விவசாயிகளின் நிலை
விவசாயி
இவன்
தோள்த் தளத்தில்
மட்டும் பச்சை
எடுப்பாய்த் தொங்குகின்றது
கதிர்கள்
இவன்
பால் நிலத்தில்
பச்சைக்காகப் பிச்சை
எடுத்துத் தொங்குகின்றது
இவன்
எப்பொழுதும் வள்ளலாராகவே
வாழ்ந்துகொண்டிருக்கின்றான்
வாடிய பயிரைக்கண்டு
இவன் உரு
பிடித்து அறுத்துக்கொண்டிருந்த
அரிவாளை இன்று
துரு பிடித்து
அறுத்துக்கொண்டிருக்கின்றது
ஏர் பிடித்துப்
பழுத்த இவன்
கைகள் மழைக்காக
கடவுளை வேண்டி
தேர் பிடித்து
இழுத்துக்கொண்டிருக்கின்றது
களைகளை எடுக்கும்போது
சற்றும் கலைக்காத இவன்
மனதை சிறிது காற்றடித்துக்
கலைத்தது
எடுத்த களை
மீண்டுமல்லவா முளைத்தது
இந்த
வீரிய விவசாயிக்கு
சூரிய ஒளி மட்டுமே
தடையின்றி கிடைக்கின்றது
இவன் நிலத்தில் மட்டும்
விதைத்தவனோடு
விதைகளும் உறங்குகின்றன
பள்ளிக்குச் செல்ல அழும்
குழந்தையைப் போல்
இவன் கொள்ளிக்குச் செல்ல
அழுவுகின்றான்
பூச்சிக் கொல்லிகள்
பூச்சியைக் குறைப்பதைப்போல்
அதன் விலை
இவன் மூச்சினைக் குறைக்கின்றன
ஆறுகள் எல்லாம்
இவனுக்கு ஆறுதல்
மட்டுமே சொல்ல வந்தன
வருணன் எனப் பெயர்
கொண்டும்கூட
இவன் நிலத்திற்கு
வராமல் போனது ஏனோ ?
இரவில்
முயல் வந்து விட்டுவைத்ததை
பகலில் புயல் வந்து வெட்டிச் சாய்த்தது
இவன்
எருதை நம்பி
உழைப்பவன்
விருதை நம்பி அல்ல
பயிர் விளைய
மறுக்கும் நிலத்திற்கு
தன் உயிரை உரமிட்டான்
பயிரை அறுவடை
செய்யாதபோது
ஆறடி கயிறை
அறுவடை செய்பவன்
இந்த விவசாயி