புத்தக வாசிப்பையும் பாடத்திட்டத்தில் சேர்க்கலாமே
பள்ளிக்கல்வித் துறையில் ஆரோக்கியமான சலனங்கள் ஏற்பட்டுவரும் நேரம் இது. பொதுத் தேர்வு முடிவுகளில் ஏற்படுத்திய மாற்றங்களைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். இந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக, பள்ளி மாணவர்களிடையே புத்தக வாசிப்பை எடுத்துச்செல்லும் முன்னெடுப்புகளையும் பள்ளிக்கல்வித் துறை செய்யுமென்றால் தமிழ்நாட்டு மாணவர்களின் அறிவுத் திறனில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்த முடியும். இதன் ஒரு பகுதியாகப் புத்தக வாசிப்பைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது பற்றி யோசிக்க வேண்டும்.
மேலை நாடுகளில் பள்ளிக்கல்வியை முடிப்பதற்குள் ஷேக்ஸ்பியர், கீட்ஸ், ஷெல்லி, டால்ஸ்டாய்எக்சுபெரி உள்ளிட்ட இலக்கிய மேதைகளின் புத்தகங்களையும் மிகச் சிறந்த வரலாற்று, அறிவியல், தத்துவ ஆசிரியர்களின் புத்தகங்களையும் பலரும் படித்து முடித்திருப்பார்கள். ஆனால், அவை போன்ற நூல்களெல்லாம் இங்கே கல்லூரி முடித்து வெளியேறிய பிறகுதான் பலருக்கும் அறிமுகமாகின்றன. ஒருவர் தனது சுயமுயற்சியில்தான் வாசிப்பின் தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்ற நிலை இங்கு காணப்படுகிறது. இதை மாற்ற வேண்டுமானால், ஆரம்பக் கல்வியிலிருந்தே புத்தகங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் உணர்த்துவதற்கு ‘புத்தக வாசிப்பு’ என்ற விஷயத்தைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது அவசியமாகிறது.
பாடத்திட்டம் என்று வந்துவிட்டால் அதற்கென்றொரு புத்தகம், பிறகு அதற்கென்று வழிகாட்டி நூல்கள் என்று ஆரம்பித்துப் பழைய கதையே திரும்பவும் நிகழும் அபாயம் ஏற்படும். ஆகவே, திறந்த நிலையிலான ஒரு பாடமாக ‘புத்தக வாசிப்’பை வைக்கலாம். அதற்கென்றொரு ஆசிரியரைக் கட்டாயமாக நியமிக்க வேண்டும். மாணவர்களுக்குப் பிடித்த துறைகளில் அவர்களைப் புத்தகங்கள் படிக்கத் தூண்டுவது, படித்த புத்தகங்களைப் பற்றி வகுப்பறையில் பகிர்ந்துகொள்ளச் செய்வது, அவற்றைப் பற்றி எழுதச் சொல்வது, பள்ளி நூலகம், அரசு நூலகங்களுக்கு மாணவர்களை அழைத்துச்செல்வது போன்ற வேலைகளை அந்த ஆசிரியர் செய்வார். மாணவர்களின் வயது, படிக்கும் வகுப்புக்கேற்ப புத்தகங்களை எழுதும் எழுத்தாளர்களைப் பள்ளிக்கு வரவழைத்துக் கதைசொல்ல வைப்பது, மாணவர்களிடமிருந்து கதை கேட்பது போன்ற செயல்பாடுகளையும் மேற்கொள்ளலாம். புத்தக வாசிப்பும் அது சார்ந்து எழுதுவதும் ஊக்குவிக்கப்படும்போது மனப்பாடக் கல்வி முறைக்கு விடைகொடுப்பதும் இயல்பாகவே நிகழும்.
புத்தக வாசிப்பு என்பது பொழுதுபோக்குச் செயல்பாடு அல்ல. ஒருவரின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு அத்தியாவசியமான கற்பனைத் திறன், அறிவுத் திறன் போன்றவற்றை புத்தக வாசிப்பு மேம்படுத்துகிறது என்பது அறிவியலாளர்களாலும் கல்வியியலாளர்களாலும் திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டு வருகிறது. ஆகவே, ‘புத்தக வாசிப்பு’ என்ற பாடத்தைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை பரிசீலிக்க வேண்டும்.
நூல் வெளி