முதியோர் இல்லங்கள் சோகமா சாபமா

அனாதைக் குழந்தைகளையும், ஆதரவற்றமுதியோர்களையும் அரவணைத்துப் பாதுகாப்பதற்கென்றே உலகில் அவதரித்த அன்னை தெரசா சொன்ன வாசகம்இது.

அனாதைக் குழந்தைகளுக்கும், ஆதரவற்ற முதியோர்களுக்கும் தூய உள்ளத்தோடு தொண்டு செய்வதை"கடவுளின் பணி எனக் குறிப்பிட்டார் அன்னை. அந்த கடவுளின் பணியை செய்வதற்காக இப்போது மூலைமுடுக்கெல்லாம் முதியோர் இல்லங்கள்; அனாதை மையங்கள்... அன்புக்காக ஏங்கும் பிஞ்சுகளும்,பெரியவர்களும் "கடவுள் உள்ளமே கருணை இல்லமே என்று பாடாத குறை...

""அளவான குடும்பம் என்ற குறுகிய வட்டத்திற்குள் இன்றையத் தலைமுறையினர் அடங்கிக் கொள்வதால்,அறுபது வயதைக் கடந்தவர்கள் கூட "ஆதரவற்றவர்களாக ஆக்கப்படுகின்றனர்.

கணவன் - மனைவி, அன்பு செலுத்த ஒரு பிள்ளை என்ற அளவில் குடும்பம் நடத்தவே விரும்புகின்றனர்இன்றையவர்கள். இவர்களின் பார்வையில் பெற்றெடுத்த தாய் தந்தையர் கூட "எக்ஸ்டரா லக்கேஜ். எனவேஅவற்றை ஓரம்கட்ட உதவும் ஓரிடமாகவே முதியோர் இல்லங்களை பார்க்கிறார்கள். அத்தகையவர்களை இரு கரம்நீட்டி வரவேற்று உபசரிக்கக் காத்திருக்கின்றன "கட்டணம் வசூலிக்கும் முதியோர் இல்லங்கள்

இரக்கமில்லாத பிள்ளை, அன்பைத் தொலைத்த மருமகள், அக்கறையற்ற உறவினர்கள் என்ற தொடர்பிரச்னைகளால் அலைக்கழிக்கப்பட்டு, கடைசியில் "ஆதரவற்றவர் என்ற அடைமொழியோடு முதியோர்இல்லங்களில் அடைக்கலமாகி விடுகின்றவர்களும் அதிகம். அத்தகையவர்களுக்கென்றே உள்ளது தான்"ஆதரவற்ற முதியோர் இல்லங்கள்.

பெற்ற பிள்ளைகளால் அனாதையாக்கப்பட்ட பெற்றோர்கள் மட்டுமல்ல; பெற்றோர்களால் அனாதையாக்கப்பட்டபிள்ளைகளும் ஏராளம். அவர்களுக்கு வாழ்வளிக்கக் கூடிய குழந்தைகள் இல்லங்களும் இங்கு ஏராளம். அரசுசார்பிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பிலும், தனியார் அமைப்புளின் சார்பிலும் எத்தனையோஇல்லங்கள்... அவற்றில் அடைக்கலம் புகுந்துள்ள நெஞ்சங்களில் தான் எத்தனை எண்ணங்கள்... சோகங்கள்...

எத்தனை எண்ணங்கள்... சோகங்கள்...

சென்னை மயிலாப்பூர் அன்னை இல்லத்தில் புகலிடம் தேடியுள்ள 78 வயது பெண்மணி ரங்கநாயகி சொல்கிறார்...""எனக்கு ஒரே மகன். கணவர் இறந்ததற்கு பிறகு அவனே கதி என்று வாழ்ந்தேன். அவனை நல்லா படிக்க வைத்துஇன்ஜினியர் ஆக்கினேன். கல்யாணம் செஞ்சு வெச்சேன். மனைவி வந்த பிறகு அவன் மாறிட்டான்... மனைவிபேச்சை கேட்டு என்னை விரட்டிட்டான்... என்றார் கண்ணீருடன்.

இன்னொருவர் லட்சுமி. வாலாஜா என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் சொல்கிறார்... ""எனக்கு கல்யாணம் முடிஞ்சு 15வருசம் தான் புருஷன் உயிரோடு இருந்தார். இரண்டு பொண்ணு, ஒரு பையன்... கணவர் இறந்ததும் எனதுமாமியாரும்,மாமனாரும் என் பிள்ளைகளை மட்டும் வெச்சுகிட்டு என்னை விரட்டிட்டாங்க... நான் 30 வயசுலஇருந்து வீட்டு வேலை பாத்து பிழைச்சுட்டு வந்தேன்... இப்போ 80 வயசாச்சு... முடியல... என்னை விடுங்க... என்மகன் கொஞ்ச நாளக்கி முன்னால செத்துப் போயிட்டானாம்... என்று இந்த நிலையிலும் மகனை நினைத்துஅழுதார்.

பொன்னம்மாள் என்ற மூதாட்டியின் கதை வித்தியாசமானது. ""ஸ்ரீபெரும்புதூர் தான் எனக்கு சொந்த ஊர். 8வயசுல எனக்கு திருமணம் நடந்துச்சு. எனக்கு 12 வயசு வரும்போது என் புருஷன் இறந்துட்டாரு... அதுக்கு பிறகுதான் நான் பெரிய மனுசி ஆனேன்... ஆனா, எனக்கு என் மாமியாரும், மாமனாரும் விதவைக் கோலம் போட்டு,மடத்துல வேலைக்கு சேத்துட்டாங்க... ரொம்ப நாளா அங்க தான் பொழப்பு... இப்போ வயசு 80 ஆகப்போவுது...இப்பவோ அப்பவோன்னு இருக்கேன்... என்று புலம்பினார், பாவம்.

இவர்களுக்கு மத்தியில் கர்த்தரை நினைத்து தோஸ்திரம் சொல்லிக் கொண்டிருந்த மனோன்மணி என்ற மூதாட்டிசொல்கிறார்... ""கிறிஸ்தவக் குடும்பத்தை சேர்ந்தவங்க நான்... நான் கல்யாணமே செஞ்சுக்கலீங்க... சொந்த ஊருகோயம்புத்தூர்... என் சகோதரி மெட்ராஸ்ல இருந்தா... அவளுக்கு கல்யாணமாகி 7 குழந்தைங்க... அவள்திடீருன்னு மாரடைப்புல செத்துப் போயிட்டா... அவ பிள்ளைகள வளர்க்கிறதுக்காக மெட்ராசுக்கு வந்தேன்...அவங்கள வளர்த்து ஏழு பேரையும் பெரிய ஆளாக்கிட்டேன்... அவங்களுக்காக நான் கல்யாணமே செஞ்சுக்காமஇருந்தேன்... இப்போ ஏழு பேரும் நல்ல நிலையில இருக்காங்க... ஆனா நான்... என்று எதையோ எண்ணி கண்கலங்கினார்.

இப்படி எத்தனையோ பின்னணிகள்... அத்தனைக்கும் காரணம் அன்பு காட்டாமை. எஞ்சிய வாழ்நாட்களைஎண்ணிய நிலையிலும் அன்புக்காக ஏங்கிக் கொண்டிருந்த அந்த நெஞ்சங்களுக்காக ஆயிரமாயிரம் அன்னைதெரசாக்கள் அவதரிக்க வேண்டியதுள்ளது.

அத்தனையும் ஹவுஸ்புல்...

சென்னை நகரில் மட்டும் விஷ்ராந்தியின் மன்டே சாரிட்டி கிளப், காக்கும் கரங்கள், எஸ்.வி.ஹோம், ஆந்திர மகிளாசபா, சிஸ்டர்ஸ் ஆப் புவர்ஸ், கலைச்செல்வி கருணாலயா என்ற இல்லங்கள், தனியார் மற்றும் தொண்டுநிறுவனங்களால் நடத்தப்படுகின்றன. சகல வசதிகளும் தரும் இந்த இல்லங்களில் கட்டணம் கட்டாயம்.

வெளிநாட்டுப் பணி மோகத்தில் திரியும் இன்றைய இளைஞர்கள், வேலை கிடைத்ததும் அந்நாட்டிற்குமனைவியையும், குழந்தையையும் மட்டுமே அழைத்துக் கொண்டு செல்லவே விரும்புகின்றனர். பெற்ற தாயோ,தந்தையோ இருந்தால், வயதாகி விட்ட காரணத்தை சொல்லி அவர்களை அழைத்துச் செல்ல மனமில்லாதவர்களாகிவிடுகின்றனர். அதனால் அவர்களை இந்த கட்டண முதியோர் இல்லங்களில் கட்டாயமாக தங்க வைத்து விட்டுச்சென்று விடுகின்றனர். மகனின் நல்வாழ்விற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெற்ற மனம், முதியோர்இல்லத்தில் அன்புக்காக நாளும் ஏங்கித் தவிக்கும். காலப்போக்கில் அவர்களின் ஆயுள் காலம் முடியும். அப்படிஇறந்தவர்களை கூட "நீங்களே இறுதிச் சடங்குகளை செய்து விடுங்கள். அதற்கான செலவை அனுப்பி வைத்துவிடுகிறோம் என்று சொல்லும் வெளிநாட்டு வேலைக்கார மகன்களும் உண்டு என்கிறார் இதுபோன்றஇல்லங்களை பராமரிக்கும் நிர்வாகி ஒருவர்.

இது ஒரு பக்கம் என்றால்... மறுபக்கத்தில் ஆதரவற்ற முதியோர்கள்... அவர்கள் வாழ்க்கைக் கதை படுசோகம்.

ஆதரவற்ற முதியோர்களுக்காக சென்னை நகரில் அன்னை இல்லம், உதவும் கரங்கள், சிவானந்தா ஆஸ்ரமம்,நிம்மதி, சாய் ஹோம், அன்னை தெரசாவின் மிஷனரிஸ் ஆப் சாரிட்டி இல்லம், ஆஷா நிவாஸ் போன்ற 10க்கும்மேற்பட்ட இல்லங்கள் உள்ளன. இவை தவிர தமிழக அரசின் சமூக நிலத் துறை சார்பில் சென்னையில் இரண்டுஇல்லங்களும், மாவட்டந்தோறும் ஒன்றும் நடத்தப்படுகின்றன.

மாநிலம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இல்லங்கள். தெருவில் திரியும் சிறுவர்களுக்கென, ஸ்லீம்பெண்களுக்கென, ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கென, தனித்தனியாக எத்தனையோ இல்லங்கள் உள்ளன.

அத்தனையும் நிரம்பி வழியும் அளவுக்கு இந்த இல்லங்களில் முதியோர் கூட்டம். அந்த அளவிற்குஆதரவற்றோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அந்த தேவைக்கேற்ப முதியோர் இல்லங்கள் இல்லை என்கிறார்சென்னை மயிலாப்பூர் அன்னை இல்ல நிர்வாகி ராணிகிருஷ்ணன்.

"அளவான குடும்பம் என்ற கொள்கை தான் முதியோர் இல்லங்களின் அட்மிஷனுக்கு அடிப்படைக் காரணமாகஉள்ளது. பல பேர் இப்போது தாத்தா பாட்டிகளை தொல்லையாக கருதுகின்றனர். மருமகள்கள் அவர்களைபராமரிப்பதில்லை.

எனவே அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டு சிலகாலங்கள் தங்குகின்றனர். பின்னர் அவர்களும் வயதாகி விட்ட காரணத்தை சொல்லி வெளியேற்றி விடுவார்கள்.அதனால் வேறு வழியின்றி சாலைகளில் திரிந்து பட்டினியால் மயங்கி கிடப்பார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு போலீசார் எங்கள் இல்லங்களை தேடி வருவார்கள். அல்லது எங்களுக்கு தகவல் தருவார்கள். நிாங்கள்அழைத்துக் கொண்டு வந்து பராமரிக்கிறோம்.

ஒரு பக்கத்தில் பெற்ற தாய் தந்தைகளை ஆதரவற்றவர்களாக்கி விடும் நிலை இருந்தாலும், மறுபக்கத்தில் முதியோர்இல்லங்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இன்றைய இளைய தலைறையினரிடம் வலுப்பட்டு வருகிறது.பிறந்த நாள், திருமண நாள், பெற்றோர் நினைவு நாள் போன்றவற்றில் முதியோர் இல்லங்களுக்கு வந்துமுதியோர்களுக்கு உணவளிக்கும் பழக்கம் அதிகரித்து வருவது பாராட்டுக்குரியது.

பல இல்லங்கள் வாடகைக் கட்டடத்தில் தான் இயங்குகின்றன. எந்த வித கட்டணம் இல்லாமல் சேவைமனப்பான்மையுடன் ஆதரவற்ற முதியோர் இல்லங்கள் நடத்தப்படுகின்றன. மத்திய, மாநில அரசுகள்பொருளாதார உதவிகள் செய்தாலும், இடவசதி இல்லாததால் பல முதியோர்களுக்கு எங்களால் சேவை செய்யஇயலவில்லை.

அன்னை பாத்திமா ஆதரவற்றக் குழந்தைகள் நலக் காப்பகம் ஒன்றையும் நாங்கள் நடத்துகிறோம். 250 குழந்தைகள்அங்கே உள்ளனர். அவர்களுக்கு உணவு,உடை, கல்வி, மருத்துவ வசதி எல்லாவற்றையும் அளிக்கிறோம்.இதேபோல் பல இல்லங்களிலும் சேவை செய்கின்றனர். ஆதரவற்ற முதியோர்களுக்கு போட்டியாக ஆதரவற்றகுழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு தான் போகிறது என்றார்.

Oneindia Tamil

எழுதியவர் : (15-Jun-17, 10:59 am)
பார்வை : 207

சிறந்த கட்டுரைகள்

மேலே