தண்ணீரில் மீனழுதால் ---- புதுக்கவிதை
தண்ணீரில் மீனழுதால் ---- புதுக்கவிதை
தண்ணீரே இல்லாத உலகத்தில்
தன்னலமாய் வாழ்கின்றான் மானிடனும் .
தண்ணீரில் மீனழுதால் தரணியிலே
தக்கதொரு இடமின்றி கண்ணீர்க் கடலாகிக்
கரையேற தத்தளிக்கும் சமுதாயம் !!!
மாறுகின்ற காலநிலை மண்ணுலகின்
நிலையன்றோ ! தாறுமாறாய்
வீசுகின்ற தடையில்லாப் புயலாலே
மீனினமும் அழுகின்றது !
மீனவனும் அழுகின்றான் ! தரையிலும்
கண்ணீர் ! தண்ணீரிலும் கண்ணீர் !
வீறுகொண்டே எழுகின்ற விண்ணுலகின்
வான்மழையோ தேவைக்குக் கிட்டாமல்
மாறுகின்ற மனிதர்களின்
மனத்தைப் போல் வேறுபாடாய் மாறுவதால்
நித்திரையும் போனதுவே ! நிம்மதியும் போனதுவே !
கடல்நீரும் வற்றிப்போய் நிற்கின்றது
காலத்தின் கொடுமையினால் எத்திசையும்
உடலினையும் பாதுகாக்கத் தண்ணீரே
உணவாகும் என்பதனை அறிவீரோ !
படகோட்டும் மீனவனும் துடிக்கின்றான்
பரிதவித்தும் போகின்றான் சுனாமியினால் . !!!
அதிகமாக பெய்தாலே வெள்ளமாகும்
அளவாகப் பெய்தாலே சிறப்பாகும் .
விதிதனையே மாற்றுகின்ற மனிதயினம் !!!
விரைந்துமே புரிந்து கொள்ளல் வேண்டும் ! வேண்டும் !!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்