தயக்கமென்ன தலைவியே --- தரவு கொச்சககக் கலிப்பா -- மரபு கவிதை
தயக்கமென்ன தலைவியே !!! --- தரவு கொச்சககக் கலிப்பா -- மரபு கவிதை .
தயக்கமென்ன தலைவியேயுன் தளிர்நடையைப் பயின்றிடவே
மயக்கமென்ன மொழிவாயோ மதுரசமே மலர்முகமே !
வியக்குமடி உனைக்கண்டு விண்ணுலக விடிவெள்ளி
முயல்போன்றே தாவியெனை முழுதாக அணைத்திடுவாய் !
கலைமகளும் உன்னிடமே கற்றிடுவாள் கலைபலவும்
மலைமகளும் உன்னிடமே மற்போரைத் தெரிந்திடுவாள்
அலைமகளும் உன்னிடமே அளித்திடுவாள் செல்வத்தை .
தலைமகளும் நீயடியோ தலைவனடி நானடியோ !!
மீன்போன்ற கண்களினால் மின்சாரம் பாய்ச்சுகின்றாய்
கான்மீதில் நிற்கின்றேன் காரிகையே அறிவாயோ !
மான்போன்ற துள்ளோட்டம் மதிபோன்ற வெள்ளோட்டம் .
யான்செய்த பெரும்பேற்றை யாரிடம்தான் சொல்லுவது !!!
செந்தமிழே அழைக்கின்றேன் செவ்விதழைத் திறவாயே
பைந்தமிழும் கண்டுநாளும் பரவசத்தைத் தான்பெறுமே .
தீந்தமிழால் காதலினைத் தித்திக்கச் சொல்வாயே !
பூந்தேனே வண்டாகி புவிமகளைச் சுற்றிடுவேன் !!
தயங்காதே என்தேவி தரைபார்த்து நடைபழகு .
நயமாக நாணத்துடன் நளினமாக என்னருகில்
பயின்றிடுவாய் மென்நடையைப் பசுமைகீதம் பாடிடவே
முயன்றிடுவாய் தலைவிநீயும் முத்தத்தை பரிசாக்க !!!
தோழியுடன் எந்தலைவி தோகைமயில் எழிலழகி
ஆழியுமே அலைகளினால் ஆர்ப்பரிக்கும் ஆசையுடன்
வாழியவே என்னுடனே வாழ்ந்திடுவாய் பலர்போற்ற .
யாழிசையும் மீட்டுகின்றேன் யாங்கணுமே உன்நினைவே !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்
படைப்பு :- சொந்த படைப்பு .