மனங்களின் பிணவறை-குயிலி
மனங்களின் பிணவறை-குயிலி
இளம்தென்றல்டும்
கரம்பற்றி நடந்த
கவிச்சோலை
அது...
அங்கு
இமைகள் சுருக்கி
கருவிழி மூடி
பின் புருவங்கள்
சுளித்து
நயனபாஷை பேசும்
கவியும்
எண்ணங்கள் சொல்லி
கன்னங்கள் கிள்ளி
பின் உதடுகள்
குவித்து
ஓவியம்தீட்டிய
முத்தக் கவியும்
வார்த்தைகள்
இடரும் போது
காதுகள்
பிடித்திழுத்து
தலையோடு தலை
முட்டிக்கொண்ட
கவியும்
சொல்லாமல் பெய்த
காதல் மழையில்
உயிர் நனைந்து
உடல் சிலிர்த்து
சேலைத் தலைப்பினில்
தலைத் துவட்டிய
கவியுமாய் நீண்டு
இரவின்
நிபந்தனைகளில்
துயிலோடு
உறவாடுகையில்
அவள் பாதங்களில்
அவன் சுட்டுவிரல்
குறிப்பெழுதும்
கவியுமாய் தொடர்ந்து
காற்று உள்நுழைந்து
அணைப்புகளின்
இறுக்கம் தளர்த்தி
ஊடல் சுகந்தம் சொல்லி
உயிலெழுதும்
கீர்த்தனையுமான
ஒரு கவியும்
என
பூத்துகுலுங்கிய
அச்சோலையில்.,
சற்று உலர்ந்த
செங்காந்தள்
இதழ்களோடு,
வாடிய
நித்யகல்யாணி
விழிகளோடு,
மணம் குன்றிய
பிச்சிப்பூ
தேகம் கொண்ட
புதுக் கவியும்
நின்றிருக்க
துகிலா நினைவுகளோடு
துயில் கொண்ட
இரவுகளிலெல்லாம்
மனங்களின்
பிணவறைக்குள்
தனியாக தாழ்
போட்டுக்கொண்டது
போன்றிருந்தது...!