நிம்மதி தேடி
![](https://eluthu.com/images/loading.gif)
அன்னையின் கருவில் உதிர்ந்து
அன்பின் மொழி தேடி அலைந்தேன்
தந்தையின் நெஞ்சில் தவழ்ந்து
பாசத்தின் வரவைத் தேடி அலைந்தேன்...
பள்ளியில் சேர்ந்தப் பருவத்தில்
பாட புத்தகத்தில் வண்ணங்களையும்
விளையாட்டில் வீட்டை மறந்து
வீதிகளில் நண்பர்களைத் தேடி அலைந்தேன்...
உயர் நிலை வகுப்புகளில்
உயர்ந்த மதிப்பெண் அடையவும்
மேல்நிலை வகுப்புகளில்
மனமின்றி மதிப்பெண்ணைத் தேடியே அலைந்தேன்...
கல்லூரியில் காலடி வைத்ததும்
கண் விழித்துப் படித்தேன்
நினைவில் நிற்கவில்லை என்றதும்
நிம்மதி இன்றித்தான் அலைந்தேன்...
பொறியியல் கோட்டைக்குள் நுழைந்து
அறிவை மெருகேற்ற ஓயாது திரிந்து
முதல் வகுப்பில் முட்டி மோதி
கதவு திறந்து வெளி வந்தேன்...
ஒருதுறையில் வளர்ந்து மறுதுறையில்
உருவத்தை உலவிடச் செய்திடும் பலரில்
பொருத்தமான வேலையை உடல்
வருத்த தேடி தேடி அலைந்தேன்...
அடித்த வெயிலின் தாக்கம் தணிந்திட
ஏதோ?... ஒரு நிழலில் நின்றேன்
மாடுகளாய் உழைத்துக் கொடுத்தாலும்
ஏடுகள் தருவதில் அவரோ?... கஞ்சன்...
மணம் வாழ்வில் நிலைத்திடவே
பணமெனும் ஒற்றைச் சொல் தேடி
தேசம் விட்டு மறு தேசத்திற்கு
பாசங்களைத் துறந்து பறந்து சென்றேன்...
என்னுள் ஒளிந்த நிம்மதியைத் தேட
என் நிம்மதி முழுதையும் தொலைத்து
கடிவாளம் இல்லாத குதிரையாய்
பிடிமானம் இல்லாது வாழ்க்கையும்...
உறவுகளின் முடிச்சு அவிழும் போது
உறங்காது மனம் அலைந்து
உழைத்துக் களைத்து ஓய்வின் நேரமும்
உடல்நலக் குறைவால் மருத்துவமனை அலைந்தேன்...
வாழ்க்கைப் பயணம் இனிமை நிறைந்திட
வீழ்ந்திடாது நித்தம் அலைந்தே
நிம்மதி இல்லாது உயிரும்
உருவமின்றி உலகில் அலைகிறது...