடுகள் செய்வோரைப் பொறுக்காதே - குலம்
கோத்திரம் பார்த்துநீ சறுக்காதே

நெருப்பாய் புறப்படு படைதிரட்டி - நீ
நொறுக்கிடு நரிகளை விரல்மடக்கி
அகிலத்தில் உயர்ந்தது இமயமலை - இங்கு
அதைவிட உயரட்டும் உனதுதலை

முன்னோர் சொற்களின் சாறெடுத்து - நீ
முன்நட புறப்பட்டு வழிநடத்து
திண்ணையில் உறங்கிடும் நிலைவிடுத்து - தாய்
மண்ணுக்கு உழைத்திடு கரம்கொடுத்து.

பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : பாவலர் . பாஸ்கரன் (2-Jun-17, 5:40 pm)
பார்வை : 54

மேலே