பாட்டியின் வயல் - பாகம் 1

எனது பாட்டிக்கு ஒரு வயல் இருந்தது. பத்து சில்லறை ஏக்கரில்!
அவளது கல்யாணத்தின்போது ஸ்திரீதனமாக கிடைத்ததும், வாரிசுரிமை அவகாசத்தில் கிடைத்ததுதான் அது.
தென்னை தோப்பு, ரப்பர் தோட்டம், வயல்கள் என்று இவள் பங்குக்கு கிடைத்த பல்வேறு சொத்துக்களில் அந்த வயலும் ஒன்று.
பாட்டி தனது பெண் மக்களான எனது உம்மா மற்றும் பெரியம்மா சின்னம்மாக்கு கல்லியாணங்களின் போது அவர்களுக்கு ஸ்திரீதனமாக கொடுத்தது போக வயலில் ஒரு மூன்று சில்லறை ஏக்கர் மட்டும் மீதி இருந்தது! அதை பாட்டி பாட்டத்துக்கு விட்டிருந்தாள்.
சில வருடம் சென்றது. பாட்டம் பார்த்துக் கொண்டிருந்தவனோடு ஒரு வில்லங்கம் ஏற்பட பாட்டம் ஒழித்து வயலை வேறு பாட்டம் கொடுக்க முடிவு செய்தாள் பாட்டி.
புதிய பாட்டம் கொடுக்க ஆள் தேட பல தடங்கல்கள் ஏற்பட்டு நாட்கள் கடந்து கொண்டே இருந்தால் அடுத்த உழவு..நடவு மற்றும் கிருஷிக்கான நாட்களும் கடந்து பருவம் சென்றுகொண்டே இருந்தது.
பருவமழையும் தொடங்கி பக்கத்திலுள்ள வயல்களெல்லாம் பயிரேறிக்கொண்டிருக்க இந்த வயல்மட்டும் வெறுமனே காய்ந்து கிடந்தது.
நான் ஒருநாள் வயல்பக்கமாகப் போனேன்! பாட்டியின் வயலில் கிருஷி செய்து கொண்டிருந்த பழைய பாட்டக்காரனை கண்டேன். மனசுல ஒரு எண்ணம் வர அவரிடம் சும்மா ஐடியா கேட்டேன்.
"என்ன தாசு பக்கத்து வயலெல்லாம் கிருஷி போட்டாச்சு. நம்ம வயலு மட்டும் சும்மா கிடக்கே."
"மோலாளி என்ட்ட பணமில்லே. பருவமும் தப்பியாச்சு. இனி கிருஷி செய்தா நட்டம்தான் வரும்."
அவன் இப்படி சொன்னதும்.. சரி
நமக்கே கிருஷி செய்தால் என்ன என்று ஒரு எண்ணம் மனதில் தோன்ற..
"தாஸு நான் பணம் இறக்குறேன். கிருஷி இறக்குவோமா.?
"மோலாளி இனி மேல் உழுது பயாரேற்றினா என்ன ஆகும்ணு சொல்ல முடியாது. மத்தபடி நம்ம இட்டம்போல செய்யட்டும்"
என்றான் அவனும்!
"செரியப்பா, நான் கொஞ்சம் பணம் புரட்டி இதில் எறங்கிப் பாக்குறேன்.நீ ஆலோசனைகள் சொல்லித்தா.லாபநட்டம் என்னாகுதுண்ணு பாத்துருவோமே!"
"உத்தேசம் எவ்வளவு பணம் தேவயிரிக்கும் சொல்லு."
"உத்தேசமா மூணு ஏக்கறுக்கு ஆறாயிரம் இல்லாட்டி ஏழாயிரம் வரை ஆவலாம்" (1979/80 நிலவரப்படி)!
இறுதியில் காரியத்தில் இறங்க தீருமானிச்சுட்டேன்!
பணம்?
உம்மாவிடமும் தங்கச்சியிடமும் இருந்து நகைகளை வாங்கி பேங்கில் கடன் வெச்சி ஓரளவு சமாளித்து தேத்திவிட்டேன் தேவையான பணத்தை!
இனிதான் சுவாரசியமே!
கோழிப்போர்விளை ப்ளாக் ஆபீசில் போய் விவசாய அதிகாரியைப் பார்த்து (எல்லாம் நம்ம பாட்டக்காரன் தாசின் ஆலோசனைப்படிதான்) பேசி தேவையான விதை நெல்லுக்கு ஏற்பாடுசெய்தேன்! அந்த ஆபீசர்..
"என்னதம்பி இப்பவந்து விதநெல் வாங்குறீங்க.." என்று ஆச்சரியப்பட ,நான் விவரங்களை சொன்னேன்!
"உங்க துணிச்சல் எனக்கு பிடிச்சிருக்கு தம்பி. என்ன உதவி வேணுமுனாலும் என்ன வந்து பாருங்க. உங்களுக்கு வாழ்த்துக்கள்." என்றார்!
உழுவதற்கு ஆளும் கலப்பையும் மாடுகளும் வாடகைக்கு எடுக்கப்போனால்,
உழவு சீசன் முடிந்துவிட்டதால்
அவர்கள் எல்லோரும் வேறு வேலைகளுக்குப் போய்விட்டனர். பிறகு தேடித்தேடி பரைக்கோட்டிலிருந்து ஒரு பார்ட்டியை ஏற்பாடு செய்து அட்வான்சு கொடுத்துவிட்டு வந்தோம்.
அட்வான்சு வாங்கியவன் சொன்னபடி மறுநாளே வந்து உழவு வேலை தொடங்கி மூன்று நாளில் ஒருவழியாக முடித்து விட்டான்.
தண்ணி பாச்சிய வயலில் காளைகள் பாய்ந்து ஓடுவதும்
பக்கத்து வயல்களிலெல்லாம் ஞாறுபாவி நாத்தும் நட்டு பயிர்கள் சிறிது தலையும் உயர்த்திகாட்ட இந்த வயல்மட்டும் தனியாக தெரிந்ததும் நல்ல காட்சியாக இருந்தது.
மறுநாள் வயலை சமப்படுத்தி விதநெல்ல அடுத்தநாள் விதைக்க தீர்மானித்தோம்.
தாஸு பாட்டக்காரன் என்னிடம்
"மோலாளி நாளைக்கு வெளுக்குதுக்கு முன்னமே வந்துரணும்.. உறங்கிடபடாது"
"சரி நான் கரெக்டா வந்துரலாம்"
இரவு எனக்கு தூக்கமே வரல்லே.. மறுநாள் அதிகாலைல சொன்னபடி நான் வயலுக்கு வந்து விட்டேன்.
கொஞ்சம் விதநெல்லை என்கையில் தாசு தந்துவிட்டு
"மோலாளி ஆண்டவர வேண்டிகிட்டு இந்த வெதநெல்ல தூவணும்."
நானும் அதை கையில் வாங்கி,
"யா அல்லாஹ்.. பருவம் தப்பி பயிரிடுகிறேன் நீயே காவல்." என்று மனதில் வேண்டியபடி விதையை தூவினேன்!
சில நாட்களில் விதை முளைத்து ஞாறுபுடுங்க வேண்டிய நாளும் வந்தது!
அந்த வேலைக்குரிய பெண்களெல்லாம் வேறு வயல்களில் களைபறிப்பு வேலைக்குப்போய்விட மீண்டும் பிரச்சினை!
எப்படியோ பேசி ரண்டுநாள் கழிந்து அவர்களும் வேலைக்கு வந்து சேர்ந்தனர்.
நாத்துநட்டு முடிந்து நீர்பாய்ச்சி உரமெல்லாம் போட்டாச்சு..
பயிரும் தளதளவென்று வளர்வதை நாள்தோறும் போய் கவனித்து வருவதும் கனவு காண்பதும் தொடர்ந்தது...
அது ஒரு சுகமான அனுபவம்தான்!
இப்படியே தொடர ஒருநாள் நான் தாசிடம் கேட்டேன்..
"இப்போ பாத்தபொறவு சுமாரா எவ்வளவு விளச்சல் நமக்கு கிடைக்குமுணு நினைக்கிற?"
"மூணு மேனிண்ணா ஏக்கருக்கு முப்பது கோட்டைக்கு குறையாம கிடைக்கும். ஒரளவு ஞாயமான வெளச்சலுண்ணா இருபது கோட்டை விளையும்!"
மனசுல சில கணக்குகள் கூட்டிகழிச்சு பாத்தேன். ஒண்ணும் சரியாவரல்லே.
மெல்ல மெல்ல நீண்ட இலைகள் வெளிவந்து பயிரும் உயர்ந்து காற்றில் ஆடத்துவங்கிய காட்சியில் மனம் லயித்து சந்தோசத்தில் இருக்கும்போது வந்தது அடுத்த பிரச்சினை..!
பயிரின் தண்டுகளில் என்னவோ ஒரு புழுவின் தாக்குதல். 'நெட்டுப்புழு'வாம் அதன் பெயர். கவனிக்காமல் விட்டுவிட்டால் மொத்த பயிரையும் காலி பண்ணிவிடும்.
எம்மனசுக்குள்ளே கலக்கம் கொடுத்துட்டுது..
ஜுரத்தில் துடிக்கும் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு ஆசுபத்திரிக்கு ஓடும் தாயின் மனநிலையில் ஓடோடிச் சென்றேன் பிளாக் ஆபீசுக்கு..
நேரே அந்த வேளாண்மை அதிகாரியைக் கண்டு விசயம் சொன்னேன்!
"பயப்படாதீங்க தம்பி! அதுக்கு மருந்தடிச்சாபோதும்.அதுக்குரிய மருந்தும் ஆளும் இங்கேயே உண்டு. பணம் செலுத்தினால் போதும். நீங்க உடன பணத்த ரெடிபண்ணி கட்டுங்க.. நான் ஆள அனுப்பி வக்கிறேன்."
வீட்டுக்கு ஓடினேன் எப்படியோ முன்னூறு ரூபாய் புரட்டி மருந்துக்கும் அடிகூலிக்கும் சேர்த்து கட்டிட்டேன். மறுநாளே அந்த ஆபீசர் சொன்னமாதிரி ஆள அனுப்பி அந்தபணி முடிந்தது!
நாட்கள் செல்லச்செல்ல பயிர் வளர்ந்தது... ஒருநாள் ஒரேயொரு பயிரில் ஒருகதிர் வெளிவர கண்டேன்.. அப்பாடா.. மொதகுழந்தை பெத்தவளைபோல மனசுல ஒரே சந்தோசம்..
தொடர்ந்த சில நாட்களில் எல்லா பயிரிலும் கதிர்கள் வெளிவந்து கொத்தாக விளையத்தொடங்கியது.
ஆனால் பாட்டியின் பக்கத்து வயல்களெல்லாம் நல்லா விளைஞ்சு அறுவடை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.
நமக்கு இன்னும் ஒருமாதம் இருந்தது அறுவடைக்கு..
பச்சைநிறக் கதிர்கள் முதிர்ந்து பொன்னிறம் பெற்று பயிர் தலைசாய்த்து விளைய தொடங்கி காற்றில் அசைந்தாட ஆரம்பித்தது.
ரெம்ப கஷ்ட்டபட்டாலும் நெல்லு விளஞ்சி நிக்கிற வயல பாக்கம்போ சந்தோசமா இருந்தது.
சிலநாட்களில் அறுவடை செய்யலாமுனு முடிவு செஞ்சு இருந்தப்போ வந்தது ஒரு பெரும் பிரச்சினை...
(அதை பாகம் 2ல் சொல்கிறேன்..)