மாட்டுக்கறி

நாட்டைக் காக்கப்போவதாய்ச் சொல்லி
நாற்காலியில் அமர்ந்தவர்கள் - இன்று
மாட்டைக் காப்பதே முக்கியம் என
மார்தட்டி அலைகிறார்கள்!
பசிபோக்க பணியாற்ற வேண்டிய அரசு இன்று
பசுகாக்க பணியாற்றிக்கொண்டிருக்கிறது!
பசுக்கள் பலியாவதற்கு
பருந்துகளா பறிதவிப்பது?
நேற்று சல்லிக்கட்டு இன்று
எங்கள் சாப்பாட்டுத் தட்டு
எங்கள் உரிமைகளில் தலையிடுவதைத் தவிர
நீங்கள் உருப்படியாய் சாதித்தவை எவை?
ஐந்தறிவு மாட்டைக் காக்க
ஆறறிவு மனிதனைத் தாக்கும்
நான்கறிவு நபர்களே
உங்கள் மூளைக்கு மூக்கனாங்கயிறு போட்டு
அதன் முனை பிடித்திருக்கும்
மூடர்களிடம் சொல்லுங்கள்
உங்கள் வேடம் கலைந்து
வெகுநாட்களாகிவிட்தென்று!
குருதிக்கறை படிந்த
குஜராத் வீதிகளில்
சிசுக்கொலைகளையே சிறிதும் இரக்கமின்றிச் செய்தவர்கள் இன்று பசுக்கொலைகள் கூடாதென
பாடம் நடத்துகிறார்கள்!
பசுக்களைப் பாதுகாக்கப்
பன்றிகள் அல்லவா புறப்பட்டிருக்கின்றன!
மனசாட்சியோடு சொல்லுங்கள்
மறுதலிக்கப்படவேண்டியது
மாட்டுக்கறியா? இல்லை உங்கள் மதவெறியா?
மாட்டுக்கறியை வைத்து
மட்டமான அரசியல் செய்துகொண்டிருங்கள்
அடுப்புக்கரியை உங்கள் முகத்தில் பூச
அடுத்த தேர்தல் வந்துகொண்டிருக்கிறது!
- நிலவை.பார்த்திபன்