திருநங்கை

வீரம் பேசுது ஆணினம்
மென்மை பேசுது பெண்ணினம்
கலந்து பிறந்த இடையினம்
கவலை பேசுது தினம்தினம்

தவறு செய்தவன் கடவுளிங்கே
தண்டனை ஏனோ அவனுகில்லை
தவித்து வாழ்கிறோம் நாங்களிங்கே
தன்மை பேசிடும் உறவுமில்லை

பிறப்பில் யாரும் உயர்வில்லை
பிறப்பால் திறமை பெறவுமில்லை
பிறப்பின் பிழையை தினமெண்ணி
வருந்தும் நிலைதான் இங்கேனோ?

மனங்கள் இங்கே கல் ஆனது
உடலை விற்கும் நிலை வந்தது
மனிதம் இங்கே மரணித்தது
கைகள் ஏந்தும் நிலை வந்தது

உருகும் உள்ளம் எதும் வேண்டாம்
உதவும் கரங்கள் எதும் வேண்டாம்
முயற்சி செய்து உயர்ந்திடுவோம்
கேலிகள் ஏதும் இல்லை என்றால்

கல்கிகள் இங்கே பலருண்டு
யாசினி போன்ற மலருமுண்டு
நசுக்கும் கால்கள் இல்லையெனில்
மகிழ்ந்து வாழ்வோம் நாளுமிங்கு

கொட்டி கிடக்கிறது ஆசைகளோ
காண கிடக்கிறது வெற்றிகளோ
குறைதான் எங்கள் தடையென்றால்
மனக்குறை உங்களை முடக்கிவிடும்

கேலி பேசும் மனிதர்களே! நீங்கள்
மனம் மாறும் காலம் எப்போது?

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (13-Jun-17, 1:37 am)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : thirunangai
பார்வை : 1304

மேலே