வசந்தமாளிகை
ஓடுகள் வேய்ந்த ஒரு வீடு அது
சூரியனுக்கும் மழைக்கும்
உத்திரவின்றி உள்ளே
வந்துபோகும் வசதி...
சமைத்து சாப்பிடும்
பாத்திரத்தை விட
மழைகாலங்களில் ஒழுகும்
நீரை தடுத்து பிடிப்பதற்கு
இருந்த பாத்திரங்களே அதிகம்...
படுத்து கூரையை பார்த்தால்
ஆயிரம் கணக்கான நட்சத்திரங்கள்
மின்னிக்கொண்டிருக்கும்
வயிற்றில் ஈரமில்லை என்றாலும்
படுக்கும் தரையெல்லாம்
ஈரமாகவே இருக்கும்..
வனவாசத்தை கூட பொருத்துக்கொள்ளலாம்
எங்களின் வீடு வாசத்தை
பொருத்துக்கொள்ள முடியாது
மழைகாலங்களில்
மழைவேண்டாம் என்று இறைவனிடம் கேட்பது கூட
எங்களுக்கு தர்மமாக இருந்தது...
அப்போது என் தம்பி ஓடி
வந்து அம்மா நாம் பெரிய
வீடு கட்டலாம்மா என்னிடம்
ஒரு தீப்பெட்டி நிறைய காசு
இருக்கும்மா என்று அவன்
அந்த மழலை மொழியில்
சொல்லும்போது சிரிப்பதா
அழுவதா என்றே புரியவில்லை...
அந்த நொடியில்
எங்கோ தூரத்திலிருந்து
ஒரு பாடலின் வரிகள்
ஒலிபெருக்கி வாயிலாக
என் காதில் வந்து வீழ்ந்தது - அது
எங்களுக்கும் காலம் வரும்
காலம் வந்தால் வாழ்வு வரும்
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழவைப்போமே என்ற வரிகள்....