மணி
=====
அரைஞாண் கயிற்றில்
கட்டிவிடப்பட்ட
குட்டிமணியின் ஊடாக
அறிமுகமானது.
வைகறையின் முகவரியை
வாசித்துப்போகும்
தூரத்துக் கோயிலின் மணியோசை
கனவுகளை கட்டிவைக்கும்
கயிறுகளைக் கொடுத்து
விழிகளில் வசிக்கும் சயனத்தை
வாங்கிச் செல்கின்ற கடமையின் நிமித்தம்
பகலின் வரவு ஊர்ஜிதபடுத்தப்படுகிறது
கூட்டுப் பிரார்த்தனையில் சங்கமிக்கும்
அவசரத்தை பூசையறையில் இருந்தபடியே
சமிக்ஞை செய்விக்கும் மணியின் ஓசை
அப்பாவின் பிரதிநிதியாக..
வகுப்பறையில் உட்கார்ந்தபடி
முதல் மணியைக் கேட்கத்தூண்டும்
பள்ளிக்கூடத்தை ஞாபகப்படுத்தும்
கடிகாரம் மணி எப்போதும்
காலத்தின் விரைவதை எச்சரித்தபடி.
முடிவது தெரியாத
தமிழ்பாட நேரத்தின் தொந்தரவாய்
அடிக்கின்ற மணி
கணக்கு வாத்தியார்
வருகைக்குத் திகிலூட்டி
செல்கையில் தித்திப்பூட்டும்
மணிகளுக்கிடையில்
நடந்து முடிந்திருக்கும்
மூன்றாம் உலகப்போர்.
பழக்கூடைக்காரனின்
வருமானத்தை நிச்சயிக்கும்
இடைவேளை மணிகள் இன்றும்
காசில்லா அந்த ஏழ்மை நாட்களின்
ஏக்க நினைவுகளாய்
மணி ஓசைகளுக்குப் பிந்திய
வரவில் தணடனைகள் அடைந்திருந்தாலும்
முதல் மணி அடிக்கும் முன்பதாய்
ஆசனத்தில் அமர்ந்திருக்கும் வழக்கத்தைக்
கற்றுக் கொடுத்திருக்கின்றன
சினிமா கொட்டகைகள்.
எலிகளின் ஆலோசனைக் கூட்டத்தில்
எடுக்கப்பட்ட முடிவில் இன்னும்
கட்டப்படாத பூனைக்கழுத்து
மணியாகவே இருக்கின்ற வாழ்வில்
யானை வரும் பின்னே
மணி ஓசை வரும் முன்னே என்பதாக
கடன்காரர்களின் சைக்கிள் மணி
மணியடித்து முன்னேறியவர்கள்
சூழ்ந்த பணியகத்தில்
அடிக்கின்ற தொலைபேசி
மணிகளுக்குப் பதில் சொல்லியே
ஓய்வு மணியடிக்கப்பட்டு விடுகிறது
ஏமாற்றங்களுக்கும்
துயரங்களுக்கும் துரோகங்களுக்கும்
வெற்றி தோல்விகளுக்கும் மட்டுமன்றி
சந்தோசங்களுக்கும் கூட
ஒருநாள் அடிக்கப்படுகின்ற
சாவுமணியில் முடிந்துவிடும்
வாழ்க்கையில் தேடிவைக்கும்
செல்வமணிகள் எல்லாமே
செல்லா மணிகலாகிப் போகின்றபோது
நமக்காவும் கண்ணீர் சிந்த அன்புக்
கண்மணிகள் இருப்பின் அதுவே
சொர்க்க வாசலின் அழைப்பு மணி.
*மெய்யன் நடராஜ்