மௌனம் திறந்து
வார்த்தைகள் மௌனம் திறக்கின்றன.
வஞ்சகங்களுக்கு எதிரான
கோபச் சீறலாகவும்
கொள்கைச் சாரலாகவும்
ஆதிக்க மீறலாகவும்
அச்சத்தின் தூறலாகவும்
ஆதங்கத்தின் பாடாகவும்
விரக்தியின் சூடாகவும்
வெளிச்சத்தின் கோடாகவும்
ஆசை நிராசைகள்
கனவின் தோல்விகள்
அதிகாரத்திற்கு எதிரான கேள்விகள்.
ஆறுதல் வருடல்கள்.
அன்பின் கொஞ்சல்கள்,
ஒன்றுக்கும் உதவாத குப்பைகள்
குண்டுமணிகள்.
புலம்பல்கள், கூக்குரல்கள்
அசிங்கங்கள், ஆபாசங்கள்,
இப்படி இப்படியாக
எத்தனை விதமாக
வார்த்தைகள் வருகின்றன.
இந்தக் காற்று மண்டலத்தைக்
கௌரவப் படுத்திய
கர்வப் படுத்திய
வார்த்தைகளும் உண்டு.
அசிங்கப் படுத்திய
வார்த்தைகளும் உண்டு.
மூளையின் அடுக்குகளில்
சிந்தனைப் பிடிகரண்டியால்
செய்தி சேகரிக்கும் முயற்சியில்
வார்த்தைகள் பருந்துகளாய்
வட்டமிடுகின்றன.
கொத்திக் கொண்டுபோய்
குதறிப் போட்டுவிடலாம்.
எச்சரிக்கையாய் இருக்கிறேன்.
சரியான இணை தேடுகிறேன்.
ஓர் உண்மைக் காதலனாய்
வார்த்தை
சிந்தனையை உச்சி மோந்து
கட்டியணைக்கும் தருணத்திற்காகக்
காத்திருக்கிறேன்.
இந்தக் காத்திருப்பில் தான்
என் கவித்துவம் நிமிர்கிறது.
சூரியனைப் பிரசவிக்கும்
அவஸ்தையில்
மெழுகுவத்திகளைத்
தள்ளி விடுகிறேன்.
கால கர்ப்பத்தின்
கவித்துவப் பிரசவம்
கனவுதாசன்.
பட்டாம்பூச்சியை
கையைப் பொத்திப் பிடிப்பதுபோல்
ஒரே ஓர் ஒற்றை வார்த்தையில்
கவிதையைப் பிடித்துவிடத்
துடிக்கும் தீவிரவாதி நான்!
சிந்தனைக் குகையின்
இருள் பிரதேசங்களில் பயணித்து
வசீகர, வார்த்தை மூலிகைகளைப்
பறித்து வருகிறேன்.
முட்களின் கீறலில்
ரத்தம் சொட்டச் சொட்ட
மூலிகைப் பறிக்கிறேன்.
மாளிகை, மைய மண்டபத்தில்
மஞ்சக் கட்டிலில் படுத்துறங்கி
கனவுத் துரட்டியில்
கவிதை பறிக்கிறவன் இல்லை நான்.
வாழ்வின் விலாசங்களையும், விசாலங்களையும்
விசாரிக்கிறவன் நான்.
கவிதையில் ஓவியத்தையும், சிற்பத்தையும்
உருவாக்க வந்தவன் இல்லை நான்.
உயிரை உருவாக்க வந்தவன் நான்.