கண்ணதாசன்
கவியரசர் கண்ணதாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து....இன்று காலை பொதிகைத் தொலைக்காட்சியில் நான் கேட்ட ஒரு கிராமியப் பாடலின் மெட்டில்....
வானம்விட்டு வந்தானோ ? மண்ணுக்குள்ள நின்னானோ ?
வார்த்தையால கட்டிப்போட்டு அவுக்காம போனானோ ?
ஞானஞ்சொல்லித் தந்தானோ யாருகிட்ட கேட்டானோ ?
ஞாலமெலாம் வாய்பொளக்க நாளும்பாடி வெச்சானோ ?
ஊனமுற்ற பேர்கள உசுப்பிவிடும் பாட்டுல,
ஊருக்குள்ள கேக்குற உற்சாகக் கூத்துல,
தானும்வந்து நிக்குறானடி - என் கண்ணம்மா
தமிழால சொக்குறோமடீ !
பாட்டுபாடி வந்தானே பாடமெலாஞ் சொன்னானே
பக்குவமா பக்தியோடு பலசேதி தந்தானே !
ஆட்டம்போட வெச்சானே அமையாக வெச்சானே !
ஆடி அடங்கிப்போகும் அர்த்தமெலாஞ் சொன்னானே !
கூட்டஞ்சேக்க பாக்கல ! கொள்கயெதும் பேசல !
கூட்டாளி யாகல ! குடுக்காம போகல !
நாட்டுக்குள்ள நிக்குறானடி - என் கண்ணம்மா
நாமபாத்து சொக்குறோமடீ !
கண்ணனுக்கு தாசனா ! கவிதைக்கெல்லாம் ராசனா !
கதசொல்லும் பாட்டுகளக் காலமெலாம் வீசுனான் !
வண்ணத்தமிழக் கொஞ்சுனான் ! வரிவரியாக் கொஞ்சுனான் !
வாழ்க்கையோட தத்துவத்த வாழ்ந்துகிட்டே பாடுனான் !
கிண்ணத்தையும் மறக்கல ! கீதையையும் மறக்கல !
கீழிருந்து வந்தவன் மறுபடியும் விழுகல !
எண்ணத்துல நிக்குறானடி - என் கண்ணம்மா
எழுத்தால சொக்குறோமடீ !