தடைகள் உடைத்துச் சாதிப்போம்

தடைகள் உடைத்துச் சாதிப்போம்
தமிழால் உலகை வென்றிடுவோம்!
மடையைத் திறந்த வெள்ளம்போல்
மகிழ்ச்சிப் பெருக்கில் பொங்கிடுவோம்!

காவிரி கங்கை இணைந்ததுபோல்
கற்பனை வானில் மிதந்திருப்போம்!
பூவிரி சோலையில் மலர்மணமாய்
புத்துணர் வோடே அதைச்சுவைப்போம்!
வாவியில் தோன்றும் நீர்க்குமிழாய்
வருத்திடும் துன்பம் நிலையில்லை!
ஓவியம் தீட்டும் தூரிகையாய்
உள்ளமு மாடக் களித்திருப்போம்! ( தடைகள்)

பாதையில் முட்கள் தைத்துவிட்டால்
பயணமும் நின்றா போய்விடும்சொல்!
வாதையில் துடித்த போதினிலும்
வலியை யாற்றி முன்செல்வோம்!
போதையின் பிடியில் சிக்காமல்
புகழை மனத்தி னுட்புதைப்போம்!
மேதையாய் மாற்றும் நற்றமிழால்
மேதினி சிறக்க வாழ்ந்திடுவோம்! ( தடைகள்)

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Jun-17, 8:03 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 84

மேலே